1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இந்திய ரூபாய் நோட்டில் ஒரு மனிதரின் படம் இடம் பெற்றுள்ளது என்றால் அது அண்ணல் காந்தியின் படம் மட்டுமே. சுதந்திரத்திற்கு முன்னர் பிரிட்டன் மன்னரின் படம் இடம் பெற்றிருந்த நிலையில், அவரின் படம் மாற்றப்பட்டு சாரநாத் சிங்கமுகத் தூண்களின் படம் பயன்படுத்தப்பட்டது. சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே காந்தியின் படத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 1969ஆம் ஆண்டில் தான் முதல் முதலாக காந்தியின் படம் ரூபாய் நோட்டில் இடம் பிடித்தது.
காந்தியின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் 1969இல் நடைபெற்ற நிலையில், அந்த நிகழ்வை கவுரவிக்கும் விதமாக இந்திய ரூபாய் நோட்டில் முதல் முறையாக காந்தியின் படம் சேர்க்கப்பட்டது. அன்று ரூ.100 நோட்டில் முதல் முறையாக காந்தி படம் இடம் பிடித்த நிலையில், பின்னர் 1987ஆம் ஆண்டில் ரூ.500இல் காந்தி புன்னகை செய்யும் படம் சேர்க்கப்பட்டது. அன்றிலிருந்து ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
காந்தியின் படத்துக்கு முன்னதாக பல்வேறு படங்கள் ரூபாய் நோட்டில் இடம் பிடித்திருந்தன. 1949ஆம் ஆண்டு ஒரு ரூபாய் நோட்டில் அசோக தூண் பயன்படுத்தப்பட்டது. 1954ஆம் ஆண்டுகளில் ரூ.1,000, ரூ.5,000, ரூ.10,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. ரூ.1,000 நோட்டில் தஞ்சை பெரிய கோயில் கோபுரம், ரூ. 5,000இல் கேட்வே ஆப் இந்தியா, ரூ.10,000 நோட்டில் சிங்கத்தூண் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் 1978ஆம் ஆண்டில் மேற்கண்ட உயர் மதிப்பு நோட்டுளை பண மதிப்பு நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது. இதையடுத்து 1980ஆம் ஆண்டில் புதிய வகை நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
இதையும் படிங்க:
உலக சுற்றுச்சூழல் தினத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு அசத்திய கிராமத்தினர்
பின்னர் ரூபாய் நோட்டுகளில் விஞ்ஞானி ஆரியபட்டா, வேளாண் உபகரணங்கள், இந்திய கலை வடிவங்கள், கோனார்க் சக்கரம், மயில் ஆகியவை இடம் பிடித்தன.பின்னர் 1996இல் மகாத்மா காந்தி வரிசை நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் சிறப்பு வாட்டர் மார்குகள், பார்வையற்றவர்களுக்கு ஏதுவான சில அம்சங்கள் சேர்க்கப்பட்டன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.