அசாம் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து அடுத்த அம்மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்புக்கு விடை கிடைத்திருக்கிறது. தற்போதைய பொறுப்பு முதல்வர் சர்பானந்தா சோனோவால் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகிய இருவருக்கிடையே முதல்வர் போட்டி எழுந்தது.
இதனிடையே சட்டமன்ற பாஜக குழுத் தலைவரை தேர்வு செய்வதற்காக கவுகாத்தியில் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை அசாமின் புதிய முதல்வராக ஒருமனதாக கூடி தேர்ந்தெடுத்துள்ளனர். தற்போதைய பொறுப்பு முதல்வர் சர்பானந்தா சோனோவால், ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் பெயரை முன்மொழிந்ததாக பாஜக வட்டாரம் கூறுகிறது.
கவுகாத்தியில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மத்திய பார்வையாளர்களாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பொதுச் செயலாளர் அருண் சிங், அசாம் பாஜக பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா ஆகியோரும் கலந்து கொண்டனர். முன்னதாக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக சர்பானந்தா சோனோவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநர் ஜகதிஷ் முகியிடம் கடிதம் அளித்தார். இருப்பினும் புதிய அரசாங்கம் அமையும் வரை முதல்வர் பதவியில் நீடிக்கும்படி ஆளுநர் சர்பானந்தாவிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இன்று மாலை பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடித்தத்துடன் ஆளுநர் ஜகதிஷ் முகியை சந்தித்து புதிய அரசு அமைப்பதற்கான உரிமையை கோர இருக்கிறார் ஹிமந்தா பிஸ்வா சர்மா. இதனையடுத்து நாளை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அசாமின் புதிய முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவியேற்றுக்கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்வார் என தெரியவந்துள்ளது.
முன்னதாக அசாம் முதல்வரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் சர்பானந்தா சோனோவால் ஆகியோரை டெல்லி வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று காலை டெல்லியில் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் சர்பானந்தா சோனோவால், ஹிமந்தா பிஸ்வா சர்மா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
வட கிழக்கு மாநிலங்களுக்கான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயாக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும், அசாம் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்து வரும் ஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் 15வது முதலமைச்சராக நாளை பதவியேற்க உள்ளார். 52 வயதாகும் ஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் ஜலுக்பரி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1996 முதல் 2015 வரை காங்கிரஸ் கட்சியில் இருந்த ஹிமந்த பிஸ்வா சர்மா 2015ம் ஆண்டு அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 2016 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இவர் 2001ம் ஆண்டு தொடங்கி 5வது முறையாக தொடர்ந்து ஜலுக்பரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Assam, Assam Assembly Election 2021, BJP