அந்த இரவுபொழுதை என் வாழ்நாளில் மறக்க முடியாது - மும்பை மருத்துவமனை தீவிபத்தில் உயிர்பிழைத்த வயதான பெண்

மும்பை மருத்துவமனை தீ விபத்து

அந்த இரவு பொழுதை என் வாழ்நாளில் நான் மறக்க முடியாது என கண்ணீருடன் விவரிக்கிறார் மும்பை சன்ரைஸ் மருத்துவமனை தீ விபத்தில் இருந்து உயிர்பிழைத்த மாதுரி கோத்வானி.

 • Share this:
  மும்பை பாந்தூப் பகுதியில் உள்ள ட்ரீம்ஸ் மால் வணிக வளாகத்தில் 3-வது தளத்தில் சன்ரைஸ் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 78 வயதான சேட்டன் கோத்வானி அவரது மனைவி மாதுரி கோத்வானி அனுமதிக்கப்பட்டிருந்தனர். வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவு 11 மணியளவில் இவர்களுக்கு தனியறை ஒதுக்கப்பட்டுள்ளது. சேட்டன் கோத்வானி உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் செயற்கை சுவாச கருவிகள் அவருக்கு பொருத்தப்பட்டிருந்தது.

  மருத்துவமனை தீ விபத்தில் உயிர்பிழைத்த திக் திக் நிமிடங்களை விவரிக்கிறார் மாதுரி கோத்வானி. ‘நான் தங்கியிருந்த அறையில் புகை வருவதை கண்டேன். உடனடியாக வார்ட் பாயை உதவிக்கு அழைத்தேன். ஆனால் அவரோ ஒரு திசையை நோக்கி கையால் செய்கைகாட்டி அந்தப்பக்கமாக ஓடுங்கள் எனக்கூறி விட்டு சென்றுவிட்டார். என் கணவரால் எழுந்திருக்க கூட முடியாது. நான் அவரை நினைத்து கண்ணீர் வடித்தேன். அப்போது ஒரு இளைஞர் இரண்டு வயதானவர்களுக்கு உதவி செய்துக்கொண்டிருந்தார். என் கணவரை இழுத்துக்கொண்டே அவர்களுக்கு பின்னால் சென்றேன். அந்த இருட்டு அறையில் என கணவரை இழுத்துக்கொண்டு சென்றதை என் வாழ்நாளில் நான் மறக்க முடியாது.

  மின்சாரம் வந்ததும் லிஃப்ட் வேலை செய்யத் தொடங்கியது. லிஃப்டில் முதல்தளத்துக்கு வந்து அங்கிருந்து படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கி வந்தோம். வெளியே வந்து பார்த்தபோது என் கணவரின் கைகளில் ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது. நான் உடனடியாக என் மகனுக்கு அழைத்தேன் அவன் வரும்வரை குழப்பத்தோடு சாலையில் காத்திருந்தேன்” என்றார்.

  வயதான தம்பதியின் மகன் லலித் பேசுகையில், ‘நான் வந்தபோது என் அப்பா கைகளில் ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது. அம்மா அழுதுக்கொண்டிருந்தார். மருத்துவமனையில் எங்களுக்கு ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. 8000 ரூபாய் கொடுத்து தனியார் ஆம்புலன்ஸை வரவழைத்தேன். அந்த இரவில் நிறைய மருத்துவமனைகளுக்கு சென்று அங்கு படுக்கை வசதி இல்லை என்று அனுப்பினர். காலை 4 மணிக்கு தானேவில் உள்ள விராஜ் மருத்துவமனையில் அனுமதித்தோம். என் கையிலும் சுத்தமாக பணம் இல்லை. ஒரு லட்சம் ரூபாயை முன்பணமாக சன்ரைஸ் மருத்துவமனையில் செலுத்திவிட்டேன். நான் பணியாற்றும் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு என்னுடைய சம்பளப் பணத்தை முன்கூட்டியே தருமாறு கேட்டுள்ளேன். சன்ரைஸ் மருத்துவமனை நிர்வாகமும் எங்களை அணுகவில்லை.எங்களுக்கு அழைப்புகளுக்கும் அவர்கள் பதிலளிக்கவில்லை.” என்றார்.
  Published by:Ramprasath H
  First published: