ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஹிஜாப் அணிவது மத உரிமை என்றும் கல்வி நிலையங்களின் ஹிஜாப் அணிவதை எந்த சட்டமும் தடுக்கவில்லை என்றும் வாதங்களை முன் வைத்தார்.
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அம்மாநில உயர் நீதிமன்றம், தலைமை நீதிபதி அடங்கிய கூடுதல் அமர்வுக்கு வழக்கு விசாரணையை மாற்றியது. அதன்படி, தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் நீதிபதி ஜேஎம் காஜி அடங்கிய அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
ஜூம் மீட்டிங் வழியாக காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற வழக்கின் விசாரணை கர்நாடக உயர் நீதிமன்ற யூடியூப் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் மாணவிகள் எப்போதில் இருந்து ஹிஜாப் அணிகின்றனர் என கேள்வி எழுப்பினார். அதற்கு, மனுதாரர் தரப்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர், கடந்த 2 ஆண்டுகளாக மாணவிகள் ஹிஜாப் அணிகின்றனர் என தெரிவித்தார். மேலும் மாணவிகள் சீருடை அணிய மறுக்கவில்லை என்றும் சீருடை நிறத்திலேயே ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்று மட்டுமே கோருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
கேந்திரா வித்யாலயா பள்ளிகளில் கூட இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். ஹிஜாப் அணிவது மத உரிமை என்றும் கல்வி நிலையங்களின் ஹிஜாப் அணிவதை எந்த சட்டமும் தடுக்கவில்லை என்றும் அவர் வாதங்களை முன் வைத்தார்.
இதையும் படிங்க: கர்நாடக பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு மீண்டும் அனுமதி மறுப்பு!
அப்போது குரானில் கூறப்பட்டுள்ள அனைத்தும் அடிப்படை மத கடமைகளாக என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில், ‘குரானில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கொள்கைகளுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஹிஜாப் அடிப்படை’ என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கு விசாரணை நாளை பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.