Antony Blinken : குவாட் குழு முதல் அமெரிக்க தடுப்பூசிகள் வரை... அமெரிக்க வெளியுறவு செயலாளரின் பிரத்யேக பேட்டி!

ஆண்டனி ப்ளிங்கன்

அதிகளவில் கொரோனா தடுப்பூசிகளை தயாரிப்பது சீனாவை குறிவைப்பதாக ஆகிவிடாது என்று ஆண்டனி ப்ளிங்கன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
இரண்டு நாள் அரசு முறை பயணமாக, முதன்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்திருந்த அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி ப்ளிங்கன், சிஎன்என்-நியூஸ் 18-னிற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி அவர்களின் உதவியுடன் சீனாவின் ஆதிக்கத்திற்கு கடிவாளம் போடுவது, ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளை இந்தியாவிற்கு வழங்குவது குறித்தெல்லாம் பேசியுள்ளார். அவர் பேசியது குறித்து கேள்வி-பதில் வடிவில் காணலாம்.

அமெரிக்காவின் பார்வையில் ‘குவாட்’ (Quad) குழு என்றால் என்ன?

ப்ளிங்கன்: குவாட் குழு என்பது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் முக்கிய பிரச்சனைகளுக்கும் தீர்வுகானபும் ஒன்றிணைந்த ஒத்த-எண்ணமுடைய ஜனநாயக நாடுகளின் குழுவாகும். மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை ஒரு சுதந்திர பிராந்தியமாக மாற்ற வேண்டும் என்கிற நம்பிக்கையும் அமெரிக்காவிற்கு உள்ளது. இதுமட்டுமின்றி, உலக நாடுகளுக்கு அதிகளவில் கொரோனா தடுப்பூசிகளை விரைவில் வழங்குவது, காலநிலை மாற்றம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கடல்சார் பாதுகாப்பு ஆகியவை குறித்து குவாட் குழு நாடுகளுடன் ஒன்றிணைந்து செயல்படுகிறோம். மேலும், குவாட் குழு தற்போது இராணுவ யுக்தியில் இல்லை.

குவாட் குழுவின் நோக்கமே பெய்ஜிங்கை குறிவைத்து உருவாக்கப்பட்டதாக கூறும் சீனாவின் விமர்சனத்திற்கு உங்கள் பதில்?

ப்ளிங்கன்: அதிகளவில் கொரோனா தடுப்பூசிகளை தயாரிப்பது சீனாவை குறிவைப்பதாக ஆகிவிடாது. அதிகளவில் தடுப்பூசிகளை தயாரிப்பதன் நோக்கமே உலக நாடுகள் அனைத்தும் கொரோனா என்ற கோர வைரஸ் நோயின் பிடியில் இருந்து வெளிவர வேண்டும் என்பது மட்டுமே தவிர வேறு எதுவுமில்லை. அதை மட்டுமே நோக்கமாக கொண்டு நாங்கள் செயல்படுகிறோம்.

Also Read | “இயற்கையை நேசித்தவர் இயற்கை சீற்றத்தால் உயிரிழந்த பரிதாபம்”- 9 பேரின் உயிரை பறித்த திடீர் நிலச்சரிவு!

ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகிய இரண்டு அமெரிக்க தடுப்பூசிகளையும் ஏன் இந்தியாவிற்கு அமெரிக்கா இன்னும்  விநியோகிக்கவில்லை?

ப்ளிங்கன்: பெருந்தொற்று பிடியில் அமெரிக்கா சிக்கித் தவித்தபோது, இந்திய நாடு முன்வந்து தங்களின் உதவிகளை வழங்கியது. அதேபோல, கொரோனாவின் பிடியில் இந்தியா சிக்கித் தவித்தபோது நாங்களும் அவ்வாறே உதவிக்கரம் நீட்டினோம். மேலும், எங்கள் நாட்டின் தனியார் துறையும் ஒன்றிணைந்து மக்களுக்கு உதவிகளைச் செய்தன. அவ்வாறு இருக்க, உலகின் எந்தவொரு நாட்டிலும் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு சட்ட செயல்முறை தேவைப்படுகிறது. அதில், ஒப்புதல் மற்றும் ஒழுங்குமுறை செயல்முறையும் அடங்கும். அதனால்தான் இந்தியாவிற்கான கொரோனா தடுப்பூசி விநியோகம் தாமதமாகிறது.

9/11 இரட்டை கோபுர தாக்குதலின் 20ஆம் ஆண்டை நெருங்குகிறோம்; ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான முடிவை மிக விரைந்து எடுத்துவிட்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

ப்ளிங்கன்: 9/11 இரட்டை கோபுர தாக்குதலை தொடர்ந்து எங்களை தாக்கியவர்களை நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்த நாங்கள் ஆப்கானிஸ்தான் சென்றோம். அதன் விளைவாக பல போராட்டங்களை தொடர்ந்து, ஒசாமா பின்லேடன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதியின் முன் கொண்டுவரப்பட்டார். பயங்கரவாத குழுவான அல்-கொய்தாவும் பெரும்பாலும் சரிந்துவிட்டது. ஆகவே, இந்த தாக்குதலுக்கு பதில்பெறும் விதமாக நாங்கள் 20 ஆண்டுகளில் நிறைய விஷயங்களை அடைந்துள்ளோம். ஆப்கானிஸ்தானில் இருந்து நாங்கள் எங்கள் படைகளை வாபஸ் பெறுவதால் அந்நாடு தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொள்ளத் தயாராக இருக்கும். எனினும், நாங்கள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு உதவவும், கட்சிகளை ஒன்றிணைத்து அப்பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்யவும் தயாராக உள்ளோம்.

தாலிபான் விவகாரத்தில் சீனா தலையிடுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெறுவதால், சீனா அந்த வெற்றிடத்தை நிரப்ப முயற்சிப்பதாக கருத்து நிலவுகிறதே?

ப்ளிங்கன்: ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஈரான், ஆசியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் அனைவருக்கும் அப்பகுதியின் மீது ஆர்வம் உள்ளதாக கருதுகிறேன். ஆனால் அப்பகுதி தலிபான்களின் கைகளில் சிக்கிவிட யாரும் விரும்பவில்லை. மோதலை சுமுகமான முறையில் தீர்த்து அமைதி நிலைநாட்டுவதில் மட்டுமே அனைவருக்கும் விரும்புகின்றனர். சீனாவும் பிற நாடுகளும் அந்த ஆர்வத்தில் செயல்படுகின்றன என்றால், அது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரதமர் மோடியை சந்திக்கும்போது நீங்கள் அவரை வெள்ளை மாளிகைக்கு அழைப்பீர்களா? அல்லது அமெரிக்க அதிபர் பைடன் விரைவில் இந்தியாவிற்கு வருகை தருவாரா?

ப்ளிங்கன்: பிரதமர் மோடி அமெரிக்க நாட்டிற்கு வருகை புரிந்தால் அதிபர் ஜோ பைடன் நிச்சயம் வரவேற்பார். அதேபோல், அதிபர் பைடன் இந்தியா வந்தாலும் பிரதமர் மோடி வரவேற்பார். இதுகுறித்த தேதிகள் எதுவும் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
Published by:Archana R
First published: