அசாமில் இல்லத்தரசிகளுக்கு ரூ.2,000 வழங்கப்படும் - ராகுல் காந்தி வாக்குறுதி

ராகுல் காந்தி

அசாமில் இல்லத்தரசிகளுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 5 தேர்தல் வாக்குறுதிகளை ராகுல் காந்தி இன்று அறிவித்துள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு திமுக ரூ.1,000ம், அதிமுக ரூ.1,500ம் தருவதாக கூறியுள்ளன. மேற்குவங்கத்திலும் மம்தா பானர்ஜி இல்லத்தரசிகளுக்கு 1,000 ரூபாய் தருவதாக அறிவித்துள்ளார்.

  • Share this:
அசாமில் இல்லத்தரசிகளுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 5 தேர்தல் வாக்குறுதிகளை ராகுல் காந்தி இன்று அறிவித்துள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு திமுக ரூ.1,000ம், அதிமுக ரூ.1,500ம் தருவதாக கூறியுள்ளன. மேற்குவங்கத்திலும் மம்தா பானர்ஜி இல்லத்தரசிகளுக்கு 1,000 ரூபாய் தருவதாக அறிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் தான் நேரடியான கள மோதல். இந்த நிலையில் தேர்தல் பரப்புரைக்காக 2 நாள் சுற்றுப்பயணமாக அசாம் வந்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, திப்ருகாரின் லாகோவால் எனும் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதனையடுத்து திப்ருகாரில் உள்ள திஞோய் தேயிலை எஸ்டேட்டில் தேயிலை தோட்ட பணியாளர்களையும் சந்தித்து பேசினார்.

அப்போது “அசாமில் தேயிலை தொழிலாளிகளுக்கு 365 ரூபாய் தருவதாக பாஜக உறுதி அளித்தது. ஆனால் 167 ரூபாய் தான் தருகிறது. நான் நரேந்திர மோடி அல்ல பொய் சொல்வதற்கு. இன்று நான் உங்களுக்கு 5 உறுதிமொழிகளை அளிக்கிறேன்.

அசாமில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் தேயிலை தொழிலாளர்களுக்கு 365 ரூபாய் சம்பளம் தருவோம், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம், 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தருவோம், 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் மற்றும் குடும்ப தலைவிகளுக்கு 2,000 ரூபாய் தருவோம்.”

ராகுல் காந்தி அணிந்திருந்த டி-ஷர்ட்டிலும் CAA என்ற எழுத்துக்கள் அடிக்கப்பட்டிருந்தது. அசாமில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி நாளை பொதுக்கூட்டத்தில் வெளியிட உள்ளார்.

முன்னதாக கல்லூரி மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடுகையில், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசினார். தேர்தல் நேரத்தில் மட்டுமே பிரதமர் அசாமுக்கு வருவார் என அவர் தாக்கி பேசினார்.

வெள்ளம் வந்த போது நீங்கள் பிரதமருக்கு கொடுக்க எதுவும் இல்லை என்பதால் அவர் இங்கு வரவில்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் வாக்கு அளிப்பீர்கள் என்பதால் அவர் இங்கு வருகிறார் என்றார் ராகுல் காந்தி.

ஜனநாயகம் குறைந்துகொண்டே வருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை, விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கின்றனர். குடியுரிமை திருத்த சட்டம் அமலாகி உள்ளது. மாணவர்கள் இல்லாமல் ஜனநாயகம் கிடையாது, எனவே மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று ராகுல் பேசினார்.
Published by:Arun
First published: