குறைக்கப்படுகிறதா பி.எஃப் வட்டி விகிதம்? தொழிலாளர்கள் அதிருப்தி

குறைக்கப்படுகிறதா பி.எஃப் வட்டி விகிதம்? தொழிலாளர்கள் அதிருப்தி
மாதிரிப்படம்
  • Share this:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சாமானிய மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் என்றும், தற்போது உள்ள நிலையே தொடர வாய்ப்புகள் உள்ளதாகவும், இருவேறு விதமாக வெளியாகும் தகவல்கள், சாமானிய மக்களை குழப்பமடைய செய்துள்ளன.

ஊழியர்கள் சம்பளத்தில், ஒரு பகுதி, வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு ஆண்டு வட்டியாக தற்போது 8.65 சதவிதம் வழங்கப்படுகிறது. வங்கிகளில் சேமிக்கப்படும் FIXED DEPOSIT போன்றவற்றை விட அதிக வட்டி வழங்கப்படுவதும், வருமான வரி சலுகையும் இதன் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.


ஒவ்வொரு ஆண்டும், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் தீர்மானிக்கப்படும். இதன் படி, 2015-16ம் ஆண்டு 8.8 சதவிதமாக இருந்த வருங்கால வைப்பு நிதி வட்டி, 2016-17ல் 8.65 சதவிதமாக குறைக்கப்பட்டது. 2017-18-ல் 8.55 சதவிதமாக குறைக்கப்பட்டு, மீண்டும், 2018-19ல் 8.65 சதவிதமாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் 2019 -20ம் ஆண்டிற்கான வட்டி விகிதம் 8.5 சதவிதமாக குறைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின.

வருங்கால வைப்பு நிதியில் செலுத்தும் தொகை பல்வேறு இடங்களில் முதலீடு செய்யப்படுகிறது. நீண்ட கால அடிப்படையில் மேற்கொண்ட முதலீடுகள், அரசாங்க பத்திரங்கள் மீது எதிர்பார்த்த வருமானம் அரை சதவிதத்திற்கும் அதிகமாக குறைந்திருப்பதால், இந்த ஆண்டு வருங்கால வைப்பு நிதி மீதான வட்டியை .15 சதவிதம் குறைக்கப்படும் என தெரிகிறது.

வருங்கால வைப்பு நிதி தரப்பில் இருந்து, சுமார் 4,500 கோடி ரூபாய் அளவிற்கு கடன் சுமையில் சிக்கி தவிக்கும் DHFL, IL&FS போன்ற வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை திரும்ப பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.2019ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில், சுமார் 18,00,000 கோடி ரூபாயை வருங்கால வைப்பு நிதி ஆணையம் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்துள்ளது. இதில் 85 சதவிதம் கடன் பத்திரங்களிலும், 15 சதவிதம் நிறுவனங்களின் பங்குகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதியாக செலுத்தப்படும் தொகைக்கு அரசு உத்திரவாதம் தருவதால், வட்டி குறைப்பை மேற்கொள்ளும் போது, மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் தேவைப்படும். இருப்பினும், வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டியை, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கியில் வழங்கும் வட்டிக்கு நிகராக குறைக்க மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. வரும் 5-ம் தேதி வட்டி குறித்த முடிவுகளை மேற்கொள்ளும் கூட்டம் நடைபெற உள்ளது. 6 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ள வருங்கால வைப்பு நிதி வட்டியை குறைக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் மறுத்தாலும், தற்போதய நிலை சாதகமாக இல்லை என தெரிகிறது.

Also see:


 
First published: March 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading