Home /News /national /

இன்றைய தலைப்புச் செய்திகள் (டிசம்பர் 13-2021)

இன்றைய தலைப்புச் செய்திகள் (டிசம்பர் 13-2021)

ஒமைக்ரான்

ஒமைக்ரான்

இஸ்ரேல் நாட்டில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார்.

    பொங்கல் விழாவுக்கு சொந்த ஊர்களுக்குச் செல்வோரின் வசதிக்காக, அரசு விரைவுப் பேருந்தில் முன்பதிவு தொடங்கியுள்ளது. வரும் ஜனவரி 14 ஆம் தேதியன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகள் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் இருந்து பயணத்தை தொடங்குவர்.

    வழக்கமாக ஒரு மாதத்திற்கு முன்னதாக அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இந்த அடிப்படையில் ஜனவரி 12 ஆம் தேதிக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. 850 அரசு விரைவுப் பேருந்துகளுக்கான முன்பதிவு நடைபெறுகிறது. சிறப்பு பேருந்துகள் இம்மா இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

    கொரோனா கட்டுப்பாடு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

    கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் வழங்கலாமா அல்லது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகள் நாளை மறுநாள் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டிப்பு தொடர்பாக இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

    தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் ஒமைக்ரான் கொரோனாவின் தாக்கம் இதுவரை உறுதியாகாத நிலையிலும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து கருத்து கேட்டறியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிமுக உட்கட்சி  தேர்தல்

    அதிமுக உட்கட்சி பதவிகளுக்கான தேர்தல் முதல் கட்டமாக 15 மாவட்டங்களில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    அதிமுக தலைமை அலுவலகம்


    இந்தநிலையில், அதிமுகவில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள், பேரூராட்சி, நகராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட வட்ட நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட அமைப்பு ரீதியான15 மாவட்டங்களில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

    அண்டை மாநிலங்களில் ஒமைக்ரான்

    தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திராவில் ஒமைக்ரான் தொற்று புதிதாக பரவியுள்ள நிலையில், நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் முதல் முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தில் இருந்து கடந்த 6ஆம் தேதி கொச்சி வந்த எர்ணாகுளத்தை சேர்ந்த மருத்துவருக்கு ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இதனிடையே தென்னாப்ரிக்காவில் இருந்து கர்நாடகம் திரும்பிய 34 வயது நபருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் கர்நாடகாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் இருந்து ஆந்திரபிரதேசம் வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது .

    ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    இந்துத்துவா இல்லாமல் இந்துக்களின் ஆட்சியையே கொண்டுவர விரும்புவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்து மற்றும் இந்துத்துவவாதி எனும் இரண்டு உலகங்களுக்கு இடையேதான் இன்றைய இந்திய அரசியல் போட்டி இருப்பதாக கூறினார்.

    இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் வெவ்வேறு பொருள் இருக்கிறது எனக்கூறிய ராகுல்காந்தி, தான் ஒரு இந்து எனவும், ஆனால் இந்துத்துவவாதி இல்லை எனவும் கூறினார். மகாத்மா காந்தி இந்து என்றும், ஆனால் கோட்சே இந்துத்துவவாதி எனவும் விளக்கம் அளித்தார். மேலும் இந்துக்கள் சத்தியாகிரகத்தை நோக்கி ஓடுவார்கள் என்று கூறிய ராகுல், இந்துத்துவவாதிகளோ அதிகாரத்தை நோக்கி பயணிப்பார்கள் என்றும் விமர்சித்தார். அவர்களை அதிகார மையத்தில் இருந்து தூக்கி எறியவேண்டும் என்றும் ராகுல் காந்தி பேசினார்.

    காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைக்கிறார்

    உத்தர பிரதேச மாநிலத்தில் புதுப்பித்து கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு செல்கிறார். அங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு இன்று மதியம் ஒரு மணியளவில் பிரதமர் செல்கிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி


    அப்போது 339 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்து கட்டப்பட்டுள்ள புதிய வளாகத்தை அவர் திறந்து வைக்கிறார். இதில் 320 மீட்டர் நீள நடைபாதை, அருங்காட்சியகம், நூலகம், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் 12 மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இதனிடையே பிரதமர் வருகைக்கான முன்னேற்பாடுகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்.

    புதுச்சேரியில் தடுப்பூசி தடுப்பூசி ஆவணங்கள் பரிசோதனை

    புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆவணங்கள், பொதுமக்களிடம் அவ்வப்போது பரிசோதனை செய்யப்படும் என, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். வில்லியனூர் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தபின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டதோடு, தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆவணத்தை பொதுமக்கள் தங்களுடனே வைத்திருக்கவும் அறிவுறுத்தினார்.

    இஸ்ரேல் நாட்டில் நான்காவது டோஸ் தடுப்பூசி?

    இஸ்ரேல் நாட்டில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டில் ஒமைக்ரான் கொரோனா தொற்றுக்கு இதுவரை 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிரதமர் நப்தாலி பென்னட் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது முதியவர்கள் மற்றும் இணைநோய் இருப்பவர்களுக்கு நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டது. இஸ்ரேல் நாட்டில் இதுவரை 41 லட்சம் பேர் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்துக்கொண்டுள்ளனர். மேலும் குழந்தைகளுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    ரஷ்யாவுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்: ஜி7 நாடுகள் எச்சரிக்கை

    உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் ஜி7 நாடுகளிடம் இருந்து ரஷ்யா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் எல்லையில் அமைந்துள்ள உக்ரைன் மீது போர் தொடுக்கும் விதமாக, ரஷ்யா படைகளை குவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய ஜி7 நாடுகளின் சார்பில் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை திரும்பப்பெற வேண்டும் என்றும், அவ்வாறு செய்யவில்லை என்றால் ரஷ்யாவுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தடுப்பூசியின் செயல்திறனை குறைக்கிறது ஒமைக்ரான்

    டெல்டா வகை கொரோனா வைரசை விட ஒமைக்ரான் அதி வேகத்தில் பரவுவதாகவும், தடுப்பூசியின் செயல்திறனை குறைப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தற்போது வரை 63 நாடுகளில் ஒமைக்ரான் வகை கொரோனா பரவியிருப்பதாக கூறியுள்ளது.

    Must Read : தனித்து போட்டியிட்டிருந்தால் ஆட்சியை கைப்பற்றி இருப்போம் - ராமதாஸ்

    சமூகப்பரவல் ஏற்பட்டால் டெல்டாவை விட வேகமாக ஒமைக்ரான் பரவும் என்று எச்சரித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அதேசமயம் குறைந்த அளவிலான மோசமான அறிகுறிகளையே ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியின் செயல்திறன்களை புதிய வகை கொரோனா பாதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Headlines, MK Stalin, Narendra Modi, Omicron

    அடுத்த செய்தி