கலவர வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை எதிரொலியாக ஹரியானா சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ தகுதி நீக்கம்!

காங்கிரஸ்

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 8-ன்படி 2 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் தானாகவே தகுதி நீக்கம் ஆகிவிடுவார்கள்

  • Share this:
கலவரம், தாக்குதல் உள்ளிட்ட 3 குற்றப் பிரிவுகளின் கீழ் தண்டனை பெற்ற ஹரியானா காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரதீப் சவுத்ரி அம்மாநில சட்டப்பேரவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


ஹரியானா மாநிலம் கல்கா சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்து வருபவர் பிரதீப் சவுத்ரி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் மீது கலவரத்தில் ஈடுபட்டதாக ஹிமாச்சல பிரதேசத்தின் நலகர்க் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. கலவர வழக்கில் தொடர்புடைய பிரதீப் சவுத்ரி உள்ளிட்ட 14 பேர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு கடந்த ஜனவரி 14ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சிட்டிங் எம்.எல்.ஏவான பிரதீப் சவுத்ரி-க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


இதனையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரதீப் சவுத்ரியை ஹரியானா சட்டப்பேரவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக சபாநாயகர் கியான் சந்த் குப்தா தெரிவித்தார்.

காங்கிரஸ்


இது தொடர்பாக சபாநாயகர் கியான் சந்த் கூறுகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 8-ன்படி 2 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் தானாகவே தகுதி நீக்கம் ஆகிவிடுவார்கள் என்பதால், தண்டனை அறிவிக்கப்பட்ட ஜனவரி 14 முதல் சவுத்ரி தனது எம்.எல்.ஏ பதவியை இழந்துவிட்டார். அவரின் கல்கா தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

ஹரியானா சட்டப்பேரவையிலிருந்து எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. வேளாண் சட்டங்களை ஆதரித்த ஆளும் பாஜக முதல்வர் எம்.எல்.கட்டாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி முனைந்து வந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து INLD கட்சியின் ஒரே எம்.எல்.ஏவான அபய் சிங் சவுதாலா ராஜினாமா செய்தார்.

எம்.எல்.ஏவின் தகுதி நீக்கத்தையடுத்து 90 உறுப்பினர்களை கொண்ட் ஹரியானா பேரவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 30 ஆக குறைந்தது. ஆளும் பாஜக - JJP கூட்டணிக்கு 40 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஹரியானா லோகித் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ உள்ளார். 7 சுயேட்சை உறுப்பினர்களில் 5 பேர் பாஜகவை ஆதரிக்கின்றனர்.
Published by:Arun
First published: