கொரோனா 3ஆவது அலை - ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை

கொரோனா - கோப்புப் படம்

கொரோனா 3ஆவது அலை அக்டோபரில் உச்சத்தை அடையும் என கணித்துள்ளனர்.

  • Share this:
    இந்தியாவில் இந்த ஆகஸ்ட் மாதத்திலேயே கொரோனா மூன்றாவது அலை தொடங்க வாய்ப்புள்ளது என்றும், தினமும் ஒரு லட்சம் பேருக்கு குறையாமல் பாதிக்கப்படுவர் எனவும் ஐஐடி வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

    ஹைதராபாத் ஐஐடி ஆய்வாளர்கள் மதுகுமளி வித்யாசாகர், கான்பூர் ஐஐடி ஆய்வாளர் மனிந்திரா அகர்வால் ஆகியோர் கணித முறை அடிப்படையில், கொரோனா 3ஆவது அலையை கணித்துள்ளனர். இது குறித்து, ஆய்வாளர் மதுகுமளி வித்யாசாகர், “கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது, 3ஆவது அலை இந்த ஆகஸ்ட்டு மாதத்திலேயே ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

    அவ்வாறு 3ஆவது அலை ஏற்பட்டால், அக்டோபரில் அது உச்சத்தை அடையும். ஆனால், கொரோனா 2ஆவது அலையைப் போல 3ஆவது அலையில் பாதிப்பு, உயிரிழப்பு இருக்காது. 2ஆவது அலையில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 4 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டனர். ஆனால், 3ஆவது அலையில் ஒரு லட்சம் முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை பேர் பாதிக்கப்படலாம்” என்று கூறியுள்ளார்.

    கொரோனா 2ஆவது அலை குறித்து, ஐஐடி ஆய்வாளர்கள் இருவரும் கணித ரீதியிலான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் குறிப்பிட்டது போலவே, கொரோனா 2ஆவது அலையின் பாதிப்பும் இருந்தது.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதக 40 ஆயிரத்து 134 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,16,95,958 ஆக அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 422 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,24,773 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 36,946 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,08,57,467 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, குணமடைவோர் விகிதம் 97.36 ஆக உயர்ந்துள்ளது.

    Must Read : இந்தியாவில் கொரோனா அதிகரிப்பது ஏன்? எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா விளக்கம்

    கொரோனா தொற்றால், தற்போது 4,13,718 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது 1.31 சதவீதமாக இருக்கிறது. இதுவரை நாடு முழுவதும போடப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 47 கோடியே 22 லட்சத்து 23 ஆயிரத்து 639 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சத்தீஷ்கார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து ஓராண்டிற்குப் பின்னர் பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன.
    Published by:Suresh V
    First published: