கெஜ்ரிவால் நல்ல ஆடைகளை கூட அணிவதில்லை எனக் கூறிய பஞ்சாப் முதல்வருக்கு, நீங்க தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்க என அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்திருக்கிறார்.
கேப்டன் அமரிந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் பஞ்சாபுக்கு புதிய முதல்வராக தேர்வானவர் சரன்ஜித் சிங் சன்னி. பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் முகாமுக்குள் தொடர்ந்து சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில் அடுத்த ஆண்டு அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மி கடும் சவால் அளிக்கும் என கூறப்படும் நிலையில், ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ள கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பஞ்சாப் முதல்வர் சரன்ஜித் சிங் சன்னி அளித்துள்ள பேட்டியில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் இருந்து வரும் குழப்பநிலை குறித்து கூறிய கருத்துக்கு பதிலளிக்கையில், “அரவிந்த் கெஜ்ரிவால் ஒவ்வொரு மாதமும் இரண்டரை லட்ச ரூபாயை ஊதியமாக பெறுகிறார், ஆனால் அவர் நல்ல ஆடைகளை கூட அணிவதில்லை. யாராவது அவருக்கு ஒரு ஐந்தாயிரம் ரூபாயை கொடுங்கள், அவர் சரியான உடைகளை அணியட்டும். மாதம் இரண்டரை லட்சம் சம்பளம் வாங்குகிறார். அவரிடன் சூட் - பூட் இருக்கிறதா? அவரிடம் நல்ல ஆடைகளாவது இருக்க வேண்டும்” இவ்வாறு நெறியாளரிடம் முதல்வர் சன்னி கூறினார்.
Also Read: மேட்ரிமோனி வெப்சைட்டில் இப்படியும் நடக்குது மோசடி – மக்களே உஷார்!
பஞ்சாப் முதல்வரின் கருத்துக்கு பதிலடி தரும் வகையில் ட்விட்டரில் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள பதிவில், “சரன்ஜித் சிங் சன்னிக்கு என்னுடைய ஆடைகள் பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை, மக்களுக்கு எனது ஆடைகள் பிடித்துள்ளது.
என்னுடைய ஆடைகள் குறித்தான விவாதத்துக்குள் செல்வதை கைவிட்டு, மாநிலத்தில் ஒவ்வொரு வேலையில்லாத இளைஞருக்கும் வேலை தருவது, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வது, ஊழல் அதிகாரிகள், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து சன்னி பேசட்டும்” என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arvind Kejriwal, Congress, Delhi, Punjab