#ModiSpeaksToNews18 : 2014-ம் ஆண்டைவிட பெரிய வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைப்போம் - பிரதமர் மோடி

நான் அனைத்து வாக்காளர்களும் காலை முதல் வேலையாக வந்து வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். முதலில் வாக்கு பின்னரே காலை உணவு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்

news18
Updated: April 10, 2019, 10:41 AM IST
#ModiSpeaksToNews18 : 2014-ம் ஆண்டைவிட பெரிய வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைப்போம் - பிரதமர் மோடி
மோடி
news18
Updated: April 10, 2019, 10:41 AM IST
2014-ம் ஆண்டைவிட பெரிய வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைப்போம் என்று நியூஸ் 18 உடனான பிரத்யேக நேர்காணலில் பிரதமர் மோடி பேசினார்.

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த சிறப்பு பேட்டியில், புல்வாமா தாக்குதல், மக்களவை தேர்தல், காஷ்மீர் பிரச்னை, ரஃபேல் விவகாரம், 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், நம்பி நாராயணன், சக்ஜுதா எக்ஸ்பிரஸ், ரெயில் குண்டு வெடிப்பு ஆகிய பல விவகாரங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

ராகுல் ஜோஷி : இது எங்களுக்கு நீங்கள் அளிக்கும் 2வது நேர்காணல். இந்த நேர்காணல் எங்கள் குழுமத்தின் 20 சேனல்களின் வழியாக 70 கோடி மக்களை சென்றடைய உள்ளது.

பிரதமர் மோடி : அனைத்து பார்வையாளர்களுக்கும் எனது நன்றியும், நவராத்திரி வாழ்த்துக்களும்.

ராகுல் ஜோஷி : பாஜக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. எனது முதல் கேள்வி, தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்ன?

பிரதமர் மோடி : நாட்டை தொடர்ந்து ஆட்சி செய்வதை இலக்காக கொண்டுள்ள, ஒரு பொறுப்பான அரசியல் கட்சி வெளியிட்டுள்ள முதிர்ச்சித்தன்மை கொண்ட தேர்தல் அறிக்கை. முதல் முறையாக 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை முன்வைத்து தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம். அரசின் பொறுப்புத்தன்மை என்பது 5 ஆண்டுகளிலோ, இடைக்காலத்திலோ முடிவடைந்து விடக்கூடியது அல்ல என்பது இதன் பொருள். இதனை இதற்கு முன்பு எந்த கட்சியும் செய்ததில்லை. இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டான 2022ஆம் ஆண்டு என்ன செய்து முடிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோமோ, அதற்கான 75 திட்டங்களை கூறியுள்ளோம். அடுத்து, 2024-ம் ஆண்டு ஆட்சி நிறைவடையும் போது, இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ள 2047ஆம் ஆண்டுக்கான அடித்தளத்தை அமைத்து முடிக்க திட்டமிட்டுள்ளோம். இது கறுப்புப்பணத்தையும், ஊழலையும் எதிர்கொள்வதற்கான திட்டங்களையும் கொண்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு குறித்த அனைத்து அம்சங்களையும் தேர்தல் அறிக்கை பேசுகிறது. இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகள் ஏழைகளுக்கும், தலித்துகளுக்கும், அடித்தட்டு மக்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் எந்த நீதியையும் வழங்கவில்லை. அதில் வளர்ச்சிக்கான எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை. பெண்கள், இளைஞர்கள், மூத்த குடிமக்களுக்கு என்ன செய்யப்பட்டுள்ளது? விவசாயிகள், கிராமப்புற மக்களின் வாழ்வு எப்படி மாறியுள்ளது? எப்படி நவீன இந்தியாவை நாம் கட்டமைக்கப் போகிறோம்? வளர்ச்சிக்காக தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்த முடியும்? சாதாரண குடிமகனின் மேம்பாட்டுக்காக தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்தப் போகிறோம்? கடந்த 5 ஆண்டுகளில் விரக்தியின் உச்சத்தில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்க பாடுபட்டுள்ளோம். தன்னம்பிக்கைக்கான புதிய அத்தியாயத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். வீட்டுவசதி, மின்சாரம், தண்ணீர், சாலைகள் போன்ற சாதாரண குடிமகனின் தேவைகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றியுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் சாதாரண குடிமகனின் விருப்பங்களை நிறைவேற்ற பாடுபடுவோம்.

ராகுல் ஜோஷி : மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இருந்து, குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இருந்து உங்கள் தேர்தல் அறிக்கை எந்த விதத்தில் மாறுபட்டுள்ளது?

பிரதமர் மோடி : பெயரிலேயே வேறுபாடு இருக்கிறது. அவர்களுடையது அறிவிப்பு பத்திரம். எங்களுடையது உறுதி பத்திரம். அறிவுஜீவிகள் 2 கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளையும் ஒப்பிட வேண்டும் என விரும்புகிறேன். எங்கள் தேர்தல் அறிக்கையை எங்களது சாதனைகளை வைத்து மதிப்பிட வேண்டும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அவர்கள் செய்ய தவறியதை வைத்து மதிப்பிட வேண்டும். பல்வேறு கோணங்களில் இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. நாங்கள் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான பாதைகளை அமைக்கிறோம்.

நாங்கள் தீவிரவாதிகளுக்கு எதிராக உளவியல் ரீதியான போர் தொடுத்து வருகிறோம். அதில் நாங்கள் வெற்றியும் பெற்றுள்ளோம். ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தீவிரவாதத்தை மிருதுவாக அணுகுகிறது. ராணுவத்தின் மீதான அவர்களின் பார்வை, பாகிஸ்தானை ஒத்திருக்கிறது. இதனை எந்த தேசபக்தனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகாரத்தை பறிக்க வேண்டும் என அவர்களது தேர்தல் அறிக்கை பேசுகிறது. இது வீரர்களின் கைகளில் இருந்து ஆயுதங்களை பறிப்பதற்கு ஈடானதாகும். இது சரியா? இந்திய வீரர்கள் ஐ.நா. அமைதிப்படையின் அங்கமாக நீண்டகாலமாக உள்ளனர். ஐ.நா. அமைதிப்படையின் பணிகளுக்கு அதிகளவிலான வீரர்களை நாம் அனுப்புகிறோம். இந்திய வீரர்களின் ஒழுக்கமும், தொழில்பக்தியும் எப்போதும் போற்றுதலுக்கு உரியது. 60 ஆண்டுகள் வரை ஆட்சியில் இருந்த ஒரு கட்சி இதுபோல பேசுவது சரியானது அல்ல.

ராகுல் ஜோஷி : ஆயுதப்படைக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? கால நிர்ணயம் செய்து இந்த விவகாரம் கையாளப்பட வேண்டுமா?

பிரதமர் மோடி : முதலில் அருணாச்சல் பிரதேசத்தில் நாம் செய்ததை போல, ஆயுதப்படைக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்திற்கு அவசியமற்ற ஒரு சூழலை நாம் உருவாக்க வேண்டும். நாம் சில மாவட்டங்களில் இதனை நீக்கினோம். பின்னர் அதை சில மாநிலங்களில் இருந்து நீக்கினோம். 1980-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதைய அரசு தான் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனாலும் சட்டம் ஒழுங்கை நாம் பாதுகாக்கிறோம். அரசுக்கு தனது ஆயுதப்படைகளை பாதுகாக்கும் அதிகாரம் இருக்க வேண்டும். காஷ்மீரில் ஆயுதப்படைக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை அகற்றுவது, நமது வீரர்களை தூக்குமேடைக்கு அனுப்புவதற்கு சமமானதாகும். நமது வீரர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.

ராகுல் ஜோஷி : புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, பாலகோட் தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நான் உங்களை ரைசிங் இந்தியா நிகழ்ச்சியில் சந்தித்தேன். அந்த நேரத்தில் உங்கள் மனதில் இருந்ததை யாராலும் யூகிக்க முடியவில்லை. அதிகாலை மூன்றரை மணிக்கு தாக்குதல் செய்தி உங்களுக்கு கிடைத்துள்ளது. புல்வாமா பயங்கரவாத தாக்குதல் பாலகோட் விமானப்படை தாக்குதல் இதற்கு இடையிலான 15 நாட்களில் உங்கள் மன ஓட்டம் எப்படி இருந்தது?

பிரதமர் மோடி : புல்வாமா தாக்குதல் தினத்தன்றே பாகிஸ்தானும், பயங்கரவாதிகளும் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாக தெரிவித்தேன். என்னுடைய பேச்சு மற்றும் உடல்மொழியில் இருந்தே நான் என்ன நினைத்தேன் என நீங்கள் அறிந்து கொண்டிருக்கலாம். ஆனால் நான் முடிவெடுக்க எந்த அவசரமும் காட்டவில்லை. பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட அனைவரிடமும் தாக்குதலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆலோசித்தேன். புல்வாமா தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளை நமது படையினர் ஏற்கனவே கொன்றொழித்து விட்டனர். அது மிகப்பெரிய சாதனையாக இருந்தாலும், எனக்கு அது போதுமானதாக இல்லை. பயங்கரவாதம் பிறக்கும் இடத்தில் தாக்குதல் நடத்தாமல், அவர்கள் பாடம் கற்க மாட்டார்கள். உதாரணமாக மும்பை வெடிகுண்டு தாக்குதல், நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலின் போது நாம் எதிர்வினையாற்ற மாட்டோம் என பாகிஸ்தான் யுகித்தது. அது அவர்களுக்கு துணிச்சலையும் அளித்தது. இந்த முறை இனியும் பொறுக்க முடியாது என நாங்கள் நினைத்தோம். உரி தாக்குதலுக்கு பிறகு நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் போன்ற தாக்குதல் பொருத்தமாக இருக்காது என நினைத்தோம். வான்வெளி தாக்குதலே சிறந்தது என கருதினோம். எனவே வான்வெளி தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றோம். அனைவரின் ஆலோசனையையும், நம்பிக்கையையும் பெற்றே இந்த தாக்குதலை நடத்தினோம்.

ராகுல் ஜோஷி : முதலில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தினீர்கள், இப்போது பாலகோட் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளீர்கள். எனினும் லஷ்கர், ஜெய்ஷ் இ முகமது போன்ற அமைப்புகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு என்ன?

பிரதமர் மோடி : அண்மைக்காலமாக தீவிரவாத தாக்குதல்கள் குறைந்து வருவதை ஒப்புக்கொள்ள வேண்டும். புல்வாமா தீவிரவாத தாக்குதல் விதிவிலக்காக நடந்தது. பாதுகாப்புப்படையினர் பயங்கரவாதிகள் இடையே தான் துப்பாக்கிச் சண்டைகள் நடைபெறுகின்றன. இதிலும் பாதுகாப்பு படையினரே பயங்கரவாதிகளை தேடிச் சென்று தாக்குதல் நடத்துகின்றனர். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறுபவை இவை. பயங்கரவாதிகள் வந்து தாக்கிவிட்டு தப்பிச் சென்று விடுகின்றனர் என கூற முடியாது.

ராகுல் ஜோஷி : பாலகோட் தாக்குதல் நடைபெற்றதற்கான ஆதாரங்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேட்டு வருகின்றன. குறிப்பாக 250 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது தொடர்பாக கேட்கிறார்கள். நீங்கள் ஆதாரத்தை கொடுப்பீர்களா?

பிரதமர் மோடி : எதிர்க்கட்சிகளின் இத்தகைய பேச்சு எதிரிகளுக்கு ஊக்கமளிப்பதுடன் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி, பாதுகாப்பு படையினரை பலவீனப்படுத்தும். இதுபோன்ற நேரங்களில் பாதுகாப்பு படையினரின் பெருமையை நாம் ஒத்த குடிலில் பேச வேண்டும். இதற்கு முன் பல போர்களும், பல தேர்தல்களும் நிகழ்ந்திருக்கின்றன. அப்போதெல்லாம் எதிர்க்கட்சிகள் இப்படி பேசியனவா? இல்லை. பதவி பறிபோனது முதல், பதவிக்கு மீண்டும் வரத்துடிக்கும் காங்கிரஸ் கீழ்த்தரமான அரசியலை தற்போது கையில் எடுத்துள்ளது. அதனால் தான் இவ்வாறு பேசுகின்றனர். ஆதாரம் கேட்பவர்களுக்கு சொல்கிறேன். பாகிஸ்தானே இதற்கு ஆதாரம் தான். எதற்காக அவர்கள் 5 மணிக்கு எழுந்து ட்விட் செய்ய வேண்டும். நாம் அமைதியாகத் தானே இருந்தோம். அவர்களே ஆதாரத்தை கொடுக்கிறார்கள். பாலகோட் தாக்குதலை முதலில் இந்தியா அறிவிக்கவில்லை.

ராகுல் ஜோஷி : பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தானிடம் இருந்து நாம் எதிர்பார்ப்பது என்ன? இம்ரான்கானை பாகிஸ்தான் ராணுவம் கட்டுப்படுத்துகிறது. தேர்தல் ஆதாயத்துக்காக இந்தியா போரை விரும்புவதாகக் இம்ரான் கான் கூறுகிறார்?

பிரதமர் மோடி : பாகிஸ்தானின் எந்த ஒரு பேச்சையும் நம்ப இந்தியா தயாராக இல்லை. அந்நாட்டின் மீது யாருக்கும் நம்பகத்தன்மையும் இல்லை. அவர்களை எந்த ஒரு இந்தியரும் நம்பப்போவதில்லை. ஆனால் இங்குள்ள எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் குரலில் பேசுகின்றன. அதுவே கவலை கொள்ள வைக்கிறது. இந்தியாவில் 6 மாதங்களுக்கு ஒருமுறை தேர்தல்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. எனவே தேர்தலோடு பாலகோட் தாக்குதலை ஒப்பிடுவது தவறு.

ராகுல் ஜோஷி : சீனாவும் பாகிஸ்தானுடன் தொடர்பில் உள்ளது. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை, தனது வீட்டோ அதிகாரம் மூலம் 4 முறை தடுத்துள்ளது. சீனாவுடனான நம் அணுகுமுறை எப்படி இருக்கும்?

பிரதமர் மோடி : சீனாவுடன் நமக்கு அரசியல் ரீதியிலான தொடர்பும், வர்த்தக உறவும் உள்ளது. அங்கு நாம் முதலீடு செய்கிறோம். இந்தியாவில் சீனாவின் முதலீடுகள் உள்ளன. நம்முடைய தலைவர்கள் அங்கு செல்வதும், அந்நாட்டு தலைவர்கள் இங்கு வருவதும் வழக்கமாக உள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான எல்லை பிரச்னைகள் தற்போது வரை தீர்க்கப்படாமல் உள்ளன. இந்தியாவிடம் ஒரு திட்டம் உள்ளது. சீனாவிடம் ஒரு திட்டம் உள்ளது. இருதரப்புக்கும் வேறுபாடுகள் இருப்பதை இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த வேறுபாடுகள் பிரச்னையாக மாறாது என்று கருதுகிறோம். அவ்வாறு பிரச்னை ஏற்படும் போது உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடத்துகிறோம். இது தொடர் நிகழ்வாக உள்ளது. சர்வதேச விவகாரங்களில் இருநாடுகளும் தங்களுடைய சொந்த நிலைபாட்டை மேற்கொள்கின்றன. சில விவகாரங்களில் நாம் பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறோம். சில விவகாரங்களில் இஸ்ரேலை ஆதரிக்கிறோம். சில நேரங்களில் ஈரானையும், சில நேரங்களில் அரபு நாடுகளையும் ஆதரிக்கிறோம். ஒவ்வொரு நாடு தங்கள் நாட்டு நலனுக்காக சுயமான நிலைபாடுகளை எடுக்கின்றன. ஒரு காலத்தில் சர்வதேச அரங்கில், இந்தியாவை ரஷ்யா மட்டுமே ஆதரித்தது. மற்ற நாடுகள் அனைத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தன.

