தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர் பகுதியில் தொழிலாளியை கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மத்தியில், பட்டப்பகலில் தொழிலாளி ஒருவரை கும்பல் சுற்றிவளைத்து வெட்டிக் கொலை செய்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகரில் அமைந்துள்ள அப்சல்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் சாய்நாத். இவர் கண்ணாடி அறுக்கும் வேலை செய்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை மாலை வேலை முடிந்து தனது இருசக்கரவாகனத்தில் ஜெகன் வீடு திரும்பி கொண்டிருந்தார்.அப்போது அப்சல்கஞ்ச் பகுதியில் வழிமறித்த 3 பேர் கும்பல் அவரை இருசக்கரவாகனத்தில் இருந்து கீழே தள்ளியது.
மூன்று பேரின் கைகளிலும் இரும்பு ராடு, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்ததைப் பார்த்த ஜெகன் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். அவரை விரட்டி சென்ற கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக அடித்தும், வெட்டியும் படுகொலை செய்தது. பட்டப்பகலில் பலர் கண் முன் இந்த சம்பவம் நடைபெற்றது. ஆனால் யாரும் தடுக்க முன்வரவில்லை.இந்நிலையில் ஒரு சிலர் படுகொலை காட்சிகளை தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனிடையே கொலையாளிகள் 3 பேரும் அங்குள்ள மூசி நதியில் குதித்து நீந்தி மறுபுறம் தப்பி சென்று விட்டனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகொலை செய்யப்பட்ட ஜெகன் சாய்நாத் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ரவுடி கும்பல்களுக்கிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.செல்போன் வீடியோ காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
ஹைதராபாத்தில் இதுபோல் பட்டப்பகல் வன்முறை பலமுறை நடைபெற்றுள்ளது. இதனால் நகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பொருட்படுத்தாமல் நடைபெற்ற இந்த படுகொலை சம்பவம் பொது மக்களிடையே பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News