’விவசாயிகளின் மகளாக நிற்பதில் பெருமை கொள்கிறேன்’ - ராஜினாமா செய்தார் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல்

ஹர்சிம்ரத் கவுர் பாதல் கடந்த பாஜக ஆட்சிக்காலத்திலும் மத்திய உணவுப் பதப்படுத்துதல் அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

’விவசாயிகளின் மகளாக நிற்பதில் பெருமை கொள்கிறேன்’ - ராஜினாமா செய்தார் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல்
ஹர்சிம்ரத் கவுர் பாதல்
  • News18 Tamil
  • Last Updated: September 18, 2020, 9:25 AM IST
  • Share this:
மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 14-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், விவசாயிகளின் உற்பத்தி வர்த்தக மசோதா, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய விவசாயிகள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த மூன்று மசோதாக்களை மத்திய அரசு மக்களவையில் அறிமுகம் செய்தது.

மசோதாக்களை தாக்கல் செய்து பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயப் பொருட்களின் தடையற்ற வர்த்தகத்துக்கு இந்த மசோதாக்கள் வழிவகுக்கும் என்றார். ஆனால், இந்த மசோதாக்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானது, விவசாயத்துறையையும், கொள்முதல் முறையையும் இது பாதிக்கும்எனவும், விவசாய விளை பொருள்களுக்கு நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை பாதிக்கப்படும் என கூறி காங்கிரஸ், பாஜக கூட்டணியில் இருக்கும் சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல்வேறு மாநில விவசாயிகளும் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா மாநிலத்தில் கடுமையான போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்து வருகிறார்கள்.

போராட்டங்களுக்கு இடையிலும், மூன்று மசோதாக்களில் அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்த சிரோமணி அகாலிதளம் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான சுக்பீந்தர் சிங் பாதல், எஞ்சியுள்ள மசோதாக்களையும் எங்களது கட்சி எதிர்க்கும். விவசாயிகளின் நலனுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராக உள்ளோம் என்றார்.இந்த நிலையில், எஞ்சியுள்ள இரண்டு மசோதாக்கள் தொடர்பான விவாதத்தின் மீது பேசிய சுக்பீர் சிங் பாதல், “இந்த சட்ட மசோதாக்கள் பண்ணைத் துறையை கட்டியெழுப்ப பஞ்சாப் அரசாங்கங்கள் மேற்கொண்ட 50 ஆண்டுகால கடின உழைப்பை அழிக்கும்” என்று தெரிவித்திருந்தார்

இந்த நிலையில், விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விவசாயிகளின் மகளாக, அவர்களது சகோதரியாக அவர்களுடன் துணை நிற்பதில் தான் பெருமை கொள்வதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

ஹர்சிம்ரத் கவுர் பாதல் கடந்த பாஜக ஆட்சிக்காலத்திலும் மத்திய உணவுப் பதப்படுத்துதல் அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading