பாஜகவில் இருந்து சமாஜ்வாதி கட்சிக்கு தாவிய ஸ்வாமி பிரசாத் மெளர்யாவின் மகளும், பாஜக எம்.பியுமான சங்கமித்ரா, தன்னை ஒரு பாஜக தொண்டர் என உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் அவரும் தனது தந்தை வழியில் கட்சி தாவலாம் என எழுந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்துக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட இருக்கிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் பாஜகவுக்கு, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கடுமையான சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாஜகவுக்கு கடும் அதிர்ச்சி தந்த நபராக இருந்தவர் ஸ்வாமி பிரசாத் மெளர்யா. அமைச்சராக இருந்த மெளர்யா, திடீரென பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து மேலும் 2 அமைச்சர்களும், 6 எம்.எல்.ஏக்களும் பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.
அதுவரையில் பாஜகவின் கை ஓங்கி இருந்து வந்தது. எனினும் தொடர்ச்சியான கட்சி தாவல்கள் ஆளும் பாஜகவுக்கு கடுமையான அதிர்ச்சியை தந்தது. இருப்பினும் அடுத்த வாரத்திலேயே சமாஜ்வாதி கட்சிக்கு பாஜக பதிலடி தந்தது. அகிலேஷின் சகோதரர் மனைவியான அபர்னா யாதவ் மற்றும் மேலும் ஒரு குடும்ப உறுப்பினர் என அடுத்தடுத்த இருவர் சமாஜ்வாதியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இது தவிர அகிலேஷின் கட்சியில் இருந்து மேலும் சிலரும் பாஜக முகாமுக்கு வந்தனர்.
Also read: காங்கிரஸின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இடம்பிடித்த பிரபலம் பாஜகவில் இணைந்தார்!!
பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடம் செல்வாக்கான நபராக விளங்கி வரும் ஸ்வாமி பிரசாத் மெளர்யாவின் விலகலை தொடர்ந்து அவரின் மகளும் பாஜக எம்.பியுமான சங்கமித்ரா மெளர்யாவும் பாஜகவில் இருந்து விலகக் கூடும் என பலராலும் பேசப்பட்டது. இது குறித்து அவரும் எந்த வித கருத்தும் கூறாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் தான் ஒரு பாஜக தொண்டர் என்று சங்கமித்ரா தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்காக கட்சியினருடன் வந்திருந்த சங்கமித்ரா, தான் ஒரு முழுமையான பாஜக தொண்டர் எனவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்மையானவளாக இருப்பேன் எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Also read: தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பது தீவிரமான பிரச்னை : உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு!!
பதான் எம்.பியான சங்கமித்ரா, பதான் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என அவர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.