நமது நாட்டில் விமான பயணம் என்பதே பலருக்கும் கனவாக தான் உள்ளது. அப்படி என்றாவது ஒருநாள் வாய்ப்பு கிடைத்து விமானத்தில் பறக்கும் சாமானிய மக்கள் அல்லது முதல் முறையாக விமான பயணத்தை தொடங்கும் நபர்களுக்கு அந்த பயணம் தங்களது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். ஆனால் இங்கு நாம் பார்க்கப்போகும் வீடியோவில், விமானியாக இருக்கும் கணவன், முதன் முறையாக விமானத்தில் பயணியாக வந்துள்ள தனது மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜஹ்ரா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், அவரது கணவர் அல்னீஸ் விரானி விமானத்தில் விமானி இருக்கையில் அமர்ந்து கொண்டு, வெளியே விமானத்தில் ஏற வரும் தனது மனைவியை பார்த்து கை அசைப்பது பதிவாகியுள்ளது. அவரது கணவரின் அன்பான மற்றும் ஆச்சரியமான சைகையால் சிவந்த முகத்துடன் ஜஹ்ரா சிரித்துக்கொண்டே செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில், ஜஹ்ரா மும்பை செல்லும் வழியில் விமானத்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தபோது, விமானத்தில் அறிவிப்பு செய்பவரின் குரல் நன்கு அறிமுகமானவராக இருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைகிறார். அல்னீஸ் தனது மனைவியின் விமான பயணத்தை மறக்க முடியாததாக மாற்றும் ஒரு குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டதாக தெரிகிறது.
வீடியோவில் இண்டிகோ விமானியான அல்னீஸ் விரானி, "சில சமயங்களில் உங்களது விமான பயணம் சிறப்பானதாக அமையும். அப்படி ஒரு ஸ்பெஷல் பயணமாக இன்று இந்த விமானம் மாறியுள்ளது. இந்த விமானத்தில் எங்களுடன் ஒரு குறிப்பிட்ட பயணி இருக்கிறார். எனது மனைவியை மும்பைக்கு விமானத்தில் ஏற்றிச் செல்லும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. இந்த செய்தியை விமானத்தில் உள்ள உங்கள் அனைவருடனான மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என பேசுகிறார்.
இந்த வீடியோவை பதிவிட்டுள்ள அவரது மனைவி ஜஹ்ரா "அவர் எனக்காக அதை செய்வார் என்று எனக்கு எந்த ஐடியாவும் இல்லை," என பதிவிட்டுள்ளார். மேலும் "இன்னும் ஒருமுறை சொல்கிறேன், உங்கள் மனைவியாக இருப்பது எனது மிகப்பெரிய ஆசீர்வாதம்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி பலரது வாழ்த்துக்களையும், கமெண்ட்களையும் குவித்து வருகிறது.
தொடர்ந்து விமான பயணங்களை மேற்கொள்வதாலும், குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பதாலும் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகும் விமானிகளுக்கு இதுபோன்ற சந்தர்ப்பம் அரிதாகவே கிடைக்கும். எனவே தான் தனது மனைவி விமானத்தில் ஏறி உள்ள நொடி முதல் அவர் இருக்கையில் அமர்ந்தது முதல் அவரது பயணத்தை அல்னீஸ் விரானி அற்புதமானதாக மாற்றி, இணையத்தில் ஏராளமானோரது இதயத்தை அள்ளியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.