இன்று நிலைமை ஒட்டுமொத்தமாக மாறியுள்ளது. இப்போது பாகிஸ்தானுடன் சீனா மட்டுமே உள்ளது. சீனா நீங்கலாக ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுடன் நிற்கிறது. இந்த மாற்றத்தை புரிந்து கொள்ள வேண்டும். இதுவே நமது வெற்றிக்கான ஆதாரம்

ராகுல் ஜோஷி : சீனா தன் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திய பிறகு அவர்களுடன் பேசினீர்களா? தொடர்ந்து பேச்சு நடப்பதாக சொன்னீர்கள். மசூத் அசாருக்கு ஆதரவான சீனாவின் நடவடிக்கைக்கு பிறகும் பேச்சுவார்த்தை தொடர்கிறதா?

பிரதமர் மோடி : எல்லா பிரச்னைகளும் அனைத்து சந்திப்புகளிலும் விவாதிக்கப்படுகிறது. இந்த விவகாரமும் ஏற்கனவே பேசப்பட்டுள்ளது.

ராகுல் ஜோஷி : சீன பொருட்களை புறக்கணிப்போம், சீனாவுடனான வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என்ற முழக்கத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

பிரதமர் மோடி : உலகம் தற்போது இருமுனையாக இல்லை. இது உலகமயமாக்கலின் காலம். ஒவ்வொரு நாடும் தனித்தனியாக இருந்தாலும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. இங்கு சர்வதேச சட்டங்கள் உள்ளன. நாம் அனைவரும் உலக வர்த்தக மையத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.
ஒரு அரசு என்ற முறையில் நமது அதிகாரப்பூர்வ நிலைப்பாடு சர்வதேச விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுடன் இணைந்து உள்ளது, சீன பொருட்களை தடை செய்ய வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. நாம், ஊடகத்தினர் உட்பட அனைவரும் மக்களை வழிநடத்த வேண்டும்.

ராகுல் ஜோஷி : காஷ்மீர் பிரச்னை பயங்கரவாதத்துடன் இணைந்து உள்ளது. காஷ்மீர் வளர்ச்சியையும், நம்பிக்கையையும் விரும்புவதாக இதற்கு முந்தைய நேர்காணலில் கூறியிருந்தீர்கள். இப்போது காஷ்மீர் பிரச்னையை எப்படி பார்க்கிறீர்கள்?

பிரதமர் மோடி : இந்த பிரச்னை மிகப் பழையது. ஒரு காலத்தில் சர்தார் வல்லபாய் படேல் அணுகிய போது இருந்த சூழ்நிலை தற்போது இல்லை. அவர் இதற்கு தீர்வை கண்டறிந்தார். ஆனால் பண்டித ஜவஹர்லால் நேரு இந்த பிரச்னையை அப்படியே விட்டுவிட்டார். அப்போதிலிருந்து இது முரண்பாடாக மாறியது. அதனால் ஆயிரக்கணக்கான நமது வீரர்கள் உயிரிழந்தனர். புறக்கணிக்கப்பட்டதாக காஷ்மீர் உணரும் வகையிலான எதையும் இந்தியா செய்யவில்லை. ஆனால் காஷ்மீர் பிரச்சனையை பிரிந்து கொண்டு அணுகுகிறாம். இந்த விவகாரத்தை அணுகுவதில் முந்தைய அரசுகள் தோல்வியடைந்தன. இரண்டாவதாக லடாக்கிலோ, ஜம்முவிலோ எந்த பிரச்னையும் இல்லை. ஸ்ரீநகர் எல்லையில் உள்ள சில மாவட்டங்களில் மட்டுமே இந்த பிரச்னை உள்ளது. மொத்த காஷ்மிரில் இரண்டு மற்றும் ஒரு மாவட்டத்தின் பாதி பகுதியில் மட்டுமே இந்த பிரச்னையை காண்கிறோம். இந்த நிலை மாறும், அதற்கு ஊடகங்கள் மாற வேண்டும். இங்குள்ள வளர்ச்சியை நாம் அங்கீகரிக்க வேண்டும். உதாரணமாக விளையாட்டு மற்றும் போட்டித் தேர்வுகளில் முன்னேற்றத்தை நாம் ஏற்க வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய பல்கலைக்கழகங்களிலும் இன்று காஷ்மீர் மாணவர்கள் உள்ளனர். இதனை நாம் ஊக்குவிக்க வேண்டும். அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 75% வரை வாக்குகள் பதிவாகின. ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் வாய்ப்புகள் கிடைத்து செயல்பட தொடங்கியுள்ளனர். இதேபோல காஷ்மீரில் முதலீடுகளும், வேலை வாய்ப்புளும் தேவைப்படுகின்றன. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவுகள் 35 ஏவும், 370ம் வளர்ச்சிக்கும் வேலைவாய்புக்கும் தடையாக உள்ளன. இதனால் அங்கு முதலீடு செய்ய யாரும் முன்வருவதில்லை. நாம் அங்கு IIMS-களை உருவாக்கலாம். ஆனால் பேராசிரியர்கள் செல்ல மறுக்கின்றனர். அவர்களுக்கு வீடு கிடைப்பதில் அவர்களின் குழந்தைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இந்த பிரிவுகள் காஷ்மீர் நலனுக்கு எதிராக உள்ளன. ஜவஹர்லால் நேருவின் கொள்கைகள் இன்றைய காஷ்மீருக்கு தடையாக உள்ளன. அவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

ராகுல் ஜோஷி : மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்தது தவறு என நினைக்கிறீர்களா? காஷ்மீரில் எப்போது சட்டப்பேரவை தேர்தலை எதிர்பார்க்கலாம்?

பிரதமர் மோடி : மக்கள் ஜனநாயக கட்சியுடனான கூட்டணி அமைத்தது ஒரு சோதனை முயற்சி. காஷ்மீர் மக்களின் தீர்ப்பு முழுமையானது இல்லை. எந்த தனிக்கட்சியும் ஆட்சி அமைக்க முடியவில்லை. நீண்டகாலமாகவே மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காத்திருந்தோம். ஆனால் அவர்கள் எங்களை கவனிக்கவில்லை. அரசு அமைப்பது ஜனநாயக வாய்ப்பு. முப்தி முகமது சயீது ஒரு மூத்த தலைவர். 2, 3 மாதங்களுக்கு பிறகு நாங்கள் பேச்சுவார்த்தையை தொடங்கினோம். எங்களுடைய கொள்கைகள் ஒத்துப்போகாது என்பது தெரிந்தும், பொறுப்பை உணர்ந்து நாங்கள் கூட்டணி அமைக்க முன்வந்தோம். இதை ஒரு பரிசோதனை முயற்சியாகவே நாங்கள் நினைத்தோம், முப்தி முகமது சயீது இருந்தவரை கூட்டணி சரியாகவே சென்றது. மெகபூபா வந்த போது, அவர் விருப்பமில்லாமலே இருந்தார். அவரால் 2, 3 மாதங்களுக்கு மேல் நீட்டிக்க முடியவில்லை. அதுவே மாநிலத்தை கவர்னர் ஆட்சிக்கு தள்ளியது. பின்னர் அவர் ஆதரவு கேட்ட போதும், நாங்கள் அளித்தோம். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் வந்த போது, அவர் தாமதப்படுத்தினார். அண்மையில் மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது வன்முறை நடைபெற்றது. ஆனால் காஷ்மீரில் எந்த வன்முறையும் இன்றி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இது ஊடகங்களை பார்த்தாலே தெரியும். பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து ஒளிபரப்புகிற நடுநிலையான ஊடகங்கள் கூட இதை ஏற்றுக்கொண்டுள்ளன. அதே நேரத்தில் அவர்கள் காஷ்மீரின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் காட்ட முன்வரவேண்டும்.

ராகுல் ஜோஷி : காஷ்மீருக்கான பிரிவுகள் 35ஏ மற்றும் 370 ஐ நீக்க வேண்டும் என உங்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உங்கள் தேர்தல் அறிக்கையில் கூட அதனை தெரிவித்துள்ளீர்கள். உங்கள் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட போது, எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் உங்கள் நிலையை கண்டித்தன. எல்லைப்பகுதியில் உள்ள சில கட்சிகள் இந்த பிரிவுகள் நீக்கப்பட்டால் ரத்தம் சிந்த நேரிடும் என எச்சரித்தன. ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரும் இந்த விவகாரத்தை பேசியுள்ளனர். என்ன சொல் விரும்புகிறீர்கள்?

