ஹோம் /நியூஸ் /இந்தியா /

இன்றைய தலைப்புச் செய்திகள் (டிசம்பர் 7-2021)

இன்றைய தலைப்புச் செய்திகள் (டிசம்பர் 7-2021)

நரேந்திர மோடி - விளாதிமிர் புதின்

நரேந்திர மோடி - விளாதிமிர் புதின்

பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தியா - ரஷ்ய இடையே 28 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

  • News18 Tamil
  • 6 minute read
  • Last Updated :

பிரதமர் நரேந்திர மோடி - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு:

பிரதமர் நரேந்திர மோடி - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையிலான சந்திப்பின் போது, 28 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில், நேற்று மாலை பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது பேசிய பிரதமர், 20 ஆண்டுகளாக இந்தியாவும் ரஷ்யாவும் நல்லுறவைப் பேணி வருவதாகவும், கொரோனா பெருந்தொற்று காலத்திலும் அந்த உறவில் எந்த மாற்றம் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார். இந்தியா வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக பேசிய ரஷ்ய அதிபர் புடின், இந்தியாவை மிகவும் சக்தி வாய்ந்த நாடாக, தான் பார்ப்பதாக குறிப்பிட்டார். வேறு எந்த நாடுகளுக்கு இடையேயும் இல்லாத அளவிற்கு, ராணுவம் மற்றும் தொழில்நுட்ப விவகாரத்தில் இந்தியா- ரஷியா ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்படுவதாகவும், புதின் கூறினார்.

இந்தியாவில் 23 பேருக்கு ஒமைக்ரான் தொற்று:

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ள நிலையில், பெருந்தொற்றின் மூன்றாம் அலை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், இந்தியாவை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை கணித ரீதியில் கணித்துச் சொல்லும் நிபுணர்கள் குழுவில் இடம் பெற்று இருக்கும் ஐஐடி பேராசிரியர் மனிந்தர அகர்வால் இதனை தெரிவித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், ஒமைக்ரான் வைரசால் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் மூன்றாவது அலை ஏற்படலாம் என்றும், ஆனால் அதன் தாக்கம் இரண்டாவது அலையைவிட குறைவாகவே இருக்கும் என்றும் கூறி இருக்கிறார். பிப்ரவரி மாதம் ஒமைக்ரான் வைரஸ் தாக்குதல் உச்சத்தில் இருக்கும் போது இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் மனிந்தர அகர்வால் கணித்துள்ளார். மகாராஷ்டிராவில் மேலும் 2 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 23 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி குறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை:

நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்ற நிலையில், அதில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி மற்றும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்படவில்லை.

இதனிடையே ஒமைக்ரான் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவைச் சேர்ந்த மருத்துவர்கள் கலந்தாலோசித்தனர். இதில் பூஸ்டர் தடுப்பூசி, குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்து மருத்துவர்கள் இருவேறு கருத்து தெரிவித்ததால் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று ஏ.என்.ஐ.செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும்:

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரியான விவரங்களையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் , பிரதமர் மோடியை சந்தித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வலியுறுத்தினார்.

இந்தநிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைத்தால், நிச்சயமாக மாநில அரசு அதற்கான அறிவிப்பை வெளியிடும் என்று நிதிஷ்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

நாகாலாந்து துப்பாக்கி சூடு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு:

நாகாலாந்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூடு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய - மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு துறை செயலாளர், உள்துறை செயலாளர், நாகாலாந்து காவல்துறை தலைமை அதிகாரி, உள்ளிட்டோர் 6 வாரங்களுக்குள் இந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள ஓடிங் கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் ஊடுருவியுள்ளதாக நினைத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் உயிரிழந்தனர். இதனிடையே நாகாலாந்தில் ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகார சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் நெய்பியு ரியோ வலியுறுத்தியுள்ளார். 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலானாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி:

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த நவம்பர் 9ஆம் தேதி பதிலளித்த தமிழக அரசு, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்து 36 ஆயிரத்து 220 பேர் மரணமடைந்துள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மாநில பேரிடர் நிதியில் இருந்து இந்த நிவாரண தொகையை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிவாரண தொகையை பெற தொற்று பாதித்தவர் கொரோனாவால் உயிரிழந்ததற்கான சான்று அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமலுக்கு தமிழக மருத்துவத்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ்:

கொரோனா விதிமீறல் குறித்து நடிகர் கமலுக்கு தமிழக மருத்துவத்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபடும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றில் இருந்து பூரண நலம் பெற்ற கமல்ஹாசன் 4-ந் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டு நேராக பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் ஈவிபி அரங்கத்திற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த விவகாரம் சர்ச்சையானதை தொடர்ந்து, இதுதொடர்பாக பேசிய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கமலுக்கு தமிழக மருத்துவத்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார்.

ஓபிஎஸ்-இபிஎஸ் தேர்வுக்கு எதிராக பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவு:

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது தொடர்பான விளக்கத்தை, பதில் மனுவாக தாக்கல் செய்ய சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு தடை கோரி, பெருந்துறையை சேர்ந்த பாலகிருஷ்ணன், மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி மணிமேகலை முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தகுதியான உறுப்பினர்களின் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதால் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதாடப்பட்டது.

ஓபிஎஸ்-இபிஎஸ்

வாதங்களை கேட்ட நீதிபதி, மனு தொடர்பாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் விரிவான விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். இதற்கிடையே, அதிமுக உட்கட்சித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை கோரி ஓசூரை சேர்ந்த ஜெயச்சந்திரன் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

பப்ஜி மதன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி:

கடுமையான முதுகு வலி காரணமாக பப்ஜி மதன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை ஆன்லைனில் எப்படி விளையாடுவது என்பது குறித்து யூ-டியூப் சேனல் மூலமாக ஆலோசனைகளை வழங்கி வந்தவர் பப்ஜி மதன். இந்த யூ-டியூப்களில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசியதாக அவர் மீது சைபர் கிரைமில் புகாரளிக்கப்பட்டதால் ஜூன் மாதம் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

ஜூலை 6-ம் தேதி பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், புழல் சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். இவருக்கு முதுகுவலி ஏற்பட்டதால் சிறையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் வலி குறையாததால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அம்பேத்கர் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் இரு தரப்பினரிடையே மோதல்:

மயிலாடுதுறை அருகே அம்பேத்கர் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் இரு தரப்பினரிடையே நிகழ்ந்த மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. அம்பேத்கரின் 65-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பட்டவர்த்தி கிராமத்தில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் ஜாதி மோதல் ஏற்படும் என்று கூறி மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அங்கு வந்த விசிக முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்தார். அப்போது மற்றொரு பிரிவினர் கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரு தரப்பினரும் கற்களை வீசி மாறி மாறித் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து லேசான தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.

ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்க அரசு திட்டம்

ரஷ்யா மீது பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2014-ம் ஆண்டு உக்ரைனின் கிரீமியா பகுதியானது போரின் மூலம் ரஷ்யா உடன் இணைக்கப்பட்டது. அன்று முதல் உக்ரைன் உடன் மோதல் போக்கை ரஷ்யா தொடர்ந்து வருகிறது.

இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த திட்டமிட்டு, உக்ரைன் எல்லையில் போர் தளவாடங்களையும், வீரர்களையும் களமிறக்கி இருப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் இதனை ரஷ்யா மறுத்துவரும் சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷிய அதிபர் புதினும் இன்று காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்தநிலையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், ரஷ்யா மீது மிகக் கடுமையான பொருளாதார தடை விதிக்க பைடன் அரசு திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது.

பிரான்சில் இரவு நேர விடுதிகளை மூட உத்தரவு

பிரான்ஸ் நாட்டில் கொரோனா அலை மீண்டும் உருவாகியுள்ளதால், இரவு நேர விடுதிகளை மூடுவதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வைரசால், பிரான்ஸ் நாட்டில் இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பேசிய அந்நாட்டு பிரதமர் ஷான் காஸ்டெக்ஸ், வருகிற வெள்ளிக்கிழமை முதல் நான்கு வாரங்களுக்கு இரவு நேர விடுதிகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்தார். டிசம்பர் 15 முதல் ஐந்து வயது தொடங்கி 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆங் சாங் சூச்சிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை குறைப்பு

மியான்மரில் ஆங் சாங் சூச்சிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தால், அவரது தண்டனைக்காலம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கடந்த பிப்ரவரி மாதம் ராணுவத்தினர் கலைத்து அதிகாரத்தை கைப்பற்றினர். அதன்பின்னர் ஆங் சாங் சூச்சி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக, ராணுவத்துக்கு எதிராக கருத்துகளை பரப்பியதாக சூச்சிக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது.

ஆனால் நாடு தழுவிய அளவில் சூச்சியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பல்வேறு இடங்களில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது தண்டனைக்காலம் பாதியாக குறைக்கப்பட்டிருப்பதாக மியான்மர் தேசிய தொலைக்காட்சியில் அறிவிப்பு வெளியானது.

சிலி நாட்டில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி:

சிலி நாட்டில் மூன்று வயதில் இருந்து ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சிலி நாட்டில் இதுவரை பத்து லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Must Read : இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும் என கணிப்பு

இந்தநிலையில் சிலி நாட்டின் பொது சுகாதாரத்துறை சார்பில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளன. சீனாவின் சினோவாக் மற்றும் சினோபார்ம் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் ஏழு லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த சிலி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

First published:

Tags: Headlines, Narendra Modi, Tamil News