பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள விமான எதிர்ப்பு ஆயுதம்
(SAAW) ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஆராய்ச்சி மையமான Imarat (RCI) வடிவமைத்துள்ள விமான எதிர்ப்பு ஆயுதம் (SAAW) முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் ஒரு முக்கிய ஆயுதமாகும். இதனை பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதனை Hawk-i போர் விமானத்தில் பொருத்தி ஒடிசா கடற் பகுதியில் சோதனை நடத்தினர். முதல் முறையாக இவ்வாறான ஒரு ஆயுதத்தை Hawk-i Mk132 போர் விமானத்தில் பொருத்தி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
SAAW ஆயுதம் பொருத்தப்பட்ட Hawk-i விமானத்தை ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் சோதனை விமானிகளான ஓய்வு பெற்ற விங் கமாண்டர்கள் அவாஸ்தி மற்றும் பட்டேல் செலுத்தி சோதனை நடத்தினர்.
ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலான் இயக்குனரான மாதவன், இது தொடர்பாக கூறுகையில் டிஆர்டிஓ மற்றும் சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆயுதங்களுக்கு சான்றளிப்பதில் Hawk-i தளம் விரிவாகப் பயன்படுத்தப்படுகிறது என்றார்.
Hawk-i விமானங்களின் பயிற்சி மற்றும் போர் திறனை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் மேம்படுத்தி வருவதாக அந்நிறுவனத்தின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பிரிவின் இயக்குனர் அருப் சாட்டர்ஜி தெரிவித்தார்.
தற்போது சோதிக்கப்பட்டுள்ள SAAW விமான எதிர்ப்பு ஆயுதம் மூலம் 100 கிலோ மீட்டருக்குள் இருக்கும் எதிரிகளின் ரேடார்கள், பதுங்கு குழிகள், டாக்ஸி தடங்கள், ஓடுபாதை உள்ளிட்டவற்றை தாக்கி அழிக்க முடியும் என கூறப்படுகிறது.
இந்தியன் ஹாக் எம்.கே .132 பயிற்சி விமானத்தில் இருந்து சுடப்பட்ட முதல் ஸ்மார்ட் ஆயுதம் இதுவாகும்.
பிரிட்டிஷாரின் வழித்தோன்றலான ஹாக் எம்.கே .132 விமானத்தை
விமானப்படை அதன் போர் விமானிகளுக்கு பயிற்சியளிப்பதற்காக 2008 ஆம் ஆண்டில் சேர்த்துக்கொண்டது. போர் விமான பயிற்சியில் ஹாக் விமானங்கள் முக்கிய பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது.