பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய விமானப் படை விங்க் கமாண்டர் அபிநந்தன் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக, பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தின. இந்திய விமானப்படையும் எதிர் தாக்குதல் நடத்தியது. அப்போது பாகிஸ்தான் எல்லையில் விபத்துக்குள்ளான இந்திய போர் விமானத்தில் இருந்த விங்க் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. அபிநந்தன் பாகிஸ்தான் வசம் சிக்கியிருப்பதற்கான வீடியோக்களும் வெளியிடப்பட்டன.
ஜெனிவா ஒப்பந்தத்தின்படி அபிநந்தனை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்தது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும் அபிநந்தனை விடுவிக்க வலியுறுத்தின.
இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுவிப்பதாக அறிவித்தார். தற்போதைய சூழல் குறித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட இம்ரான் கான், புல்வாமா தாக்குதலில் எந்தவித ஆதாரமுமின்றி பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டியதாகவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அபிநந்தனை வாகா எல்லையில் இன்று மாலை பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கின்றனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமோ அல்லது இந்திய அதிகாரிகளிடமோ அவர் ஒப்படைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அபிநந்தன் ஒப்படைக்கப்படுவதை அடுத்து அவரைக் காண பெற்றோர் சிம்மகுட்டி வர்த்தமான், ஷோபனா ஆகியோர் சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
அபிநந்தனை வாகா எல்லைக்கே நேரில் சென்று வரவேற்க பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.
Also Watch: தைரியம், தன்னம்பிக்கை, ஆளுமை – டிடிவி தினகரன்.. நடிகர் ரஞ்சித் trolls
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Abhinandan, Pakistan Army, PM Imran Khan