தவறான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் 2001-ல் சிறையில் தள்ளப்பட்ட விஷ்ணு திவாரியை நிரபராதி என்று அலகாபாத் நீதிமன்றம் விடுதலை செய்ய 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்து, 43 வயதில் வெளிஉலகத்தைக் கண்டு திக்குமுக்காடிப் போயுள்ளார்.
தானோ படிக்காதவன், பெற்றோர், சகோதரர்களையும் பறிகொடுத்து விட்டேன், இனி வாழ்வது எப்படி, எங்கிருந்து தொடங்குவது? என்று கண்ணீருடன் கேட்கிறார் விஷ்ணு திவாரி.
விடுதலையாகி உத்தரப் பிரதேச லலித்பூர் மாவட்டத்தில் உள்ள சிலாவன் கிராமத்தைச் சேர்ந்தவர் இவர்.
உலகமே மாறிவிட்டது இப்போது, 20 வயதில் சிறைக்குச் சென்ற விஷ்ணு திவாரி 43 வயதில் வெளியே வருகிறார். “அப்போதெல்லாம் போன்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், எஸ்டிடீ பூத்களைத்தான் பார்த்திருக்கிறேன். மொபைல் போன்களை பார்த்ததில்லை, ஆனால் அவை இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். எல்லாம் மாறிவிட்டது, என் கிராமம், என் மாவட்டம், ஏதோ புதிய உலகத்தில் இருப்பது போல் உணர்கிறேன். சந்தைகள் ஏகத்துக்கும் மாறிவிட்டன” என்றார்.
திவாரியின் தந்தை ராமேஷ்வர் திவாரி 2013-ல் இறந்தார். இது நடந்து ஓராண்டுக்குள் தாயார் ராம் ஷாகி இறந்தார். 2 சகோதரர்கள் மாரடைப்புக்கு காலமானார்கள். ஆனால் இவர்கள் யாரையும் அவரால் பார்க்க முடியவில்லை, இவர்களது இறுதிச் சடங்கிலும் கலந்து கொள்ள முடியவில்லை. ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் கூறியதாவது:
“இறக்கும் தாய் தந்தையரை பார்க்கக் கூட முடியாத பாவியாகி விட்டேன். இறுதி செய்ய சடங்கு செய்ய முடியாமல் போனது என்பதை விட இறுதிச் சடங்குகளை பார்க்க கூட கொடுப்பினை இல்லாதவனாகி விட்டேன்.

விஷ்ணு திவாரியின் வீடு.
எனக்கு அவர்கள் நான் சிறையில் இருக்கும் போது கடிதம் எழுதுவார்கள், எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது, சிறையில் யாராவது படித்துக் காட்டினால்தான் உண்டு. அப்போது நான் பதில் எழுத பிறரை நாடி எழுதியிருக்கிறேன். ஆனால் எனக்கு என் பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் தேவையான காலத்தில் அவர்கள் உலகை விட்டு பிரிந்தனர். அவர்களிடம் தொலைபேசியில் கூட பேச முடியவில்லை.
என் குடும்பத்தின் பொருளாதார நிலைமைகளும் சரிந்து கொண்டே வந்தது. 2000-ம் ஆண்டில் 6-7 எருமை மாடுகளை வைத்திருந்தோம். எங்களது மூதாதையர் நிலங்களையும் வழக்கறிஞருக்கு செலவு செய்ய விற்று விட்டனர்.
இப்போது 43 வயதில் நான் எப்படி, எங்கிருந்து என் வாழ்க்கையை தொடங்குவது? திறமையும் என்னிடம் இல்லை, என் உறவினர்களும் இல்லை, நான் திருமணமும் செய்து கொள்ள முடியாது. எனக்கு ஒரே ஒரு சகோதரன் அவனும் சாமியாராகப் போய்விட்டான்.
சிறையில் முதலிலெல்லாம் என் செல்லில் சுவற்றில் அடையாளம் செய்து தினங்களை எண்ணி வருவேன். ஆனால் அது இன்னமும் என்னை பயமுறுத்தியதால் நிறுத்தி விட்டேன். தினமும் சிறையில் கடுமையாக உழைப்பேன். இதனால் இரவில் தூக்கம் நன்றாகவந்தது.
என்னால் சிறையில் இருக்கவே முடியவில்லை, இரவில் கதற வேண்டும்போல் கத்த வேண்டும்போல் இருக்கும். சிறையில் செத்தொழியலாம் என்றே நினைப்பேன். நாங்கள் கும்பிடும் ‘மாதா ராணி’ தெய்வம் என் கனவில் வந்து தைரியம் கூறுவாள். ஆனால் உள்ளுக்குள் குமுறுவேன்.
சிறையில் ஒவ்வொரு நாளும் நம் ஆன்மா வலியுடன் செத்துக் கொண்டுதான் இருக்கும். இந்த 20 ஆண்டுகளில் நான் சாகவே பலமுறை விரும்பினேன். இப்போது 43 வயதாகி விட்டது, வாழ்க்கையின் அரைக்கிணறை தாண்டி விட்டேன், இனி என்ன இருக்கிறது?” என்று அவர் கண்ணீர் உகக்க கூறியுள்ளார்.