நேரில் கண்ட சாட்சி எனக் கூறி பசுவை காவல்நிலையம் அழைத்து வந்த உரிமையாளர்!

பசு

பசுவை கொண்டு வந்து காவல்நிலையத்தில் கட்டி வைத்ததால் காவலர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

  • Share this:
கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்யக் கோரும் விதமாக பசு மாட்டை காவல்நிலையத்தில் கட்டி வைத்து நூதன போராட்டத்தில் ஒருவர் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி மாநில எல்லையில் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஹரியானாவின் ஆளும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனநாயக ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏவான தேவேந்திர சிங் பப்லி என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள எம்.எல்.ஏ வீட்டினை முற்றுகையிட்டு விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக விவசாய சங்கங்களின் தலைவர்களான விகாஸ் சிசார் மற்றும் ரவி ஆசாத் ஆகிய இருவரை காவல்துறையினர் கடந்த புதனன்று கைது செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள விவசாய சங்க தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், விவசாயிகளை விமர்சித்த எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும் சதார் காவல்நிலையம் முன்பு விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் விவசாயிகள் தொடர்பான விமர்சனத்திற்கு எம்.எல்.ஏ மன்னிப்பு கோரினார்.

Also Read:   இந்தியாவில் இன்று முதல் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி சோதனை?

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பசு மாட்டை கொண்டு வந்து காவல்நிலையம் முன்பு கட்டி வைத்தார். இந்த பசு தான் விவசாய சங்கத் தலைவர்கள் கைது செய்ததை பார்த்த 41வது சாட்சி என கூறிய அந்த நபர், பசுவுக்கான தீவனம், தண்ணீர் போன்றவற்றை காவலர்கள் தான் செய்து தர வேண்டும் எனவும் கூறினார். பசு மாட்டை கட்டிப்போட்ட இடத்தில் அவர் தண்ணீரையும், புல்லுக்கட்டுகளையும் கொண்டு வந்து போட்டார்.

இது குறித்து அந்த நபர் கூறுகையில், இந்த அரசு பசுவை தெய்வமாக பார்ப்பதாகவும், பசு நேசர்களுக்கான அரசு என்றும் கூறிக்கொள்கிறது, எனவே அந்த புனிதமான பசுவை கொண்டு வந்திருக்கிறேன், அந்த பசு நல்ல புத்தியை இந்த அரசுக்கு கொடுக்கட்டும் என கூறினார்.

Also Read:   நவ்ஜோத் சிங் சித்துவுக்கு துணை முதல்வர் பதவி தர முடியாது என கைவிரித்த அமரீந்தர் சிங் - பஞ்சாப் காங் உட்கட்சி பூசல்!

பசுவை கொண்டு வந்து காவல்நிலையத்தில் கட்டி வைத்ததால் காவலர்களும் அதிர்ச்சியடைந்தனர். இது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்றிரவு இரு விவசாய சங்கத் தலைவர்களையும் பிணையில் விடுவித்தது காவல்துறை.

 

 
Published by:Arun
First published: