கடந்த 55 ஆண்டுகளாக மேற்குவங்க மாநிலத்தின் வளர்ச்சி முடங்கியுள்ளது: பிரதமர் நரேந்திர மோடி

கடந்த 55 ஆண்டுகளாக மேற்குவங்க மாநிலத்தின் வளர்ச்சி முடங்கியுள்ளது: பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் மோடி

மேற்குவங்க மாநிலத்தின் வளர்ச்சி கடந்த 55 ஆண்டுகளாக முடங்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

 • Share this:
  மேற்குவங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், கரக்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், வெள்ளிக்கிழமை இரவு வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் 55 நிமிடங்கள் முடங்கியதால் பலர் அவதியடைந்ததாகவும், ஆனால் மேற்குவங்கத்தின் வளர்ச்சி கடந்த 55 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மாற்றம் உருவாக வேண்டும் என்ற மக்களின் மனநிலையை தாம் நன்றாக உணர்வதாக அவர் குறிப்பிட்டார். திறமை இல்லாத அரசால் மேற்குவங்கத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

  வரப்போகும் சட்டமன்றத் தேர்தல் முதல்வரை மாற்றும் தேர்தல் மட்டுமல்ல என குறிப்பிட்ட பிரதமர், தங்க வங்காளத்தை உருவாக்கும் தேர்தல் எனவும் கூறினார். 5 ஆண்டுகள் ஆட்சி புரிய பாஜகவுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்றும், மேற்குவங்கம் வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.

  மேலும் படிக்க...  உள்ளூர் விமான சேவை கட்டணம் உயர்வு?

  மேற்குவங்க மாநிலம் ஹால்டியாவில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் நரேந்திர மோடி அழித்துவிட்டதாக விமர்சித்தார். ஹால்டியா துறைமுகத்தை விரைவில், மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்த்துவிடும் எனவும் கூறினார். இதற்கிடையே, வங்காள திரை நட்சத்திரங்கள் நீல் பட்டாச்சாரியா, ட்ரினா பட்டாச்சரியா ஆகியோர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர்.  இந்நிலையில் அசாம் மாநிலத்திலும் பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள திக்போய் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, உரிய ஆலோசனையின்றி வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றே தீர வேண்டும் என்றும் ராகுல்காந்தி வலியுறுத்தினார்.

  கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய், ஏழை மக்களுக்கு 5 லட்சம் வீடுகள், சபரிமலையின் பாரம்பரியத்தை பாதுகாக்க சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: