இந்தியாவில் அரசியல்சாசனம் அமலுக்கு வந்த ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி கடமைப் பாதையில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை பறக்கவிடுகிறார். குடியரசுத் தலைவராக பதவியேற்றபிறகு, முதல்முறையாக அவர் குடியரசு தின விழாவில் கலந்துகொள்கிறார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர். மேலும், சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா எல்-சிசி பங்கேற்கிறார். இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவு ஏற்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், குடியரசு தின விழாவில், முதல் முறையாக எகிப்து அதிபர் ஒருவர் கலந்துகொள்கிறார்.
இந்த விழாவையொட்டி கோலாகல அணிவகுப்பு நடைபெறுகிறது. விஜய் சவுக் பகுதியிலிருந்து கடமைப் பாதை வழியாக செங்கோட்டை வரை இந்த அணிவகுப்பு நடைபெறும். ராணுவம், கடற்படை, விமானப் படையினர் அணிவகுப்பில் பங்கேற்பர். எகிப்தைச் சேர்ந்த 120 வீரர்கள் கொண்ட குழுவும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கிறது. இதேபோல, பாதுகாப்புப் படையினரின் சாகசங்களும் அரங்கேறுகின்றன. தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்கள் சார்பிலும், 6 அமைச்சகங்கள் சார்பிலும் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் பெண் சாதனையாளர்களைக் குறிப்பிடும் வகையில், மாநில அரசின் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அணிவகுப்பை பார்வையிட வருவோருக்கு கியூஆர் குறியீடு அடிப்படையிலான அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேபோல, மாநிலங்களில் நடைபெறும் விழாக்களில் ஆளுநர்கள் தேசியக் கொடியை பறக்கவிடுகின்றனர். சென்னையில் காமராஜர் சாலையில் காந்தி சிலை முன்பு வழக்கமாக குடியரசு தின விழா கொண்டாடப்படும் நிலையில், மெட்ரோ ரயில் பணி காரணமாக இந்த ஆண்டில் உழைப்பாளர் சிலை அருகே நடைபெறுகிறது. இதன்படி, காலை 8 மணிக்கு மூவர்ணக் கொடியை ஆளுநர் பறக்கவிடுகிறார். சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்.
முப்படையினர் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பை ஆளுநர் ஏற்றுக் கொள்கிறார். மேலும், பள்ளி, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். நேப்பியர் பாலம் வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். குடியரசுத் தினத்தையொட்டி, சென்னையில் விழா நடைபெறும் பகுதி மற்றும் முக்கிய இடங்களில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India, President Droupadi Murmu, Republic day, RN Ravi