உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா இருப்பதாக பரவலாக கூறப்படும் நிலையில், சீனா தாக்கினால் ரஷ்யா உதவிக்கு வராது என இந்தியாவை அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யாவை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தும் வேலைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா முக்கிய பங்கை வகிக்கும் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா செயல்படுத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது இந்தியா வாக்களிப்பதில் இருந்து விலகியது. மேலும், ரஷ்யா தனக்குரிய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது.
இந்தியாவின் ரஷ்யா ஆதரவு நிலைப்பாட்டால் எரிச்சலடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யாவை எதிர்க்க இந்தியா நடுங்குவதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
உக்ரைனில் போர் தொடர்ந்து வரும் நிலையில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ரஷ்யா சில நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தது. இந்த சூழலை பயன்படுத்தி உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்தியா வந்துள்ள அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் தலீப் சிங் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'ரஷ்யா தனது அடாவடித்தனமான போக்கை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அந்நாட்டின் மீது தொடர்ந்து பொருளாதார தடைகள் விதிக்கப்படும்.
சீனாவும், ரஷ்யாவும் அண்டை நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றன. இந்தியா மீது சீனா மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தினால் அப்போது இந்தியாவுக்கு உதவ ரஷ்யா வராது. இந்த எச்சரிக்கையை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்.' என்று தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமைச்சரவையில், சர்வதேச பொருளாதார விவகாரங்களை தலீப் சிங் கையாண்டு வருகிறார். சமீப வாரங்களாக ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டதற்கு தலீப் சிங்கே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India vs China, Russia - Ukraine