‘முதல்வராக வேண்டும் என்றால் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸுக்கு வர வேண்டும்!’ - ராகுல் காந்தி

‘முதல்வராக வேண்டும் என்றால் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸுக்கு வர வேண்டும்!’ - ராகுல் காந்தி

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்காத அதிருப்தியில் ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேசத்தில் கமல்நாத் முதல்வராக இருந்த போது தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார். இதன் காரணமாக கமல்நாத்தின் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தது.

  • Share this:
காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு சென்ற இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா ஒரு போதும் முதல்வராக முடியாது என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருக்கிறார்.

மத்திய பிரதேசத்தில் தவிர்க்க முடியாத காங்கிரஸ் ஆளுமையாக இருந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. இவர் முன்னாள் மத்திய அமைச்சரும், குவாலியர் அரச வம்சாவளியின் வழிவந்தவருமான மாதவராவ் சிந்தியாவின் மகன் ஆவார். காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்காத அதிருப்தியில் மத்திய பிரதேசத்தில் கமல்நாத் முதல்வராக இருந்த போது தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார். இதன் காரணமாக கமல்நாத்தின் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தது.

இந்நிலையில், இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு இளைஞர் காங்கிரஸார் முன்னிலையில் பேசிய ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவை விமர்சித்து பேசியுள்ளார்.

“சிந்தியாவிடம் 100% நீங்கள் ஒரு நாள் முதல்வராக வருவீர்கள் என்று சொன்னேன். ஆனாலும் அவர் வேறு பாதையை (பாஜக) தேர்ந்தெடுத்தார். இன்று பாஜகவில் கடைநிலையில் உள்ளார். அங்கு அவரால் ஒருபோதும் முதல்வராக முடியாது. முதல்வராக வேண்டும் என்றால் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸுக்கு வர வேண்டும்,தற்போது மீண்டும் அவர் காங்கிரஸுக்கு வந்தால் கூட அவரால் முதல்வராக முடியாது” என ராகுல் காந்தி சிந்தியா தொடர்பாக பேசியுள்ளார்.

மேலும், கட்சி உங்களின் பங்களிப்பை உற்று நோக்கி வருகிறது. இளம் தலைவர்கள் பொறுமை காத்து கட்டுப்பாட்டுடன் காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் - பாஜகவை எதிர்த்து போராட வேண்டும் என்று ராகுல் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இருப்பினும் ராகுல் காந்தி இது போன்று பேசவில்லை என்று இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீநிவாஸ் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
Published by:Arun
First published: