இந்திய விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப்போவதாக வந்த தொலைபேசி தகவலையடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு எட்டு புதிய கட்டுப்பாடுகளை விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு விதித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பையில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் இயக்கக் கட்டுப்பாட்டு மையத்திற்கு தொலைபேசியில் நேற்று பேசிய அடையாளம் தெரியாத நபர் ஏர் இந்தியா விமானத்தை பாகிஸ்தானுக்குக் கடத்தவிருப்பதாகக் கூறியுள்ளார்.
புல்வாமாவில் உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை கண்டுகொள்ளாததாலேயே 40 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், விமானக்கடத்தல் தொலைபேசி அழைப்பை மத்திய அரசு எச்சரிக்கையுடன் கையாள நினைத்தது.
அதைத் தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு உச்சக்கட்ட உஷார்நிலையில் இருக்கும்படி எச்சரிக்கைத் தகவல் அனுப்பியுள்ளது. அத்துடன், வருகை மற்றும் புறப்பாடு நுழைவுவாயில்களில் பாதுகாப்பை அதிகரிக்கும்படி அறிவறுத்தியுள்ளது.
மேலும், விமான நிலைய பாதுகாப்பு பிரிவு, விமானப் போக்குவரத்து பாதுகாப்புக் குழு மற்றும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் எட்டு அம்ச பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும்படி கூறி உத்தரவிட்டுள்ளது. அதன்படி விமான நிலைய கட்டடம், ஓடுபாதை உள்ளிட்ட பகுதிகளில் நுழைவதற்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்கப்படவேண்டும்.
குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக, வாகன நிறுத்துமிடத்திற்கு வரும் வாகனங்களை முன்னிலும் தீவிரமாக சோதனையிடப்படவேண்டும். பயணிகள், பார்வையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வெளிநபர்களை தீவிரமாக சோதனையிடவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளின் பைகள், உணவு கொண்டு வரும் வாகனங்கள், சரக்குப் போக்குவரத்து பகுதி, கடிதங்கள், பார்சல்களை தீவிரமாக சோதனையிடவேண்டும். விமான நிலையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை அதிக அளவில் பொருத்தி கண்காணிப்பை அதிகரிக்கவேண்டும். சரக்குப் போக்குவரத்து நுழைவாயில் மற்றும் வாகனங்கள் நுழையும் பகுதிகளில் சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் கூடிய பாதுகாப்பைக் கூட்டவேண்டும் என நிபந்தனைகளை விதித்துள்ளது.
உள்ளூர் உளவுத்துறைத் தரும் எச்சரிக்கை அடிப்படையில் இதர பாதுகாப்பு அம்சங்கள் மீது கவனம் செலுத்தவேண்டும் என்று 8 எச்சரிக்கைகளை விமானப்போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு விதித்துள்ளள்ளது. விமானக் கடத்தலில் ஈடுபட்டால், மரண தண்டனை விதிக்க 2014-ம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இனி விமானநிலையங்களில் பயணிகள் பல்வேறு கெடுபிடிகளுக்கு ஆளாக நேரிடும் என்பது மட்டும் உறுதி.
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.