தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, தனது பணி காலத்தில் பங்கு சந்தையின் ரகசிய தகவல்களை இமயமலையில் இருக்கும் சாமியார் ஒருவரிடம் பகிர்ந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், அந்த சாமியார் யார் என்ற முக்கிய தகவல் கசிந்துள்ளது.
தேசிய பங்கு சந்தையின் (NSE) முன்னாள் நிர்வாக இயக்குனராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. பங்குச்சந்தை குறித்த ரகசிய தகவல்களை இவர் வெளியில் பகிர்ந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக செபி (SEBI) விசாரணை நடத்தியது. விசாரணையில், முகம் தெரியாத சாமியார் ஒருவரிடம் பங்குச்சந்தை ரகசியங்களை சித்ரா பகிர்ந்துகொண்டதோடு, அவரது ஆலோசனைப்படி ஆனந்த் சுப்பிரமணியனை தலைமை திட்ட ஆலோசகராக நியமித்து அவருக்கு பலமுறை ஊதிய உயர்வு வழங்கினார் என்பதும் தெரியவந்தது.
சித்ராவின் பதவிக் காலத்தில் சாமியார்தான் தேசிய பங்குச் சந்தையின் தலைமை அதிகாரிபோல் செயல்பட்டதாகவும், சித்ரா அவரின் பொம்மையாக இருந்தார் எனவும் செபி (SEBI)குற்றம் சாட்டியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக செபி தரப்பில் ரூ. 3 கோடி அபராதமும், பங்குச் சந்தை நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு 3 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி சென்றனர்.
சித்ரா ராமகிருஷ்ணா மூலம் தேசிய பங்குச்சந்தையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த அந்த இமயமலை சாமியார் யார் என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. இதற்கு இதுவரை பதில் கிடைக்காமலேயே உள்ளது. இந்நிலையில், அப்படி ஒரு சாமியார் இல்லை என்றும் மத்திய நிதியமைச்சகத்தின் முன்னாள் அதிகாரியாக அவர் இருக்கலாம் என்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: சர்வதேச தாய்மொழி தினம் : இந்தியாவில் பேசப்படும் தாய் மொழிகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
அந்த நபர் கேப்பிடல் மார்கெட் சந்தையைச் சீர்படுத்தும் பணியில் இருந்திருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்றும் சித்ரா ராமகிருஷ்ணா தேசிய பங்குச் சந்தையில் உயரிய இடத்திற்கு செல்ல அவர் உதவியிருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. பலரும் இந்த வழக்கில் ஆனந்த் சுப்பிரமணியன் தான் அந்த முகம் தெரியாத சாமியார் என்ற அபிமானத்தை முன்வைத்தாலும் அப்படி இருக்க வாய்ப்பு இல்லை என்றே செபி திட்டவட்டமாக கூறி வருகிறது.
ஆனந்த் சுப்பிரமணியனை முகம் தெரியாத சாமியார் என வைத்துகொண்டால், பங்குச்சந்தை தொடர்பான ரகசிய தகவல்களை வெளிநபருக்கு சித்ரா பகிர்ந்தார் என்ற முக்கிய குற்றச்சாட்டு வலுவிழந்துவிடும். சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு இ.மெயில் மூலம் ஆலோசனை வழங்கிய அந்த முகம் தெரியாத சாமியார் பங்குச்சந்தையில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்துள்ளார். ஆனால், ஆனந்த் சுப்பிரமணியனுக்கு அந்த அளவு நிபுணத்துவம் கிடையாது என்றும் கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.