• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இதனை பார்த்தீர்களா பிரதமரே? விவசாயிகள் மீது கார் மோதும் வீடியோவை காட்டி கேள்வி எழுப்பிய பிரியங்கா...

இதனை பார்த்தீர்களா பிரதமரே? விவசாயிகள் மீது கார் மோதும் வீடியோவை காட்டி கேள்வி எழுப்பிய பிரியங்கா...

இதனை பார்த்தீர்களா பிரதமரே? விவசாயிகள் மீது கார் மோதும் வீடியோவை காட்டி கேள்வி எழுப்பிய பிரியங்கா...

இதனை பார்த்தீர்களா பிரதமரே? விவசாயிகள் மீது கார் மோதும் வீடியோவை காட்டி கேள்வி எழுப்பிய பிரியங்கா...

உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் மீது கார் மோதும் பதை பதைக்கும் வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பிரதமர் மோடிக்கு அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

  • Share this:
    உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது, விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் வருகையை கண்டித்து, கறுப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதில் கார் மோதி நான்கு விவசாயிகள் பலியாகினர் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து, நடந்த வன்முறையில் 2 பாஜக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து விவசாய அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பினர் கூறும்போது, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு பாதுகாப்புக்கு வந்த வாகங்களின் வரிசையில் மிஸ்ராவின் மகன் ஒரு காரை ஓட்டி வந்ததாகவும், அவரே விவசாயிகள் மீது காரை ஏற்றியதாகவும், நடந்த சம்பவத்துக்கு அமைச்சரின் மகனே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இதற்கிடையில் நடந்த சம்பவத்துக்கும் தனது மகனுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார்.
    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், இந்த வன்முறை சம்பவத்தின் போது எனது மகன் அங்கு இல்லை. எனது மகன் துணை முதல்வர் நிகழ்ச்சியில் இருந்தார். நானும் அந்த நிகழ்ச்சியில் தான் இருந்தேன், அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. அங்கிருந்த சில சமூக விரோதிகளே போராட்டக்காரர்களே கத்தி, கம்பு கொண்டு தாக்கியுள்ளனர். என் மகன் மட்டும் அங்கிருந்திருந்தால் நிச்சயமாக உயிருடன் திரும்பியிருக்க மாட்டார் என்று கூறியிருந்தார்.

    தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 8 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது அமைச்சருடன் வந்த கார்கள் மோதும் வீடியோவை காங்கிரஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் சாலையில் நிற்கும் விவசாயிகள் பின்புறம் வழியாக வேகமாக வரும் கார் அவர்கள் மீது மோதி செல்கிறது. தொடர்ச்சியாக இரண்டு கார்கள் அதேபோல செல்கின்றன. பார்ப்பவர்களைப் பதறச் செய்யும் வகையில் உள்ள இந்த வீடியோ சமூகவலைதளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

    இதைத்தொடர்ந்து, விவசாயிகள் மீது கார் மோதும் பதை பதைக்கும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, விபத்துக்கு காரணமாக ஓட்டுநர் ஏன் கைது செய்யப்படவில்லை என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

    தொடர்ந்து, மற்றொரு ட்விட்டர் பதிவில், தனது மொபைலில் விவசாயிகள் விபத்துக்குள்ளான வீடியோவை காட்டி, இந்த வீடியோவைப் பார்த்தீர்களா பிரதமரே.. உங்கள் அரசில் இடம்பெற்ற மத்திய அமைச்சரின் மகன் எவ்வாறு விவசாயிகளை வாகனத்தால் மோதுகிறார் எனப் பார்த்தீர்களா. இந்த வீடியோவை தயவுசெய்து பார்த்து, இந்த அமைச்சரை ஏன் இதுவரை நீக்கவில்லை, அவரின் மகன் ஏன் கைது செய்யப்படவில்லை என்பதை விளக்குங்கள்.

    இந்த தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தவர்கள் விவசாயிகள். அவர்களின் மகன்கள் இந்த தேசத்தின் எல்லையைக் காக்கும் பணியில் இருக்கிறார்கள். நீங்கள் என்னைப் போன்ற தலைவர்களை எந்தவிதமான முதல் தகவல் அறிக்கையின்றி கைது செய்துள்ளீர்கள். ஆனால், அந்த அமைச்சரின் மகனை ஏன் சுதந்திரமாக அலையவிட்டீர்கள்?

    லக்னோ வரும் பிரதமர் மோடி லக்கிம்பூருக்கு வரவேண்டும். தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த, தேசத்தின் ஆன்மாவான, நமக்கு அன்னத்தை வழங்கும் விவசாயிகள் வேதனையை, வலியைக் கேட்க வேண்டும். இது உங்கள் கடமை மோடிஜி. அரசியலமைப்புச் சட்டம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: