அசாம் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கொட்டி தீர்க்கும் கன
மழை காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த மழை வெள்ளத்தில் சில்சார் - கௌஹாத்தி விரைவு ரயில் அம்மாநிலத்தின் காச்சர் என்ற பகுதியில் சிக்கிக் கொண்டது. பல மணிநேரம் நடு வழியிலேயே சிக்கித் தவித்த ரயிலில் சுமார் 1,300 பயணிகள் இருந்துள்ளனர். இதில் 1,200 பாலத்தின் வழியாக இறங்கி நடந்து மற்றொரு சிறப்பு ரயிலுக்கு சென்றுள்ளனர். அதேவேளை, நடந்து செல்ல முடியாத வயது முதிர்ச்சி அடைந்த பயணிகள் 119 பேரை இந்திய விமானப்படை தனது விமானம் மூலம் மீட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் மழை வெள்ளம் காரணமாக 17 ரயில்கள் ரத்தாகியுள்ளன. 26 இடங்களில் ரயில் தண்டவாளங்கள், பாலங்கள் சேதமடைந்துள்ளது. பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை ராணுவத்தின் ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நிலச் சரிவு ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை வெள்ள பாதிப்பு காரணமாக 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் 222 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த வெள்ளதில் 10,321044 ஹெக்டேர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதாக இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது. அங்குள்ள கோப்ளி நதி 2004ஆம் ஆண்டுக்குப் பின் தற்போதுதான் அதிக பட்ச நீர் மட்டத்தை எட்டியுள்ளது.
அடுத்த ஐந்து நாள்களுக்கு அசாமில் கனமழை நீட்டிக்கும் என்பதால், அங்குள்ள கச்சார், தேமாஜி, கரிம்கஞ்ச் மற்றும் நகோவான் மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 29 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த இரு மாதங்களில் மட்டும் இயல்பை விட 40 சதவீதம் அதிகமான மழை அசாம் மாநிலத்தில் பொழிந்துள்ளது.
இதையும் படிங்க:
புத்த பூர்ணிமா அன்று புத்தர் பிறந்த நேபாளத்திற்கு சென்ற பிரதமர் மோடி
அசாமைப் போலவே அதன் அண்டை மாநிலங்களான மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் கன மழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த அசாமிற்கு முதல் கட்டமாக ரூ.125 நிதி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.