பிரதமர் மோடி : காஷ்மீர் பிரச்சனையின் பெரும்பகுதிகளுக்கு சில அரசியல் குடும்பங்களே காரணமாக உள்ளன. அந்த குடும்பங்களே இந்த பிரச்னைகளை வார்க்கின்றன. அந்த குடும்பங்கள் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு எந்த நலன் கிடைப்பதையும் விரும்பவில்லை. அவர்கள் பொதுமக்கள் கருத்தை தங்கள் அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்துகின்றன. தற்போது வருமான வரித்துறை இதுபோன்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளன. தீவிரவாதிகளை பாதுகாப்பதற்காக கல்வீச்சு தாக்குதலில் ஈடுபடுவோருக்கு பாகிஸ்தான் நிதியுதவி செய்கிறது. தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுக்கும் போது, காஷ்மீர் மக்கள் வீட்டு வாசலில் நின்று கைதட்டி மகிழ்கின்றனர். காஷ்மீர் மக்கள் தங்களை 50 ஆண்டுகளாக வேட்டையாடிய அரசியல் குடும்பங்களிடம் இருந்து விடுதலையை விரும்புகின்றனர். 370 மற்றும் 35 ஏ பிரிவுகள் உட்பட காஷ்மீர் மக்கள் விடுதலையை விரும்புகின்றனர்.

ராகுல் ஜோஷி : இப்போது தேர்தலை பற்றி பேசலாம். மிகப்பெரிய பிரச்னை தேசியவாதம் தான் என நினைக்கிறீர்களா? உண்மையான பிரச்னைகளில் இருந்து திசைதிருப்ப நீங்கள் முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனவே.

பிரதமர் மோடி : தேசியவாதம் என்பது பாரத் மாதா கீ ஜே. நான் பாரத் மாதா கி ஜே என சொல்லும் போது என் தாய் நாடு துயருற்று இருந்தால், அது எனது தேசியத்துக்கான நீதியாகுமா? தூய்மை இந்தியாவை நான் கொடுக்க விரும்புவது தேசியவாதம் இல்லையா? ஏழைகளுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என விரும்புவது தேசியவாதம் இல்லையா? ஏழைகள் மருத்துவ சிகிச்சைக்கு பணமின்றி உயிரிழப்பது தான் தேசியவாதமா? தேசியவாதம் என்றால் என்ன? ஏழையை உயிரிழக்க அனுமதிப்பதா அல்லது அவர்களை காக்க ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு ரூ. 5 லட்சம் வழங்குவதா? அது தேசியவாதம் இல்லையா? நவீன உத்திகளை பயன்படுத்தி விவசாயி தனது பொருளுக்கான முழு விலையை பெறுவது. அவர்களால் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட ஒன்றரை மடங்கு கூடுதல் விலை பெறுவது தேசியவாதம் இல்லையா? தேசியவாதம் என்பதன் பொருள் மாறுதலுக்குரியது. பாரத் மாதா கி ஜேவில் உள்ள ஜே, நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்குமானது. மக்கள் தங்கள் வாழ்வை முன்னேற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகளை நான் வழங்கினால், அதுவே எனது பார்வையில் தேசியவாதம். தேசியவாதத்துக்கு அதுவே பொருளென்றால் நாம் தேசியவாதிகள். நமது தேசியவாதம் நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கக் கூடியது.

ராகுல் ஜோஷி : தேசியவாதம் தவிர்த்து வாக்காளர்களிடம் மற்ற என்ன பிரச்னைகளை முன்வைக்க இருக்கிறீர்கள்?

பிரதமர் மோடி : முதல் பிரச்னை வளர்ச்சி. இது இரண்டு விதமனாது. ஒன்று சமூக உள்கட்டமைப்பு மற்றொன்று கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வது. இந்தியாவில் ஏராளமான மக்கள் இப்போதும் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் உள்ளனர். வீடில்லாதவர்களுக்கு நாங்கள் வீடு வழங்க உள்ளோம். ஏழைகளுக்கு மருத்துவ வசதிகள், கல்வி வழங்க உள்ளோம். அனைத்து குடிமக்களும் கவுரவத்துடன் வாழ்வதற்கான நிலையை உறுதிப்படுத்துவோம். வாழ்வதற்கான சூழலை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுப்போம். இந்தியாவின் மிகப்பெரிய பலம் புதிய நடுத்தர வர்க்கம். இந்த பிரிவை முந்தைய அரசுகள் புறக்கணித்துள்ளன. நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதில் நடுத்தர வர்க்கம் பெரும்பங்காற்றும். நடுத்தர வர்க்கம் சட்டத்தை மதிக்கிறது. சட்டம் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுகிற பிரிவாக நடுத்தர வர்க்கம் உள்ளது. நடுத்தர வர்க்கத்தினரே வரியை முறையாக செலுத்துகின்றனர். அரசிடம் இருந்து மிகக்குறைவாக எதிர்பார்க்கிற பிரிவாக நடுத்தர வர்க்கம் உள்ளது. அவர்களை தாக்குதல்களில் இருந்து காக்க வேண்டியது அரசின் கடமை. காங்கிரஸ் கட்சி அவர்களை இழிவுபடுத்துகிறது. காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களாக தெரிவிக்கும் கருத்துகள் ஏற்க முடியாதது.

கிராமப்புற பகுதிகளில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வருவாயை இரட்டிப்பாக்கவும், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கவும் நடவடிக்கை எடுப்போம். ஓய்வூதியம் கொடுப்பதால் அவர்கள் வீட்டில் சும்மா இருக்கிறார்கள் என்று பொருளில்லை. ஒரு ஆசிரியர் ஓய்வு பெறும் போது, அவர் ஓய்வூதியம் பெற்றாலும், டியூஷன் போன்றவற்றின் மூலம் தொடர்ந்து செயல்படுகிறார். விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவே ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். சிறுவணிகர்ளுக்கும் ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். ரூ. 100 லட்சம் கோடி முதலிடு இந்தியாவை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் என நம்புகிறோம். மிகப்பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை இது உருவாக்கும். இதுவே எங்கள் உறுதிமொழி பத்திரத்தில் உள்ள எங்கள் கனவுகள் மற்றும் விருப்பங்கள். எங்கள் தேர்தல் அறிக்கை மிகச்சிறப்பாக வடிவடைக்கப்பட்டதாகும். 5 ஆண்டுகள் இருந்த ஆட்சியில் இருந்த சக்திவாய்ந்த அரசு இந்த உறுதிமொழி பத்திரத்தை உருவாக்கியுள்ளது. நாங்கள் உறுதியளித்துள்ளதை அடுத்த 5 ஆண்டுகளில் எங்களால் மட்டுமே வழங்க முடியும். நாங்கள் அடுத்த 24 மணி நேர தலைப்பு செய்திகளுக்காக எங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. எங்கள் தேர்தல் அறிக்கை வரும் 2024-ம் ஆண்டு வரைக்குமானது. சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை மாற்ற திட்டமிட்டுள்ளோம்.

ராகுல் ஜோஷி : ரஃபேல் குற்றச்சாட்டுகளின் மூலம் எதிர்க்கட்சிகள் உங்களை சிக்க வைக்க முயற்சிக்கின்றன. காவலாளியே திருடன் என்ற முழக்கத்தையும் அவர்கள் முன்வைக்கிறார்கள். நீங்கள் நானும் காவலாளி தான் முழக்கத்தை முன்வைக்கிறீர்கள். எங்கிருந்து இந்த கருத்தை உருவாக்கி முன்வைத்தீர்கள்?

பிரதமர் மோடி : ரஃபேல் விவகாரத்தை பொறுத்தவரையில், எதிர்க்கட்சிகள் அதிகளவில் இதுகுறித்து பேசுவதில்லை. ஒரு குறிப்பிட்ட நபர் மட்டுமே தொடர்ந்து பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். அனைத்து இடங்களிலும் இந்த பொய்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றம் அல்லது மத்திய தணிக்கை அதிகாரியோ கூட இதனை நிராகரித்துள்ளார்கள். சில நடுநிலையான பத்திரிகையாளர்கள் கூட போபர்ஸ் விவகாரத்தில் நிதி முறைகேடு நடைபெற்றது குறித்து குரலெழுப்பினர். ஆனால் இப்போது எந்த அடிப்படையும் இல்லாமல் ஒருவர் மட்டும் பொய்சொல்லி வருகிறார். இதை எவ்வளவு காலத்துக்கு அவர் சொல்லிக்கொண்டிக்க போகிறார். அவரது ஆலோசகர்கள் கூட ரஃபேல் விவகாரத்தை அரசியலாக்க முடியாது என தெரிவித்துள்ளனர். அவருக்கு நெருக்கமானவர்களே இந்த விவகாரத்தை பேசுவதில்லை. ஆனால் போபர்ஸ் விவகாரத்தால் தனது தந்தைக்கு ஏற்பட்ட கறையை, ரஃபேல் விவகாரத்தை எழுப்புவதன் மூலம் கழுவி விடலாம் என அவர் நினைக்கிறார். பாதுகாப்புத்துறை ஊழல்களாலேயே காங்கிரஸ் கட்சி அழிக்கப்பட்டது. எனவே அதே குற்றச்சாட்டுகளை அவர்கள் அனைத்து அரசுகளின் மீதும் சுமத்த முயற்சிக்கிறார்கள். வாஜ்பாய் அரசின் போது ஜார்ஜ் பெர்ணான்டஸை சவப்பெட்டி ஊழலில் சிக்க வைக்க முயன்றார்கள். பின்னர் அது வெறும் பொய்யாக மாறியது. இப்போது அதே போல என்னை சிக்கவைக்க அவர்கள் முயல்கிறார்கள். நாங்கள் மக்கள் முன்பு ஆதாரத்தை எடுத்து வைக்க வலியுறுத்துகிறாம். ஆனால் அவர்கள் எதையும் கொடுக்கவ்லை. அவர்கள் பொய் சொல்கிறார்கள். நான் பல ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருக்கிறேன். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துள்ளேன். காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவரே கூட, மோடி மீது ஊழல் புகார் கூற முடியாது என கூறியுள்ளார். எனவே அவர்கள் எவ்வளவு கடுமையாக முயற்சித்தாலும், இந்திய மக்கள் பொய்களை ஏற்க மாட்டார்கள். பொதுமக்கள் மிக திறமைசாலிகள். இதுபோன்றோரை புரிந்து கொள்வார்கள். தற்போது காவலாளி முழக்கம் சென்றடைந்ததை போல, 2014-ம் அண்டு மக்களவை தேர்தலின் போது, என்னை காவலாளியாக நியமித்தால் நாடு களவு போகாமல் பார்துதுக்கொள்வேன் என்று சொன்னேன். என்னுடைய பேச்சில் இதை குறிப்பிட்டேன். இப்போதும் நான் காவலாளி என்றே சொல்கிறேன். யாரையும் திருடுவதற்கு நான் அனுமதிக்கவில்லை. அப்படி யாராவது திருடினால் நான் சட்டத்தை கடுமையாக்கி, கடுமையான நடவடிக்கை எடுப்பேன். நேர்மைக்கான சூழலை உருவாக்குதிலும், ஊக்குவிப்பதிலும் அரசு வெற்றியடைந்திருக்கிறது.

ராகுல் ஜோஷி :குறைந்தபட்ச வருவாய் திட்டம் குறித்து அவர்கள் பரப்புரை செய்கிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் 20% ஏழைக்குடும்பங்கள் ஆண்டுதோறும் ரூ. 72,000 வழங்கப்படும் என கூறுகிறார்கள். இந்த திட்டத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? இது களத்தின் போக்கை அவர்களுக்கானதாக மாற்றுவதாக அமையுமா?

பிரதமர் மோடி : இந்த தேர்தலில் அவர்களின் முதன்மை முழக்கமே குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதத் திட்டம் தான். கடந்த 60 ஆண்டுகளில் அவர்கள் தவறான முறையில் ஆட்சி செய்திருக்கிறார்கள் என்பதே இதன் அர்த்தம். குறைந்தபட்ட ஊதிய உத்தரவாதத் திட்டம் குறித்து அவர்கள் பேசும் போது, 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி என்ன ஆனது என்ற கேள்வி எழுகிறது. முத்தலாக்கால் பாதிக்கப்படும் பெண்களுக்கான நீதி என்ன? கடன் தள்ளுபடி செய்யப்பட்ட மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநில விவசாயிகளின் நிலை என்ன? 10 நாட்களில் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சொன்னீர்கள். 100 நாட்கள் ஆகிவிட்டது. அவர்களுக்கு உரிய நீதி எப்போது கிடைக்கும்? போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளி வெளிநாடு தப்பிச்செல்ல காங்கிரஸ் ஏன் அனுமதித்தது என கேட்கிறார்கள். அவர்கள் நீதியை எதிர்பார்க்கிறார்கள். மிகப்பெரிய விஞ்ஞானியான நம்பி நாராயணன் பொய்வழக்கு புனையப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நம்பி நாராயணன் சிறையில் அடைக்கப்பட்டது இந்திய விண்வெளித்துறை மீது நடத்தப்பட்ட தாக்குதல். நம்பி நாராயணன் நீதி கேட்கிறார். சம்ஜ்ஹவுடா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என கூறி அப்பாவிகளை சிறையில் அடைத்துள்ளீர்கள். அவர்கள் பொய் வாக்கு காரணமாக பல்லாண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்கள் நீதி கேட்கிறார்கள். சம்ஜ்ஹவ்டா வழக்கின் பெயரால் இந்து தீவிரவாதம் என்ற பதத்தை உருவாக்கி இந்துக்களுக்கு தீவிரவாதத்தோடு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டினீர்கள். இந்த நாட்டின் இந்துக்கள் நீதி கேட்கிறார்கள். எங்களை ஏன் தீவிரவாதிகள் என முத்திரை குத்துகிறீர்கள் என அவர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். பி.வி. நரசிம்மராவ் நீதி கேட்கிறார். தன் வாழ்வு முழுமையாக காங்கிரஸ் கட்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிறகும், தனது உடலை காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்க அனுமதிக்காதது ஏன் என அவர் கேட்கிறார். இந்தியாவின் சிறந்த மனிதர்களான அம்பேத்கர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல் கூட நீதி கேட்கிறார்கள். அவர்களுக்கு வரலாற்றில் உரிய இடம் கொடுக்காதது ஏன்? அவர்களுடைய பங்களிப்பு புறக்கணிக்கப்பட்டது ஏன்? நீதிக்கான குரல் நாட்டின் ஒவ்வொரு மூளையிலிருந்தும் எழுந்து வருகிறது. அவர்கள் நீதி வழங்க பொருத்தமானவர்கள் என்பதை நான் நம்ப முடியாது.

ராகுல் ஜோஷி : தேசிய ஜனநாயக கூட்டணி இந்த தேர்தலில் எத்தனை இடங்களை பெறும் என நம்புகிறீர்கள்?

பிரதமர் மோடி : முதலில் எத்தனை இடங்களைப் பெறுவோம் என்பதை தீர்மானிக்க வேண்டியது நான் அல்ல, வாக்காளர்கள் தான். 125 கோடி இந்தியர்களும் பாஜகவுக்கு பெரும் வெற்றியைத் தருவது என தீர்மானித்துவிட்டனர். 2014-ம் ஆண்டைவிடவும் பெரிய வெற்றியுடன் ஆட்சியமைப்போம். எங்கள் கூட்டணிக்கட்சிகளும் கூடுதல் பலம் பெறும். தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் இந்த தேர்தலின் மூலம் அதிகரிக்கும். நிர்வாகம் சார்ந்த எங்களின் நோக்கங்களை அதே சுயநலமின்மை மற்றும் நம்பிக்கையுடன் கடந்த 5 ஆண்டுகளில் செய்ததைப் போன்று முன்னெடுப்போம்.

ராகுல் ஜோஷி : 2014-ல் கிடைத்ததைக் காட்டிலும் கூடுதல் தொகுதிகளைப் பெறுவோம் என கூறுகிறீர்கள். இந்தி மொழிபேசும் மாநிலங்களில் கூடுதல் தொகுதிகளை எப்படி பெறப்போகிறீர்கள்? உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகளில் 73 தொகுதிகளை கைவசம் கொண்டுள்ளீர்கள், குஜராரத்தில்26 தொகுதிகளும் உங்களிடம் உள்ளது. மொத்தமாக இந்திபேசும் மாநிலங்களில் 178 தொகுதிகளில் 168 தொகுதிகளில் நீங்கள் வென்றுள்ளீர்கள். இதனைவிட அதிக தொகுதிகளை வெல்வது எவ்வாறு சாத்தியம்?

