கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கியது ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை. 12க்கும் மேற்பட்ட மாநிலங்களை கடந்து ஹரியானாவிற்கு கடந்த ஞாயிறு அன்று வந்தார். அப்போது குருஷோத்ரம் பகுதியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் ராகுல் காந்தி பதிலளித்தார். சந்திப்பின் போது, இந்த யாத்திரை ராகுல் காந்தியின் இமேஜை எவ்வாறு மாற்றியதாக நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "நீங்கள் நினைத்துக் கொண்டு இருக்கும் ராகுல் காந்தியை கொன்று விட்டேன்" என்றும் அதைப் பற்றி கவலைப்படவில்லை என்றும் கூறினார்.
ராகுலின் இந்த பேச்சை ஒரு நிமிடம் பத்திரிகையாளர்கள் உற்று கவனித்தனர். பின்னர் "யாரும் வியப்பு அடைய வேண்டாம். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கொள்ள கடவுள் சிவன் மற்றும் இந்து சமயம் குறித்து வாசியுங்கள். ரொம்ப குழம்பிக் கொள்ள வேண்டாம். நீங்கள் நினைத்துக் கொண்டு இருக்கும் ராகுல் காந்தி என்னிடம் இல்லை. பாஜக நினைத்துக் கொண்டு இருக்கும் ராகுல் காந்தி என்னிடம் இல்லை. எனது பிம்பத்தை பற்றி நான் கவலைப்படுவதில்லை. நீங்கள் விரும்பிய படி என்னைப் பற்றி நினைத்துக்கொள்ளலாம். அது உங்களைப் பொறுத்தது. அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. நான் எனது பணியை செய்ய வேண்டும்" என்று விளக்கம் அளித்தார்.
அதோடு ஹரியானாவில்தான் மகாபாரத போர் நடைபெற்றது. தற்போது அதே ஹரியானாவில் இருந்து ஒரு புதிய மகாபாரத யுத்தத்தை நாம் தொடங்கப் போகிறோம். இந்த யுத்தமும் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையேதான் நடக்கப் போகிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தான் 21ம் நூற்றாண்டின் கவுரவர்கள். மக்களிடம் வெறுப்பை விதைப்பவர்கள். அப்பாவி மக்களை சித்ரவதை செய்து ரசிப்பவர்கள். அவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? காக்கி டவுசர் அணிந்திருப்பார்கள். கையில் கம்பு ஒன்றை வைத்திருப்பார்கள். அவர்களுக்கு 2, 3 கோடீஸ்வரர்கள் துணையாக இருப்பார்கள்.
ஆனால் காங்கிரஸ் அணி எனும் பாண்டவர்கள் வெற்றியை தடுக்க முடியாது முந்தைய மகாபாரத யுத்தத்தை போலவே, தற்போதைய மகாபாரத யுத்தத்திலும் பாண்டவர்கள் முதலில் தோல்வி அடைவதை போல தோன்றும். ஆனால் இறுதியில் வெற்றிபெறப் போவது என்னவோ பாண்டவர்கள்தான் என்று பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Haryana, RahulGandhi