மணிப்பூர் மாநிலத்தில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதள கட்சியைச் சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் ஆளும் பாஜக கட்சியில் இணைந்துள்ளனர். கடந்த மாதம் பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதீஷ் குமார் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணியுடன் புதிய அரசை அமைத்துள்ளார்.
2020 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து நிதீஷ் குமார் போட்டியிட்ட நிலையில், ராஷ்டிரிய ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி எதிரணியில் களம் இறங்கின.தேர்தல் முடிவுகளில், தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் அதிக இடங்களையும், பாஜக அதை விட சில சீட்டுகள் குறைந்து இரண்டாம் இடத்தையும் பெற்றது. எண்ணிக்கை பலத்தில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 3ஆவது இடத்தில் இருந்தாலும், கூட்டணி கட்சியான பாஜக நிதீஷ் குமாரை மீண்டும் முதலமைச்சர் பதவியேற்க கூறி ஆதரவு கொடுத்தது.
இந்நிலையில், சுமார் 2.5 வருட ஆட்சிக்குப் பின் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி எதிரணியான ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் புதிய கூட்டணி அரசை அமைத்தார். இது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த பின்னணியில் பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். இந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் 38 இடங்களில் போட்டியிட்டு அதில் 6 இடங்களை வென்றுள்ளது.
இதையும் படிங்க: ரேஷன் கடையில் பிரதமர் மோடி படம் எங்கே? - கலெக்டரை லெப்ட் ரைட் வாங்கிய நிர்மலா சீதாராமன்
இந்த 6 எம்எல்ஏக்களில் ஜோய்கிஷன், சனதே, அச்ஹப் உதின், கஹுதே மற்றும் தங்ஜம் அருண் குமார் ஆகிய 5 பேர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளனர்.இது நிதீஷ் குமாருக்கு முக்கிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அருணாசலப் பிரதேசத்தின் ஐக்கிய ஜனதாதளம் எம்எல்ஏ தேசி காசோ பாஜகவில் இணைந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Manipur, Nitish Kumar