ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் நாளை பிரம்மாண்ட பேரணி!

சரயூ நதிக்கரையில் நடைபெற்ற ஆரத்தி வழிபாட்டில் பங்கேற்ற உத்தவ் தாக்கரே

அயோத்தியில் ராமர் கோவில் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு தாமதமாகி வருவதால் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என இந்துத்துவா அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் சிவசேனா மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் சார்பில் நாளை பிரம்மாண்ட பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

  உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு தாமதமாகி வருவதால் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என இந்துத்துவ அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சிவசேனா உள்ளிட்ட அமைப்புகள் அயோத்தியில் நாளை பிரம்மாண்ட பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளன.

  இந்தப் பேரணியில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. இதனிடையே அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பேரணியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பங்கேற்க உள்ளதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

  இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, மத்திய அரசு தன் தோல்விகளை மறைப்பதற்காகவே ராமர் கோவில் விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இது பாஜகவின் அரசியல் உத்தியே தவிர வேறில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

  பாஜகவுக்கு உச்சநீதிமன்றத்தின் மீதோ, அரசியல் சாசனத்தின் மீதோ நம்பிக்கையில்லை என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். பாஜக இந்த விவகாரத்தில் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதால், சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு உச்சநீதிமன்றம் ராணுவத்தை வரவழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுதியுள்ளார்.

  இதனிடையே நாளை நடைபெறும் பிரம்மாண்ட பேரணியில் பங்கேற்பதற்காக உத்தவ் தாக்கரே, இன்று அயோத்தி சென்றடைந்தார். சரயூ நதிக்கரையில் மாலையில் நடைபெற்ற ஆரத்தி வழிபாட்டில் அவர் பங்கேற்றார்.

  ராமர் கோவில் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாபா ராம்தேவ், ராமர் கோவில் கட்டுவதற்கான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில் மக்களே கோவிலை கட்டத் தொடங்கி விடுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

  அயோத்தியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் உத்தரப் பிரதேச மாநில சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அனந்த் குமார் தெரிவித்துள்ளார். பேரணியின்போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் காவல்துறை தடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  Also watch

  Published by:DS Gopinath
  First published: