Home /News /national /

கடவுள்… கையில் சிகரெட்… போஸ்டரால் ரோஸ்டாகும் இந்திய சினிமாக்கள்! என்ன சொல்கிறது கடந்தகாலம்?

கடவுள்… கையில் சிகரெட்… போஸ்டரால் ரோஸ்டாகும் இந்திய சினிமாக்கள்! என்ன சொல்கிறது கடந்தகாலம்?

கடவுள்… கையில் சிகரெட்… போஸ்டரால் ரோஸ்டாகும் இந்திய சினிமாக்கள்! என்ன சொல்கிறது கடந்தகாலம்?

கடவுள்… கையில் சிகரெட்… போஸ்டரால் ரோஸ்டாகும் இந்திய சினிமாக்கள்! என்ன சொல்கிறது கடந்தகாலம்?

கோலிவுட்டில் மட்டும் போஸ்டர் பிரச்சனைகள் இருந்துவிடவில்லை. பாலிவுட்டிலும் திரைப்பட போஸ்டர்கள் பிரச்சனைகள் ஏராளம்.

அரசியல் மட்டுமல்ல, சினிமாவிலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில், கவிஞர், ஆவணப்பட இயக்குநர், இண்டிபெண்டெண்ட் திரைப்பட இயக்குநர் என பன்முகம் கொண்ட லீனா மணிமேகலை தனது சமீபத்திய படமான ‘காளி’ போஸ்டரால் தற்போது சட்டப்பூர்வ புகாரை எதிர்கொண்டுள்ளார். டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டல் என்பவர் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் அவர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வினீத், தனது புகாரில், லீனா மணிமேகலை இந்து தெய்வத்தை அவமதித்ததாகவும் தங்கள் மத உணர்வுகளை அவர் புண்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குள்ளான அந்த போஸ்டரில் ‘காளி’ போன்று வேடமணிந்துள்ள பெண், தன் வாயில் சிகரெட்டுடன், மற்றொடு கையில் LGBT கொடியை பிடித்திருப்பது போன்று உள்ளது. இந்த போஸ்டர் ட்விட்டரில் வெளியான சில நிமிடங்களிலேயே எதிர்வினைகளைப் பெற தொடங்கியது. லீனா மணிமேகலையை உடனடியாக கைது செய்ய வேண்டும் என 'ArrestLeenaManimekalai' என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டானது. குறிப்பாக, பாஜகவினர் இந்த விவகாரத்தில் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

சரி, இந்தியாவில் சினிமா போஸ்டர் விவகாரம் என்ன புதிதா? நிச்சயம் இல்லை. ரஜினிகாந்த்-ன் ‘பாபா’ திரைப்படம் தொடங்கி சமீபத்திய பாலிவுட் திரைப்படங்கள் வரை இந்திய சினிமாவில் திரைப்பட போஸ்டர்கள் சந்தித்த சர்ச்சைகள் ஏராளம். 2002ஆம் ஆண்டு வெளியான பாபா படம், ரஜினிகாந்த் பீடி பிடிப்பது தொடர்பான சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் புகைப்பிடித்து, அதில் ஈடுபட தமிழக இளைஞர்களை ஊக்குவிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார். பாமக ஆதரவாளர்கள் அப்படத்தை திரையிட்ட திரையரங்குகளுக்கு சேதமும் ஏற்படுத்தினர்.

Also Read | தொடரும் நீட் தற்கொலைகள்… காத்திருக்கும் விலக்கு மசோதா… தமிழக அரசின் அடுத்த மூவ் என்ன? NEET A-Z ஒரு பார்வை!

2012ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் துப்பாக்கி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜய் தனது வாயில் சிகரெட் வைத்திருப்பதை சித்தரிக்கும் போஸ்டர், புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்த தடை விதிக்கும் இந்திய புகையிலை சட்டத்தை மீறியதாக சமூக ஆர்வலர்களால் விமர்சிக்கப்பட்டது.

2014-ல் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷ் சிகரெட் பிடிப்பது போன்ற போஸ்டர் மற்றும் ‘ஜிகர்தண்டா’ படத்தில் வன்முறை காட்சிகள், சிகரெட் மற்றும் மது அருந்தும் காட்சிகள் இருப்பது போன்றவற்றுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். வேலையில்லா பட்டதாரி படத்திற்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அப்படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உயர்நீதிமன்றம் அப்போது தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர், 2018ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சர்ச்சைக்குள்ளானது. அதில், நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பதைப் போல இடம்பெற்றிருந்ததால் பல தரப்பும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக பாமக மற்றும் புகையிலை தடுப்பு குழுக்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர். இதையடுத்து, அந்த போஸ்டர் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட்டில் மட்டும் போஸ்டர் பிரச்சனைகள் இருந்துவிடவில்லை. பாலிவுட்டிலும் திரைப்பட போஸ்டர்கள் பிரச்சனைகள் ஏராளம். சில ஆண்டுகளுக்கு முன்பு தீபிகா படுகோனே நடித்த பத்மாவத் திரைப்படம் எதிர்கொண்ட சர்ச்சைகள் எக்கச்சக்கம். அதிலும், அது வெறும் சர்ச்சையாக நின்றுவிடவில்லை. நாட்டில் மதக் கலவரமாகவும் மாறியது. இதற்கு முன்பாக, ஆமிர்கானின் ‘பி.கே’ படத்தின் நிர்வாண போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மற்றும் அப்படம் வெளியிட தடை விதிக்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

திரைப்படங்கள் மட்டுமின்றி, ஓடிடி தளத்தையும் சர்ச்சைகள் விட்டுவைக்கவில்லை. கடந்த 2020ஆம் ஆண்டு ஜெய் பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்த காட்மேன் வெப் தொடரின் டீசர் வெளியாகி பெரும் அதிர்வலையை கிளப்பியது. இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கிய இந்த வெப் தொடரை Zee5 தனது ஆன்லைன் தளத்தில் ஜூன் 12, 2020-ல் ஒளிபரப்பவிருந்தது. ஆனால், பிராமண சமூகத்தினர் குறித்து சர்ச்சை வசனங்கள், ஆபாச காட்சிகள், இந்து கடவுள்கள் மீதான நம்பிக்கையை அவமதிப்பது போன்ற காட்சிகள் டீசரில் இடம் பெற்றிருந்ததாக சர்ச்சை வெடித்தது. இந்து மக்களின் மத நம்பிக்கையை புண்படுத்திவிட்டதாகவும் காட்மேன் தொடர் இயக்குநர், Zee5 நிர்வாகம் உள்ளிட்டோர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் இந்து மற்றும் பிராமண அமைப்பினர் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டன. பல்வேறு சர்ச்சைகளை கிளப்பிய இந்த வெப் தொடரை தடை செய்ய வேண்டுமென Zee5 நிர்வாகத்திடமும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதை தொடர்ந்து, அந்த தனியார் தொலைக்காட்சியின் ஓடிடி தளத்தில் இருந்து, காட்மேன் டீசர் அதிரடியாக நீக்கப்பட்டது. பின்னர் அந்த தொடர் வாபஸ் பெறப்பட்டது.
Published by:Archana R
First published:

Tags: Indian cinema, Poster

அடுத்த செய்தி