பிரதமர் மோடி : பழைய கணக்குகளைப் பார்த்தால் நாங்கள் திரிபுராவில் தேர்தலை எப்படி எதிர்கொண்டிருக்க முடியும்? எங்களுக்கு முன்பு அம்மாநிலத்தில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை, ஆனால் தற்போது நாங்கள் நான்கில் 3 பங்கு எம்எல்ஏக்களைக் கொண்டு பெரும்பான்மை அரசை நடத்திக் கொண்டிருக்கிறோம். முந்தைய தேர்தல் கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்தால் நாங்கள் முன்னேற முடியாது. 1984-ம் ஆண்டு நாங்கள் இரு மக்களவைத் தொகுதிகளை மட்டுமே பெற்றிருந்தோம். 2014-ம் ஆண்டு நாங்கள் காங்கிரஸ் அல்லாத முழுபெரும்பான்மை கொண்ட அரசை அமைத்துள்ளோம். அரசியல் எப்போதும் கணக்கீட்டுக்கு உட்பட்டது அல்ல என்றே நான் நம்புகிறேன்.

ராகுல் ஜோஷி : எனவே உத்தரபிரதேசத்தில் கணக்கீடுகள் உதவாது என எண்ணுகிறீர்களா? 1993-ம் ஆண்டு கன்சிராமும், முலாயம்சிங் யாதவும் கரம்கோர்த்தனர். "இணைந்தோம் முலாயம் கன்சிராம் - கைவிடுங்கள் ஸ்ரீராம்" என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. இதே கூட்டணி தற்போதும் ஏற்பட்டுள்ளதால் 42-45% வாக்கு வங்கி இந்த கூட்டணிக்கு செல்வது தாக்கத்தை ஏற்படுத்தும் என நீங்கள் யோசிக்கவில்லையா?

பிரதமர் மோடி : எதிரிகளாக நின்று ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள முனைந்தவர்கள் ஒருங்கிணைக்கிறார்கள் என்றால், அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள போராடுகிறார்கள் என்று பொருள். வாழ்க்கைக்காக போராடும் அவர்களுக்கு வெற்றி கிட்டும் என நான் நம்பவில்லை.

ராகுல் ஜோஷி : மாயாவதி அவர்கள் முஸ்லீம்களின் வாக்குகள் பிரியாமல் மெகா கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கோரியிருக்கிறார். தேர்தல் ஆணையமும் இந்த அறிக்கையை பரிசீலிக்கிறது. இது குறித்து உங்களின் பார்வை என்ன?

பிரதமர் மோடி : மாயாவதி தோல்வி முகத்தில் இருப்பதால் இத்தகைய அறிக்கைகளை வெளியிடுகிறார். இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை.அவர் முஸ்லீம்கள் தமக்கு வாக்களிக்குமாறு குறிப்பிட்டு கேட்டிருக்கிறார். தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். மாயாவதியைப்பற்றி நான் பெரிதாக கவலைப்படவில்லை. அவர் மூழ்கும் கப்பலின் ஒரு பகுதியாக இருந்து கொண்டு முஸ்லீம்களின் ஆதரவைக் கோருகிறார். மதச்சார்பின்மை பற்றி பேசுபவர்களை எண்ணித்தான் தற்போது கவலைப்படுகிறேன். அவர்கள் தற்போது அமைதி காப்பது ஏன்? இதே போன்று யாரேனும் இந்துக்களிடம் கோரிக்கையை முன்வைத்தால், அவர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். விருதாளர்கள் விருதுகளை திரும்பக் கொடுத்து, கையெழுத்து இயக்கம் நடத்தி போராடுவார்கள். இக்குழுவினரெல்லாம் தற்போது அமைதி காப்பது ஏன்? இது தேசத்திற்கு கவலையளிக்கக் கூடிய விவகாரம். இத்தகைய விவகாரங்கள் வெளிப்படவேண்டும். மதச்சார்பின்மை பேசுபவர்கள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவது ஏன்? இத்தகைய அறிக்கைகள் அவர்களின் மதச்சார்பின்மையை பாதிக்கவில்லையா? மாறாக மதச்சார்பின்மையை ஊக்குவிக்கிறதா? மதச்சார்பின்மை என்ற முகத்திரைக்குப் பின் ஒளிந்து கொண்டுள்ளவர்கள் தான் தேசத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். தனது இருப்பை தக்கவைப்பதற்கான அரசியலில் மாயாவதி ஈடுபட்டுள்ளார். அவர் வாக்குகளை பெறுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.

ராகுல் ஜோஷி : கடந்த 5 ஆண்டுகளில் பாஜக மேற்குவங்கம், ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பல பணிகளை மேற்கொண்டுள்ளது. இம்மாநிலங்களிலிருந்து எத்தனை தொகுதிகளை எதிர்பார்க்கிறீர்கள்? மேற்கு வங்கத்தில் உங்களுக்கு கூடுதல் எம்.பி.க்கள் கிடைப்பார்கள் என நம்புகிறீர்களா?

பிரதமர் மோடி : நாடு முழுவதும் பாஜக தனது தடத்தை விரிவடையச் செய்து வருகிறது. நாடு முழுவதும் நாங்கள் எழுச்சி கண்டு வருவதால் வெல்லப்போகும் தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஏற்கெனவே வென்ற பகுதிகளில் எங்களுக்கான வாக்கு சதவீதம் அதிகரிக்கும். ஒன்றிரண்டு தொகுதிகளை தோற்ற இடங்களில் அவற்றையும் வென்றெடுப்போம். நாடு முழுவதும் எங்களுக்கு சாதகமான அலை இருக்கிறது.

ராகுல் ஜோஷி : மேற்கு வங்கத்திலும் கூடவா?

பிரதமர் மோடி : நாடு முழுவதும். வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்று பாருங்கள் அல்லது மேற்கில் கட்சு பகுதிக்கு செல்லுங்கள். நாடு முழுவதும் எங்களுக்கான அலை உள்ளது.

ராகுல் ஜோஷி : மேற்கு வங்கத்தில் பாஜக 23 இடங்களை வெல்லும் என அமித்ஷா சொல்கிறார். ஒடிசாவில் 11 முதல் 12 தொகுதிகளை வெல்வோம் என கூறுகிறார். இது சாத்தியம் என நம்புகிறீர்களா?

பிரதமர் மோடி : எண்களை குறிப்பிட்டு நான் கூறவில்லை. ஆனால் அனைத்து தலைவர்களிலும் கடின உழைப்பு கொண்டவர் அமித்ஷா. எனது பரப்புரைகளுக்கு ஊடக வெளிச்சம் கிடைக்கிறது. ஆனால் அவருக்கு கிடைப்பதில்லை. எந்த தேசிய கட்சியின் தலைவரும் ஆண்டு முழுவதும் அமித்ஷா போன்று உழைப்பதாக நான் கருதவில்லை. தேர்தல் காலத்தில் மட்டும் என இல்லாமல், உள்ளூர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து களநிலவரங்களை தெரிந்து வைத்துக் கொள்கிறார் அமித்ஷா. இத்தகைய கடின உழைப்பிலிருந்து பாஜக பலனடைகிறது. இதனால் தான் அவரது கணிப்பை நம்புகிறேன்.

ராகுல் ஜோஷி : ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில், ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் கே.சந்திரசேகரராவுடன் தேர்தலுக்கு பிந்தய கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா?

