Home /News /national /

நோ சொன்ன சரத் பவார் - முடிவு எட்டப்படாமலேயே முடிந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்

நோ சொன்ன சரத் பவார் - முடிவு எட்டப்படாமலேயே முடிந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்

மம்தா அழைப்பை ஏற்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை

மம்தா அழைப்பை ஏற்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை

காந்தியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா ஆகியோரை வேட்பாளராக நிறுத்த மம்தா பானர்ஜி விருப்பம் தெரிவித்தாக கூறப்படுகிறது.

    நாட்டின் புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மம்தா பானர்ஜி 17 எதிர்க்கட்சி தலைவர்களுடன் டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவர் பிரிவினை சக்திகளை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படு, அதற்காக பொது வேட்பாளர் ஒருவரை நாம் நிறுத்த வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 22 கட்சிகளுக்கு கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார்.

    இந்த ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தை, ஆம் ஆத்மி கட்சி, சிரோமணி அகாலிதளம், தெலங்கானா ராஷ்டிரிய சமதி, பீஜு ஜனதாதளம் ஆகிய கட்சிகள் புறக்கணித்தன. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதிநிதிகளாக மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் பங்கேற்றனர். திமுக சார்பில் டிஆர் பாலு, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி, ஓமர் அப்துல்லா உள்ளிட்ட பல தலைவர்களும் பங்கேற்றனர்.

    சரத் பவாரை குடியரசு தலைவர் தேர்தலுக்கான பொது வேட்பாளராக முன்னிறுத்த மம்தா விரும்பிய நிலையில், அதை சரத் பவார் மறுத்துவிட்டார். இதை அடுத்து காந்தியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா ஆகியோரை வேட்பாளராக நிறுத்த மம்தா பானர்ஜி விருப்பம் தெரிவித்தாக கூறப்படுகிறது.


    எனவே, வேட்பாளர் தேர்வு குறித்து முடிவுகள் ஏதும் எட்டாமலேயே ஆலோசனைக் கூட்டம் இன்று நிறைவுபெற்றது. அடுத்த ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: 104 மணிநேரப் போராட்டம்.. ஆழ்துளை கிணற்றில் இருந்து உயிருடன் மீண்ட சிறுவன்

    இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது வேட்பாளரை வரும் 18ஆம் தேதி தேர்வு செய்யும் எனக் கூறியுள்ளது. இதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்க்கட்சிகளான மம்தா பானர்ஜி, காங்கிரஸ் உள்ளிட்ட தலைவர்களிடம் தொடர்பு கொண்டு ஒருமித்த கருத்துடன் பொது வேட்பாளரை அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Mamata banerjee

    அடுத்த செய்தி