ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசின் சீருடை விதிகளுக்கு அனைவரும் உட்பட்டவர்களே என்று கூறிய கர்நாடக உயர் நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். எனினும் அவர்கள் பள்ளி வளாகத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
பின்னர், கர்நாடகாவின் பிற பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே, ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவியரில் சிலர் காவி துண்டு அணிந்து வரத் தொடங்கியதால் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், ஹிஜாப் தடையை எதிர்த்து 5 மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் நீதிபதி ஜேஎம் காஜி அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் ஒரு வாரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: Hijab Row Verdict: ஹிஜாப் அணிவது இஸ்லாமின் அடிப்படை நடைமுறை இல்லை.. தடையை உறுதி செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
இன்று காலை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையின் முக்கிய மத நடைமுறை அல்ல என்றூ தெரிவித்த தலைமை நீதிபதி, ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அரசின் சீருடை விதிகளுக்கு அனைவரும் உட்பட்டவர்களே என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
மேலும் படிக்க: இந்தியாவில் பேறுகால இறப்பு விகிதம் குறைந்தது.. இலக்கை ஏற்கனவே எட்டிய தமிழகம்
தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, அமைதியை பேண வேண்டும் என்றும் அனைவரும் தீர்ப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கர்நாடக முதலமைச்சர் பொம்மை அனைத்து சமுதாய தலைவர்களுக்கும் கோரிக்கை வைத்துள்ளார். இதேபோல், நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக கர்நாடக கல்வித்துறை அமைச்சர் பிசி. நாகேஷ் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.