மும்பையில் அடித்துவாங்கிய கனமழை: வெள்ள நீரில் மிதக்கும் சாலைகள் - வாகனஓட்டிகள் பெரும் அவதி

மும்பை மழை

மும்பையில் பெய்த கனமழையால் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், நகரமே தண்ணீரில் தத்தளித்தது.

 • Share this:
  மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தென்மேற்குப் பருவமழை புதன்கிழமை தொடங்கியது. இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் ரயில், சாலை போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனிடையே, அடுத்த நான்கு நாட்களுக்கும் அங்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கனமழையால் மழைநீர் ஆறாக ஓடும் சாலையைக் கடக்க அச்சப்பட்டுதான் வாகன ஓட்டிகள் காத்திருக்கிறார்கள். எதிர்பார்த்ததை விட இருநாட்களுக்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை மும்பையின் கதவைத் தட்டிட கனமழையோடுதான் நகரம் காலையில் கண்விழித்தது. வேலைக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் பெருக்கெடுத்த மழைநீரில் வாகனங்களை இயக்க முடியாமல் இருசக்கர வாகனங்களை தள்ளிக் கொண்டு சென்றனர்.

  சம்பூர் விரைவுச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் தேங்கி நின்றன. பெரும்பாலான இடங்களில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியதால் மின்சார ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. குர்லா - சிஎஸ்எம்டி உள்ளிட்ட பல வழித்தடங்களில் சில மணி நேரம் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

  பல இடங்களில் சாலையில் ஓடிய மழைநீர் சுரங்கப்பாதைகளுக்குள் புகுந்த நிலையில் 4 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. தடுப்புகளை அமைத்த காவல்துறையினர் வாகன ஓட்டிகளை வேறு பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

  மழைநீரில் சிக்கிக் கொண்ட பேருந்துகள் நகர முடியாத நிலையில் ஓட்டுநர்கள் அவற்றை கைவிட்டுச் சென்றனர். வாகன ஓட்டிகளும் இருசக்கர வாகனங்களை முழங்கால் அளவுக்கும் மேல் சென்ற நீரில் உருட்டக் கூட முடியாத நிலையில் ஆங்காங்கே நிறுத்திச் சென்றதை காண முடிந்தது. கார்களும் பாதி மூழ்கிய நிலையில் இருந்தன. பகலிலும் விட்டுவிட்டு மழை பெய்த நிலையில், மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தினர். பல இடங்களில் தெருக்களே தெரியாத அளவிற்கு மழைநீர் ஓடியது. மிதி ஆறு கரைபுரண்டு ஓடிய நிலையில் கரையோரங்களில் இருந்த குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  மும்பையின் சான்டா குரூஸ் பகுதியில் 6 மணி நேரத்தில் 16 சென்டி மீட்டர் மழை பெய்ததால் அப்பகுதியே வெள்ளத்தில் மிதப்பதுபோல காட்சியளித்தது. இதனிடையே மும்பையில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு தொடர்பாக பேரிடர் மேலாண்மை துறையிடம் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கேட்டறிந்தார்.
  Published by:Karthick S
  First published: