திருமண ஏக்கத்தை ஒரு ட்ரெண்டாக உருவாக்கி வைத்துள்ள தற்போதைய 90ஸ் கிட்ஸ் காலத்தில் அதே 90ஸ்சில் பிறந்த பெண் ஒருவர் தன்னைத் தானே மணம் முடித்து புது ட்ரென்ட் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
Sologamy என்றால் தன்னைத் தானே மணம் முடித்துக் கொள்வது. இந்த புதுவித திருமணத்தை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது ஷமா பிந்து என்ற பெண் மேற்கொண்டுள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஷமா பிந்துவுக்கு வயது 24. இவருக்கு திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லையாம். வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வாழ விரும்பாத இவருக்கு மணப் பெண்ணாக இருக்க வேண்டும் என ஆசை உள்ளது.
எனவே இவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து அதற்கு தேதியும் குறித்துள்ளார். இவரது திருமணம் ஜூன் 11ஆம் தேதி நடக்கவுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு திருமண வாழ்வில் விருப்பம் இல்லை. இருந்தாலும் மணப்பெண் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. எனவே, என்னை நானே திருமணம் செய்ய முடிவு செய்து விட்டேன். இது குறித்து ஆன்லைனில் தேடிப் பார்த்தேன். இது போன்று யாரும் இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே, நாட்டிலேயே சுய காதலுக்கு (Self Love) நான் தான் எடுத்துக் காட்டாக இருப்பேன் என நினைக்கிறேன். சுய திருமணம் என்பது தன்னை தானே நிபந்தனை இன்றி விரும்பவதாகும். விரும்பும் நபரை தான் ஒருவர் மனம் முடிப்பார்கள். என்னை நான் விரும்புகிறேன். எனவே என்னை நானே திருமணம் செய்து கொள்கிறேன் என்றார்.
இதையும் படிங்க:
சீரடி சாய் பாபா பக்தர்களுக்கு பிரத்தியேக திருமண தகவல் இணையதளம் - அறக்கடளை புதிய ஏற்பாடு
தனது முடிவுக்கு பெற்றோர் முழு சம்மதம் வழங்கியதாகவும், திருமணம் முடிந்த கையோடு இரண்டு வாரம் ஹனிமூன் ட்ரிப்பாக கோவா செல்லப்போவதாகவும் பிந்து தெரிவித்துள்ளார். தாலி கட்டுதல், நெற்றியில் திலகமிடுதல் உள்ளிட்ட அனைத்து சடங்களையும் தனக்கு தானே இந்த மணப்பெண் பிந்து செய்து கொள்ளப்போகிறாராம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.