வடமாநிலங்களில் தொடரும் கனமழை: உ.பி, ம.பி, ராஜஸ்தான் மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மத்தியப் பிரதேச வெள்ளம்

வடமாநிலங்களில் தொடரும் கனமழை காரணமாக பல பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  கனமழை காரணமாக, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் வெள்ளத்திற்கு மத்தியில் தவித்துவந்த கர்ப்பிணியை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.

  தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

  யமுனை ஆற்றில் அதிகரித்துள்ள வெள்ளம் காரணமாக, ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் அருகே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை பார்ப்பது புதிய அனுபவத்தை வழங்குவதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

  பாண்டு ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ளதால், கான்பூர் நகரில் உள்ள மர்தான்பூர், பன்புர்வா, கஞ்சன்புர்வா உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. இதையடுத்து, பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே செல்வதற்கு படகுகளை பயன்படுத்தி வருகின்றனர். மத்தியப்பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் போபாலில் மிதமான மழை பெய்ததால், பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.

  ராஜஸ்தான் மாநிலத்தில் ஜலாவர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, நிரிவர் ரூபாலி ஆற்றில் அபாயஅளவைத் தாண்டி தண்ணீர் ஓடியதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கின. முழங்கால் அளவுக்கு தேங்கிய நீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

  இதேபோல், மேற்குவங்க மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் கொல்கத்தாவில் உள்ள பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மிட்னாப்பூர் பகுதியில் திர்காகிராம் என்ற கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து, வெள்ளத்தில் தவித்துவந்த கர்ப்பிணி மற்றும் அவரது குடும்பத்தினரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஒடிசா தலைநகர் புவனேஷ்வரத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடமாநிலங்களில் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
  Published by:Karthick S
  First published: