‘மண் காப்போம்’ இயக்கத்துடன் இணைந்து குஜராத் மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் பட்டேல் மற்றும் சத்குரு ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் (மே 30) கையெழுத்திடப்பட்டது.
இதன்மூலம், சர்வதேச சுற்றுச்சூழல் இயக்கமான ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் கரம்கோர்த்த முதல் இந்திய மாநிலம் என்ற பெருமையை குஜராத் பெற்றது. அஹமதாபாத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறை அமைச்சர்களும், குஜராத் அரசின் பருவநிலை மாற்றத் துறையின் அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.
விழாவில் குஜராத் முதல்வர் பேசுகையில், “இந்த பூமியில் நாம் வாழ்வதற்கு முக்கியமான காரணமான மண்ணையும், மற்ற அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதில் குஜராத் மாநிலம் முன்னணியில் இருக்கும்" என்று உறுதியளித்தார்.
சத்குரு பேசுகையில், “மண் காப்போம் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் இந்திய மாநிலமாக குஜராத் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக, மண் காப்போம் இயக்கம் எளிய வழிமுறைகளுடன் தயாரித்துள்ள கையேட்டின் அடிப்படையில், மாநில அரசு விரிவான கொள்கைகளை விரிவாக்கலாம்” என்றார்.
இதையும் படிங்க: காரைக்காலை தமிழகத்தோடு இணைக்க கோரிக்கை... பரபரப்பு போஸ்டர் : தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
முன்னதாக, சத்குரு வர்த்தக சபை மற்றும் தொழில்துறை தலைவர்களை சந்தித்து பேசினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "விவசாயிகளுக்கு கார்பன் கிரெடிட் (மரங்கள் வளர்க்கும் விவசாயிகளுக்கு தொழில்துறையினர் வழங்கும் ஒரு வகை ஊக்கத்தொகை) கிடைப்பதற்கான வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும். இதை தொழில்துறையினர் தங்களது பொறுப்பாக கருத வேண்டும். நாங்கள் தென்னிந்தியாவில் 1.3 லட்சம் விவசாயிகளுடன் பணி செய்துள்ளோம். அவர்களுக்கு கார்பன் கிரெடிட்டை பெற்று தருவதற்காக கடந்த 7 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறோம். ஆனால், அது இன்னும் சாத்தியம் ஆகாமல் உள்ளது. கார்பன் வெளியீட்டை கட்டுப்படுத்துவதில் பெரிதும் பங்காற்றும் விவசாயிகளுக்கு அதற்கான பலன் கிடைக்க வேண்டும்” என்றார்.
விவசாய நிலங்களில் குறைந்தப்பட்சம் 3 முதல் 6 சதவீதம் கரிமச் சத்து இருப்பதை உறுதி செய்வதற்கு தேவையான சட்டங்களையும் கொள்கைகளையும் அரசாங்கங்கள் உருவாக்க வேண்டும் என்பதே ‘மண் காப்போம்’ இயக்கத்தின் பிரதான நோக்கமாகும். இந்தியாவில் உள்ள மண்ணில் கரிமச் சத்தின் அளவு சராசரியாக 0.5 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதேநிலை நீடித்தால், அடுத்த 45 முதல் 60 ஆண்டுகள் மட்டுமே நம்மால் இந்த மண்ணில் விவசாயம் செய்ய முடியும் என ஐ.நா அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மேலும் படிக்க: தாய் ஹீராபென் படத்துடன் நின்ற இளம்பெண்: ஆர்வமாக காரிலிருந்து இறங்கி பெற்றுக்கொண்ட மோடி
எனவே, உலகளவில் நிகழ்ந்து வரும் மண் அழிவை தடுத்து, இழந்த மண் வளத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தில் மண் காப்போம் இயக்கத்தை சத்குரு தொடங்கியுள்ளார். இதற்காக, மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து 100 நாள் பைக் பயணத்தை தொடங்கிய அவர் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள 26 நாடுகளுக்கு பயணித்து மே 29-ம் தேதி இந்தியா வந்துள்ளார்.
உலகளவில் பெரும் வரவேற்பை பெற்ற அவரின் பயணத்தின் வெற்றியாக இதுவரை 74 நாடுகள் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அத்துடன், ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பு (UNCCD), ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பு (UNEP), உலக உணவு அமைப்பு (UN WFP), இயற்கை பாதுகாப்பிற்கான சுற்றுச்சூழல் அமைப்பு (IUCN) ஆகிய அமைப்புகள் இவ்வியக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.