ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில்
காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகளின் மூன்று நாள் மாநாடு நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளித்து, கட்சியை பலப்படுத்தி வரப்போகும் தேர்தலில் வெற்றிக்கான யூகம் வகுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
மாநாட்டின் முதல் நாளில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உரையாற்றிய நிலையில், இறுதி நாளான இன்று கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி உரையாற்றினார். அவர் பேசுகையில், "நமது கட்சியில் உட்கட்சி உரையாடல் உள்ளது. இதன் காரணமாக கட்சி உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இதுபோன்ற சூழல் பாஜகவிலோ, ஆர்எஸ்எஸ் அமைப்பிலோ இல்லை. வெகுஜன மக்களுடனான தொடர்பை காங்கிரஸ் தொலைத்து விட்டது என்பதை நாம் ஏற்க வேண்டும்.
காங்கிரஸ் தான் நாட்டை வழி நடத்த முடியும் என்பதை மக்கள் அறிவார்கள். எனவே, நமக்கு குறுக்கு வழி ஏதும் இல்லை. நாம் மக்களுடன் மீண்டும் வேர்வை சிந்தி உழைத்து தொடர்பு கொள்ள வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோருடன் நாள் கணக்கில் அல்ல, மாதக்கணக்கில் நாம் உடன் பயணிக்க வேண்டும். எனவே, வரும் அக்டோபர் மாதத்தில் நாடு தழுவிய யாத்திரையை காங்கிரஸ் மேற்கொள்ள உள்ளது. நான் ஊழல் புரிந்தவன் அல்ல. யாருடைய பணத்தையும் திருடியவன் அல்ல. எனவே நான் பாஜகவை எதிர்க்க அஞ்ச மாட்டேன்.
பாஜகவை எதிர்க்கும் சக்தி காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது. மாநில கட்சிகளால் பாஜகவை, காங்கிரஸ் போல எதிர்க்க முடியாது. காரணம் காங்கிரஸ் இடம் தான் பாஜகவை எதிர்க்க வலுவான கொள்கை உள்ளது. இந்த போராட்டம் என்பது நாட்டின் எதிர்காலத்தை காப்பதற்காகும். ஒரு விஷயத்தில் நாம் பாஜகவை விட பின் இருக்கிறோம் என்றால் அது தகவல் தொடர்பு. மக்களிடம் அவர்களின் தொடர்பு சிறப்பாக உள்ளது. நாம் இந்த விஷயத்தில் நம்மை சீரமைக்க வேண்டும்.
நீதித்துறை, தேர்தல் ஆணையம், ஊடகம் உள்ள அனைத்தையும் அடக்கி ஒடுக்க பாஜக அரசு நினைக்கிறது. இளைஞர்களுக்கு வேலைகள் வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கி வரலாறு காணாத வேலையின்மையை பாஜக அரசு வழங்கியுள்ளது. பிரிவினை நாட்டிற்கு துன்பத்தை தரும். அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியை காங்கிரஸ் மட்டுமே தர முடியும் என்பதை நாம் மக்களிடம் சென்று எடுத்துச் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க:
பாலியல் வழக்கில் சிக்கிய அமைச்சரின் மகன் - கைது செய்ய விரைந்தது டெல்லி காவல்துறை
இன்று மாலையுடன் மாநாடு நிறைவடைய உள்ளது. மாநாட்டின் இறுதியில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.