பெங்களூருவில் காற்று மாசுபாட்டை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை - வல்லுனர்கள் வலியுறுத்தல்

சுவாசிக்க தகுந்த காற்று என்று நிர்ணயிக்கப்பட்டதை விட பெங்களூரு மக்கள் 3 முதல் 12 மடங்கு அசுத்தமான காற்றை சுவாசித்து வருவதாக ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன.

பெங்களூருவில் காற்று மாசுபாட்டை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை - வல்லுனர்கள் வலியுறுத்தல்
பெங்களூருவில் காற்று மாசுபாட்டை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை
  • Share this:
சுவாசிக்க தகுந்த காற்று என்று நிர்ணயிக்கப்பட்டதை விட பெங்களூரு மக்கள் 3 முதல் 12 மடங்கு அசுத்தமான காற்றை சுவாசித்து வருவதாக ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன. நகரில் அதிகரித்திருக்கும் வாகனப் போககுவரத்து, நெரிசல், அதிகப்படியான டீசல் பயன்பாடு ஆகியவை காற்றை மிகவும் பாதித்துள்ளன. இதன் காரணமாக பெங்களூரு நகரத்தில் மாசுபாடு அதிகரிப்பது கவலை அளித்துள்ளது.

அறிவியல் மற்றும் சுற்றுச் சூழலுக்கான மையத்தின் (சி.எஸ்.சி) ஆய்வுப்படி, கடந்த 4 ஆண்டுகளில் 57 சதவீதம் அளவுக்கு காற்றில் துகள்கள் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், 85 சதவீத இடங்களில் காற்று மாசுபாடு, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மாசடைந்துள்ளது.

இதகுறித்து, அறிவியல் மற்றும் சுற்றுச் சூழலுக்கான ஆய்வு மைய இயக்குனர் அனுமிதா ராய்சவுத்ரி கூறுகையில், காற்று மாசுபாட்டை சீர் செய்வதில் பெங்களூரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதே நேரத்தில், காற்றில் இருக்கும் மாசுகளின் அளவும் மிக மோசமாக அதிகரித்திருக்கிறது என்று கவலை தெரிவித்துள்ளார்.


இதனை சரி செய்வதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், பொதுப் போக்குவரத்தை அதிகரித்தல், ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து அமைப்பு, கார்களின் பயன்பாட்டை குறைத்தல், சிறு தொலைவுகளுக்கு நடந்தே செல்லுதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தலாம் என்று அனுமிதா பரிந்துரை செய்துள்ளார்.

கர்நாடகாவின் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல்படி (கே.எஸ்.பி.சி.பி), மெஜஸ்டிக், மைசூர் ரோடு, யெலஹங்கா, பீன்யா, கே.ஆர். மார்க்கெட், யெஷ்வந்தபுரா, தோம்ளூர், ஓசூர் ரோடு, ஜெயாநகர், சில்க் போர்டு மற்றும் ஒயிட் ஃபீல்டு ஆகிய 11 பகுதிகள்தான் காற்று மாசு அதிகம் உள்ளவை.

இந்த ஹாட்ஸ்பாட் பகுதிகளில் மற்ற இடங்களை விட நுண்ணிய துகள்கள், கார்பன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள், கருப்பு கார்பன், மீத்தேன் மற்றும் கன உலோகங்கள் மிக அதிகமாக காணப்படுகின்றன.இதைத் தவிர்த்து அதிகப்படியான தொழிற்சாலைகள், மித மிஞ்சிய வாகன போக்குவரத்து, குப்பைகளை எரித்தல் போன்றவையும் காற்று மாசுபாடு அதிகரிப்பதற்கான காரணங்கள் என்று சமூக ஆர்வலர் சந்தீப் அனிருதன் தெரிவிக்கிறார்.

கர்நாடக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 2017 - 18-ல் 15 பகுதிகளில் காற்று மாசுபாட்டை கணக்கிட்டுள்ளது. இவற்றில் ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் காற்று தூய்மையாக இருக்கிறது. 10 இடங்களில் காற்றின் தூய்மை திருப்திகரமாகவும், 4 இடங்களில் பரவாயில்லை என்ற ரகத்திலும் காற்று மாசுபாடு காணப்படுகிறது.

(Source- KSPCB)


உலக சுகாதார நிறுவனமான WHO கூற்றின்படி, பொது சுகாதாரம் சீராக இருக்க வேண்டும் என்றால் அதற்கு காற்று தூய்மையாக இருக்க வேண்டும் என்பது மிக அவசியம். காற்று மாசுபடுத்தும் நைட்ரஜன் டை ஆக்ஸைடு, சல்பர் டை ஆக்ஸைடு ஆகியவற்றால், இதய நோய், பக்கவாதம், நுரையீரல் பாதிப்பு, நுரையீரல் புற்றுநோய், குழந்தைகளுக்கு சுவாசநோய் பிரச்னை, ஆஸ்துமா போன்றவைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களின் நுரையீரல் செயல்பாட்டையும் குறைக்கின்றன. அதேபோல் கர்ப்பிணிகளுக்கு குறைந்த எடையுடன் குழந்தை பிறத்தல், ஆரோக்கியமற்ற குழந்தை பிறப்பதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது இந்த காற்று மாசு பிரச்சனையால்.

பெங்களூரு நகரத்தில் ஒவ்வொரு பகுதியிலும் காற்று மாசு அதிகமாக இருப்பதால், மக்கள் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர் என்று நுரையீரல் மருத்துவ நிபுணரும், இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியருமான மருத்துவர். பரமேஷ் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு காற்று மாசுபாட்டு பிரச்னையை தீர்ப்பதற்கு செய்ய வேண்டியவை :

தனி நபர் வாகனங்கள் பயன்பாட்டை குறைக்க வேண்டும். அதற்காக மலிவான மற்றும் சிறந்த பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டும். ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் சாலைகள், பயண முறைகளை மாற்றி அமைப்பதில் அதிக முதலீடு செய்யப்பட வேண்டும் என அறிவியல் மற்றும் சுற்றுச் சூழலுக்கான ஆய்வு மையம் பரிந்துரைத்துள்ளது.

பெங்களூரு மக்கள் மூச்சி திணறல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும் காற்று மாசு பாதிப்பகளுக்கு ஆளாகக்கூடாது என்று கருதினால், தடுப்பு நடவடிக்கைகளை இப்போதே தொடங்க வேண்டும் என்று அனுமிதா ராய் சவுத்ரி கூறியுள்ளார். 'தனிநபர் வாகன பயன்பாட்டை குறைக்கும் நேரம் இதுதான். பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும், நடை பயணம், சைக்கிள் பயணங்களை ஊக்கப்படுத்த வேண்டும் மற்றும் எரிபொருள் பயன்பாட்டு தரத்தை யூரோ 6 என்ற நிலைக்கு உயர்த்த வேண்டும்' என்று அனுமிதா ராய் பரிந்துரை செய்துள்ளார்.

(இந்த செய்தியின் எழுத்தாளர் 101Reporters.com-ன் அங்கத்தினர்.)
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading