பஞ்சாப் ஆம் ஆத்மி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அவருடைய மாளிகையில் சனிக்கிழமை சந்தித்து ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினார் பகவந்த் மான்.
தொடர்ந்து, பதவியேற்பு விழாவானது பகத் சிங்கின் கிராமமான கட்கட் களானில் நேற்று நடைபெற்றது. அவருடன் 16 எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்விற்காக 100 ஏக்கர் பரப்பளவில் விழா அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.
Also Read : பாஜகவுக்கு ஆதரவாக ஃபேஸ்புக் வெறுப்பை விதைத்து லாபமடைகிறது - சோனியா காந்தி காட்டம்
பதவியேற்பு விழாவில், ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு தலைவர்களும் பங்கேற்றனர்.
தொடர்ந்து, பஞ்சாப்பில் பெற்ற வெற்றியின் காரணமாக ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கிடைத்துள்ளது. பஞ்சாப் சார்பில் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள ஐந்து பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவுக்கு வரவுள்ளது.
இதனால் இந்த ஐந்து இடங்களுக்கும் பெரும்பான்மை தொகுதிகளை கொண்டுள்ள ஆம் ஆத்மிக்கே கிடைக்கும் நிலை உள்ளது. அதன்படி, ஐந்து எம்.பிக்களில் ஒருவராக ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்படுவார் என்று ஆம் ஆத்மி வட்டாரங்கள் கூறுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
ஏற்கெனவே ஹர்பஜன் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் உள்ளார். இப்போது கூடுதலாக அரசியல் பதவியும் கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.