பிரதமர் மோடி : பாஜக முழு பெரும்பான்மையுடன் வெற்றிபெறும். மிகப்பெரிய எண்ணிக்கையில் தொகுதிகளை வெல்வோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்களுக்கு கூடுதல் பலமாக அமையும் இதனால் எங்களின் ஆதரவு எம்.பி.க்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்களை விட கூடுதல் எண்ணிக்கையுடன் ஆட்சியமைப்போம். ஆட்சியமைப்பதற்கு யாருடைய தயவும் எங்களுக்கு தேவை இல்லை. ஆட்சியமைப்பதுடன் எங்கள் நோக்கம் நின்றுவிடவில்லை. எங்கள் திட்டம், நோக்கம் தேசத்தை முன்நோக்கி வழிநடத்துவதாகும். ஒருமித்த கருத்தால்தான் இது சாத்தியமாகும். எனவேதான் ஒரு எம்.பி.யை பெற்றுள்ள கட்சியையும் நாங்கள் இணைத்துக் கொண்டுள்ளோம். அவர்கள் எங்களை எவ்வளவு தூரம் எதிர்த்தார்கள் என்பது பொருட்படுத்தாமல் தேசத்தை முன்னேறச் செய்யும் நோக்கில் அவர்களையும் இணைத்துக் கொள்கிறோம்.

ராகுல் ஜோஷி : ஓராண்டுக்கு முன்பு கூட ராமர்கோவில் மிகமுக்கிய பிரச்னையாக இருந்தது. நீங்கள் அதனை தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் கடந்த 6 மாதங்களாக ராமர்கோவிலைப் பற்றி பேசியதாக தெரியவில்லை. இந்த பிரச்னை அதன் முக்கியத்துவத்தை இழக்கிறதா?

பிரதமர் மோடி : பிரச்னை ஊடகங்களிடம்தான் உள்ளது. நாங்கள் இதைப்பற்றி பேசும் போது உங்களுக்கு இந்துவாவைத் தவிர வேறு எதுவும் இல்லை என்கின்றனர். நாங்கள் அமைதியாக இருக்கும் போது நீங்கள் ஏன் ராமர்கோவில் பற்றி பேசவில்லை என்கின்றனர். ஆனால் இந்த விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு உறுதியானது. நாங்கள் சித்தாந்த ரீதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம். அதிலிருந்து ஒருபோதும் மாறப்போவதில்லை.

ராகுல் ஜோஷி : உத்தரபிரதேசத்தைப் பொறுத்தவரையிலும் பிரியங்கா ஏற்படுத்தப்போகும் விளைவுகளுக்கு என்ன முக்கியத்துவம் அளிக்கிறீர்கள்? காங்கிரசின் இந்த நடவடிக்கையால் அக்கட்சிக்கு கிடைக்கப்போகும் பிரதிபலனில் என்ன மாற்றங்கள் ஏற்படும்?

பிரதமர் மோடி : என்னைப்பொறுத்தவரையிலும் ஒரு குறிப்பிட்ட நபரைப் பற்றி பேசுவதை தவறு என நான் கருதுகிறேன்.

ராகுல் ஜோஷி : ராகுல்காந்தி இரு தொகுதிகளில் போட்டியிடுவதையும், வயநாட்டில் போட்டியிடுவதையும் நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பிரதமர் மோடி : யார் வேண்டுமானாலும் இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட அரசியலமைப்பு அனுமதிக்கிறது. அதில் தவறேதும் இல்லை. ஆனால் அவர் அமேதியை விட்டு வெளியேறும் சூழல் உருவாகியிருப்பதுதான் உண்மையான பிரச்னை. அவர் தமது குடும்ப பாரம்பரியத்திலிருந்து பெற்ற தொகுதியை விட்டு ஓடுவதுதான் விவாதிக்கப்பட வேண்டியது.

ராகுல் ஜோஷி : நீங்கள் கடந்த நான்கைந்து ஆண்டுகளில் காந்தி குடும்பத்தை பலமுறை தாக்கிப்பேசியுள்ளீர்கள்

பிரதமர் மோடி : இல்லை. நான் ஒருபோதும் அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கிப்பேசவில்லை. சித்தாந்த ரீதியாக அவர்களின் வாரிசு அரசியலை நான் எதிர்க்கிறேன். எனவே இதனைக் குறிப்பிட்டு அனுதாபம் தேடுவது தவறானது. நான் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கிப்பேசவில்லை. இது எனது சித்தாந்தரீதியான நம்பிக்கை. வாரிசு அரசியல் இந்தியாவின் ஜனநாயகத்தை அபாயத்திற்குள்ளாக்குகிறது. மேலும் இதனை நான் கூறவில்லை. டாக்டர் அம்பேத்கர் இதனை பலமுறை கூறியிருக்கிறார். நான் டாக்டர் அம்பேத்கரை பெரிதும் மதிக்கிறேன்.

ராகுல் ஜோஷி : அண்மை ஆண்டுகளில் ஊழல் விவகாரத்தில் நீங்கள் அவர்களை தாக்கிப்பேசியுள்ளீர்கள்...

பிரதமர் மோடி : ஊழல் விவகாரத்திற்காக நான் அவர்களை தாக்கிப்பேசவில்லை. ஊழல் ஒரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளதை நாம் பார்க்கலாம். போபாலில் என்ன நடந்தது? ஊழலில் ஈடுபட்டவர்கள் இது ஒன்றும் பிரச்னை அல்ல என்பதைப் போன்று சொல்லக் கூடும். ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்படவில்லையா? நேஷனல் ஹெரால்டு வழக்கு எங்கள் ஆட்சியின் போது எழுந்ததா? லாலு மீதான வழக்கு எங்கள் ஆட்சிக்காலத்தில் எழுந்ததா? முடங்கிக்கிடந்த வழக்குகளை நாங்கள் திரும்ப கையில் எடுத்தோம். சட்டத்தின் ஆட்சியில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். தவறு செய்பவர்கள்தான் பிணை கோருவார்கள். அவர்கள் தவறு செய்திருக்கிறார்கள். இதனால் அம்மா, மகன் என இருவரும் ஜாமினில் வெளியே உள்ளனர்.

ராகுல் ஜோஷி : நீங்கள் சர்தார் படேல் உள்ளிட்ட பல தலைவர்களின் தேசத்திற்கான பங்களிப்பு குறித்து பேசியுள்ளீர்கள். பண்டித ஜவகர்லால் நேரு விவகாரத்தில் பார்வை என்ன?

பிரதமர் மோடி : செங்கோட்டையிலேயே நான் இதைப்பற்றி பேசியுள்ளேன். இதைப் பற்றி பேசிய ஒரே இந்திய பிரதமரும் நான்தான். நாடாளுமன்றத்திலேயே பதிவு செய்துள்ளேன், நாடு இன்று இந்த நிலையை அடைந்திருப்பதற்கு இதற்கு முந்தைய அனைத்து அரசுகளின் பங்களிப்புமே உள்ளது. அனைத்து மாநில அரசுகளும் பங்களித்துள்ளன. அம்மாநிலங்களை ஆண்டவர்களும் பங்களித்துள்ளனர். ஆனால் புகார் என்னவென்றால், சர்தார்படேல் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்திருந்தால், அவர் அளித்திருக்கும் முக்கியத்துவம் வேறாக இருந்திருக்கும். நாட்டின் வளர்ச்சி வேகம் வேறாக இருந்திருக்கும். புதிய உச்சங்களை இந்தியா தற்போதிலும் வேகமாக அடைந்திருக்கும். சர்தார் படேல் பிரதமராகியிருந்தால் 2014 தொடங்கி நான் மேற்கொண்ட கழிவறை கட்டும் திட்டங்கள் எப்போதோ நிறைவேற்றப்பட்டிருக்கும்.

ராகுல் ஜோஷி : கடந்த ஐந்தாண்டுகளில் பொருளாதார மேம்பாடு குறித்து என்ன கூறவிரும்புகிறீர்கள்? தற்போதைய வளர்ச்சி விகிதமான 7% என்பதில் திருப்தியடைகிறீர்களா?

பிரதமர் மோடி : ஒருவர் வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டிருந்தால் 10% வளர்ச்சியிலும் திருப்தியடையமாட்டார். சில நேரங்களில் திருப்தியடையாமல் இருப்பதே ஆற்றலுக்கான மூலாதாரமாக உள்ளது. எனவே என்ன தான் சாதித்தாலும் திருப்தியடையாமையை என்னுள் உயிர்ப்புடன் வைத்திருக்கிறேன். ஆனாலும் இது நாம் பெருமையடைய வேண்டிய தருணம். உலக வங்கி, ஐ.எம்.எஃப். தரவரிசை நிறுவனங்கள் என அனைத்தும் ஒரே முகமாக இந்தியாவை வேகமாக வளரும் பொருளாதாரமாக அங்கீகரிக்கின்றன. இது இந்தியர்கள் அனைவருமே பெருமையடையத் தக்க தருணம். ஆனால் மிகப்பெரிய உயரங்களை அடைவதற்கான பெரும் தகுதி நமக்கு இருக்கிறது.

ராகுல் ஜோஷி : பணமதிப்பிழப்பு நீங்கள் அறிமுகப்படுத்தியவற்றிலேயே மிகவும் சர்ச்சைக்குள்ளான திட்டம். 2016-ம் ஆண்டு நிலையை விட தற்போது 19% பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. மதிப்பு நீக்கப்பட்ட அனைத்து பணமும் வங்கிக்கு திரும்பிவிட்டது. பணமதிப்பிழப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

பிரதமர் மோடி : உங்களுடைய கணக்கீடு தவறானது. முதலில் உண்மை நிலை என்னவென்றால். முன்பு பணம் வந்து கொண்டிருந்த வேகத்தை கணக்கிட்டால், பணமதிப்பு நீக்கம் நடந்திருக்காவிட்டால் நிதிச்சூழலில் இதைவிட பணப்புழக்கம் அதிகரித்திருக்கும். அதிக மதிப்புடைய பணத்தை வெளியிடுகிறோம் என்ற பார்வையிலிருந்து இதனை அணுகவேண்டும். இரண்டாவது பணமதிப்பிழப்பால் குட்டு வெளிப்பட்டு சிக்கிக் கொண்ட சில பெரிய மனிதர்கள் தாங்கள் பெற்ற பாதிப்பிலிருந்து மீளவில்லை. ஆனால் பணமதிப்பிழப்பின் போது பாதிக்கப்பட்ட சாதாரண மக்கள் தற்போது எங்களின் பின்னால் உள்ளனர். உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பணமதிப்பிழப்பை மையப்படுத்தி நடத்தப்பட்டது, அதில் நாங்கள் வெற்றிகரமாக எங்களை நிரூபித்துள்ளோம். எனவே சாதாரண மக்களின் வாக்கு வங்கியை இழந்தவர்களும், கருப்பு பணத்தைக் கொண்டு வணிகம் செய்ய முடியாதவர்களும் தான் பணமதிப்பிழப்பால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள்தான் அழுகின்றனர். ஆனால் இந்தியமக்கள் அவர்கள் ஏன் புகார் கூறுகிறார்கள் என்பதை முழுவதுமாக அறிவார்கள். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிபெறுவதற்கு பணமதிப்பிழப்பும் முக்கியமான காரணம். சுதந்திரம் பெற்ற 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த 5 ஆண்டுகளில் வருமானவரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான சட்டவிரோத நிறுவனங்கள் சிறு அறைகளில் இணையான பொருளாதாரத்தை நடத்திக் கொண்டிருந்தன. ஹவாலா நெட்வொர்க்குகள் மூலம் இவை இந்திய பொருளாதாரத்தை சுரண்டிக் கொண்டிருந்தன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்த சட்டவிரோத நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் பணம் கணக்கில் கொண்டுவரப்பட்டு அரசின் கஜானாவை வந்தடைந்துள்ளது. நாம் இந்த நடவடிக்கையை எடுத்திராவிட்டால், பொருளாதாரம் தனது வளர்ச்சியை பெற்றிருக்காது. இணைபொருளாதாரம் தான் இந்த பணத்தைக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்திருக்கும். கருப்புப் பணம் ஒழிந்ததால் சொத்துக்களின் விலை குறைந்துள்ளது.

ராகுல் ஜோஷி : உங்கள் அரசின் கீழ் நிர்வாக அமைப்புகள் பிரச்னைகளை சந்தித்துள்ளதாக கூறுகின்றனர். ரிசர்வ் வங்கியின் இரு ஆளுநர்களுடன் பிரச்னை எழுந்தது, சிபிஐ அமைப்புக்குள்ளாகவே மோதல் ஏற்பட்டது, உச்சநீதிமன்றத்தின் 4 மூத்த நீதிபதிகள் பிரச்னை எழுப்பினர். நிர்வாக அமைப்புகளின் நம்பகத்தன்மை குறித்து என்ன கருதுகிறீர்கள்?

பிரதமர் மோடி : காங்கிரஸ் எழுப்பும் பிரச்னைகள் அனைத்துமே பொருளற்றவை. அவர்கள் தேர்தலில் தோல்வியடைந்தால் தேர்தல் ஆணையம் தவறாகிவிடும். அவர்கள் தங்களின் விருப்பங்களின் படி நீதித்துறை இயங்க வேண்டும் என நினைக்கின்றனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதே பதவிநீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டுவந்து அவர்களின் கோரிக்கை நிறைவேறும் வரை இந்த விவகாரத்தை நிலுவையில் வைப்பார்கள். நாட்டின் அனைத்து அமைப்புகளையும் சீர்கெடுப்பதில் காங்கிரசின் பின்னணி உள்ளது. நாங்கள் நிர்வாக அமைப்புகளை வலுப்படுத்துபவர்கள். காங்கிரஸ்காரர்கள் தான் அவசர நிலையை பிரகடனப்படுத்தினர். நாட்டையே சிறைக் கூடமாக மாற்றினர், மூத்த அரசில் தலைவர்களை சிறையில் தள்ளினர். ஊடகங்களை ஒடுக்கினர். தற்போது அமைப்புகள் குறித்து பேசுகின்றனர். இது அவர்களுக்கு பொருத்தமானதல்ல.

ராகுல் ஜோஷி : திரு.எல்.கே.அத்வானி அவர்கள் "தேசம் முதலில், கட்சி அடுத்தது, தனி மனிதன் கடைசியாக" என்று கூறினார். நீங்கள் அதனை ஆமோதித்தீர்கள். ஆனால் மாறுப்பட்ட கண்ணோட்டத்தைக் கொண்டவர்களை தேசவிரோதிகள் என்று விமர்சிக்கக் கூடாது என்றும் அத்வானி கூறினார்.

பிரதமர் மோடி : பாஜகவின் அடிப்படை கொள்கைகளைத்தான் அவர் கூறியிருக்கிறார். இவைதான் எங்களின் கொள்கைகள். அனைத்து பாஜக தொண்டர்களும் இதனைத்தான் கூறுகின்றனர். தேசமே முதன்மையானது, கட்சி அதற்கு அடுத்தது, தனிமனிதர்கள் கடைசியாகத்தான். தேசியவாதம் சார்ந்த கருத்தியலிலும் எங்களின் நிலைப்பாடு இதுதான். காங்கிரஸ் குறைகூறுவதற்காகவே உள்ளது. காங்கிரஸ் தலைவர் ஒருவர் வாஜ்பாயை துரோகி என விமர்சித்ததை நீங்கள் அறிவீர்களா? சமீபத்தில் மறைந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் நாடாளுமன்ற அவையில் வாஜ்பாயை விமர்சித்ததை அறிவீர்களா? எனவே, அத்வானி கூறியது மிகவும் சரியே.

ராகுல் ஜோஷி : நீங்கள் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பத்திரிகையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளீர். நெட்வொர்க் 18 குழுமம் மேற்கொண்டுள்ள வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பிரதமர் மோடி : நான் அனைத்து வாக்காளர்களும் காலை முதல் வேலையாக வந்து வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். முதலில் வாக்கு பின்னரே காலை உணவு. இன்றைய வாக்காளர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் உள்ளனர். வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகளை காண முடிகிறது. வாக்காளர்கள் தண்ணீர் பாட்டில்களை எடுத்துவர வேண்டும். அமைதியான வாக்குப்பதிவு நடைபெற வேண்டும், அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டும். முதன் முறையாக வாக்களிக்க உள்ள 21-ம் நூற்றாண்டில் பிறந்தவர்களையும் அணுக விரும்புகிறேன். முதன்முறை வாக்காளர்கள் சிறப்பான மதிப்பிற்கும், கவுரவத்திற்கும் உரியவர்கள். அவர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். வாக்காளர்பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை ஆன்லைனில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த சிறப்பான தேர்தல் திருவிழாவில் வாக்காளர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். ஜனநாயகம் என்றும் நிலைக்க வேண்டும். இந்த நோக்குடன் முன்னோக்கி நடைபோடுவோம்.

First published: April 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...