உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் வசிக்கும் ஜாவீத் அகமது என்பவரின் வீட்டை அரசு சட்டத்திற்கு விரோதமாக ஆக்கிரமித்து கட்டிய குற்றத்திற்காக இடித்து தள்ளியது. இந்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மதக் கலவரத்திற்கு மூளையாக இருந்தவர் என்ற குற்றச்சாட்டில் உத்தரப் பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து பிரயாக்ராஜ் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் நாயகம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது தொடர்பாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டது. குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ், சஹ்ரான்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பெரும் கலவரம் வெடித்தது. இந்நிலையில், கலவரக்காரர்களை கடுமையாக ஒடுக்க அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், இந்த கலவரம் சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச காவல்துறை இதுவரை 306 பேரை கைது செய்துள்ளது. நேற்றே இரண்டு சஹரான்பூர் பகுதியில் இருவரின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்த நிலையில், இன்று கலவரத்திற்கு மூளையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜாவீத் என்பவரின் வீடும் இடிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு ஆளும் பாஜக மற்றும் வலதுசாரி தரப்புகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதேவேளை, காங்கிரஸ் எம்பி சசி தரூர், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இந்த செயல் சட்டத்திற்கு புறம்பானது எனக் கூறி விமர்சித்துள்ளனர்.
இதையும் படிங்க:
பெண் முகத்தில் 118 தையல் - பாலியல் சீண்டலை எதிர்த்ததால் நேர்ந்த கொடூரம்
அதேபோல் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் கடந்த வெள்ளிக்கிழமை பெரும் கலவரம் வெடித்தில் 2 பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர். அங்கு இரு நாள்களாக பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில். சுமார் 2,500 காலல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் 33 மணிநேரத்திற்குப் பின் இணைய சேவை மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், மேற்கு வங்கம், தெலங்கானா, டெல்லி, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இரு நாள்களுக்கு முன் மோதல் ஏற்பட்ட நிலையில் தற்போது நிலைமை சீராகியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.