கைதிகள் என்பவர்கள் பெரும்பாலும் சூழல் காரணமாக ஏதோ ஒரு தவறு செய்து அதற்கான தண்டனையை அணுபவித்து வருபவர்கள் . வாழ்க்கையில் எல்லோருமே தவறு செய்கிறோம். அதன் தாக்கம், விளைவு தான் சிறையில் இருக்கிறோமா வெளியில் இருக்கிறோமா என்று தீர்மானிக்கிறது.
சிறையில் இருந்தாலும், அதிலிருந்து விடுதலை ஆகி வந்தாலும், அவர்களும் மனிதர்கள் தான். ஒரு தவறால் அவர்கள் வாழவே தகுதி இல்லை என்று அவர்களை தள்ளி வைத்து விடக்கூடாது, அவர்கள் விடுதலை ஆனா பின்னர் நல்ல வேலை, தொழில் செய்து வாழ சிறைதுறையே பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. சிறை கைதிகளை வைத்து கைத்தொழில் பொருட்கள் செய்து விற்பது, சிறை கைதிகளால் இயக்கப்படும் உணவு விடுதி என்று பல முன்னெடுப்புகள் உள்ளன.இப்போது ஹரியானா அரசு ஒரு புதிய முயற்சியை செய்துள்ளது.
சிறை எரிபொருள் நிரப்பு நிலையங்கள்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ஹரியானா அரசு 11 சிறை எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்க உள்ளது. முன்னோட்டமாக, குருக்ஷேத்ரா சிறையில் பெட்ரொல் பங்க்-கள் மே 31 முதல் செயல்படத் தொடங்கியது. குருக்ஷேத்ராவுக்குப் பிறகு, அம்பாலா (இரண்டு எரிபொருள் நிலையங்கள்), யமுனாநகர், கர்னால், ஜஜ்ஜார், ஃபரிதாபாத், குர்கான், பிவானி, ஜிந்த் மற்றும் ஹிசார் ஆகிய சிறைகளில் இதேபோன்ற எரிபொருள் நிலையங்கள் இயக்கப்படும் என்று ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.
எந்த கைதிகளெல்லாம் இங்கு வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்?
சிறைத்தண்டனையின் பெரும் காலத்தை ஏற்கனவே சிறைகளில் கழித்த நல்ல நடத்தை கொண்ட தண்டனை கைதிகள் மட்டுமே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். விசாரணைக் கைதிகள் இங்கு பணிபுரிய அனுமதி இல்லை.
மாநில சிறைத்துறை அமைச்சர் ரஞ்சித் சிங் சவுதாலா கூறும்போது, “இந்த சிறை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கைதிகளுக்கு பயிற்சி அளிப்பதை ஜெயிலர் முதலில் உறுதி செய்வார். அதன்பிறகு அவர்களின் நடத்தைக்கு ஏற்ப சுழற்சி அடிப்படையில் அவர்களின் பணிநேரம் இருக்கும்” என்றார்.
இந்தியாவின் முதல் எஃகு கசடுகளால் ஆன சூரத் சாலை
உருவாக்கப்படக் காரணம் என்ன?
கைதிகள் வெளியே மனிதர்களோடு சகஜமாக வாழ, வேலை செய்ய இது உதவும். இந்த நிரப்பு நிலையங்களுக்கு மக்கள் வரும்போது, கைதிகளும் சாதாரண மக்களைப் போல வேலை செய்ய முடியும் என்பதை அவர்கள் உணர்வார்கள். அந்நியப்படுத்தாமல் இருக்க பழகுவார்கள். கைதிகளை சீர்திருத்தவும், மறுவாழ்வு அளிக்கவும் முடியும் என்ற செய்தி மக்களிடையே சேர வேண்டும்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணிபுரியும் கைதிகளுக்கு சிறை கையேட்டின்படி ஊதியம் வழங்கப்படும். இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து கிடைக்கும் லாபம் சிறை கைதிகளின் நலனுக்காக பயன்படுத்துவதற்காக சிறைச்சாலை நல தொழில்துறை நிதியில் டெபாசிட் செய்யப்படும்.
பைலட் திட்டம் எப்படி நடக்கிறது?
குருக்ஷேத்ரா சிறையில் புதிதாக திறக்கப்பட்ட எரிபொருள் நிலையம், அம்பாலா-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிப்லி-குருக்ஷேத்ரா சாலையில் அமைந்துள்ளது. குருக்ஷேத்ரா சிறை கண்காணிப்பாளர் சோம் நாத் ஜகத்தின் கூற்றுப்படி, தற்போது எரிபொருள் நிலையம் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்குகிறது.தினசரி கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான எரிபொருள் விற்பனையாகிறது.
இனி காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இதை இயக்க திட்டமிட்டுள்ளோம். அதே நேரத்தில் தினசரி விற்பனையை 8 லட்சமாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளோம். சிறைக் கைதிகள் இரவு 7:30 மணிக்குள் சிறைக்குள் இருக்க வேண்டும் என்று விதிகள் கூறுவதால், அதிகாலை நேரத்திலும் பின்னர் மாலை நேரத்திலும் எரிபொருள் நிரப்பு நிலையம் சிறை ஊழியர்களால் இயக்கப்படும் என்றார் .
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.