ஹோம் /நியூஸ் /இந்தியா /

குஜராத்தில் புதிய சாதனை படைத்த பாஜக.. பாதாளம் சென்ற காங்கிரஸ்.. சறுக்கியது எங்கே?

குஜராத்தில் புதிய சாதனை படைத்த பாஜக.. பாதாளம் சென்ற காங்கிரஸ்.. சறுக்கியது எங்கே?

குஜராத் தேர்தல்

குஜராத் தேர்தல்

Gujarat Election Results 2022: 2017 தேர்தலில் கூட 75 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று பாஜவிற்கு காங்கிரஸ் நெருக்கடியைக் கொடுத்தது. ஆனால் இந்த முறை அதுவும் கூட நடக்காது போலிருக்கிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்த தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்தால் குஜராத்தை காங்கிரஸ் கட்சி மறந்தே போய்விட வேண்டும். அதே நேரம், குஜராத்தின் அசைக்க முடியாத சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளதையே காட்டுகிறது இந்த தேர்தல் முடிவுகள். இன்று எண்ணப்பட்ட வரும் குஜராத் தேர்தல் வாக்குகள் கிட்டத்தட்ட காங்கிரஸின் படுதோல்வியை உறுதியாக்குகின்றனர். தற்போது வரை பாஜக 150க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் வெறும் 17 இடங்களில்தான் லீட் செய்துள்ளது.

குஜராத்தின் முதலமைச்சராக இருந்த மோடி கடந்த 2014தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது கட்சிக்குள்ளேயே பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முனுமுனுத்தனர். ஆனாலும் கட்சி மேலிடம் பிரதமர் வேட்பாளர் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. அப்போதைய தேர்தலில் குஜராத் முன்வைத்த முக்கியமான பிரச்சாரம் இந்தியா முழுவதிலும் குஜராத் மாடல் ஆட்சி என்பது தான்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் 2014 தேர்தலில் பாஜக சாதித்து காட்டியது என்பதை விட அமித்ஷாவும், மோடியும் சாதித்து காட்டினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதே போன்றதொரு வெற்றியை தற்போது மீண்டும் சாதித்து காட்டியிருக்கிறது மோடி-ஷா கூட்டணி. ஆம் ஏழாவது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்க தயராகிவிட்டது பாஜக.

இதையும் படிங்க: ”இந்தியாவிலேயே இருங்கள்..வெளிநாடுகளுக்கு செல்லாதீர்கள்”..! மாணவர்களுக்கு Zerodha இணை நிறுவனர் அட்வைஸ்..!

குஜராத்தில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே ஆம் ஆத்மி கட்சி வரிந்து கட்டி இறங்கியது. முன்னதாக நடைபெற்று முடிந்திருந்த பஞ்சாப் தேர்தலில் பெற்ற வெற்றி ஆம் ஆத்மி கட்சிக்கு கூடுதல் தெம்பை கொடுத்திருந்தது. ஆனால் ஆம் ஆத்மியால் குஜராத்தில் கோலோச்ச முடியவில்லை. இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்லில் எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என திடமாக நம்பியிருந்தார் கெஜ்ரிவால். ஆனால் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் கெஜ்ரிவாலின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் தவிடு பொடியாக்கி வருகிறது.

அடுத்ததாக காங்கிரஸ் கட்சி. ஒரு காலத்தில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சி செய்த தேசிய கட்சி காங்கிரஸ். உலக அரங்கில் இந்தியாவின் தேசிய அரசியல் கட்சி என்றால் அது காங்கிரசும் கம்யூனிஸ்ட்டுகளும் தான். ஆனால் இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய் குஜராத்தில் காணாமல் போயுள்ளது காங்கிரஸ். நிலையான, திறமையான தலைமையில்லாமல் குஜராத்தில் காங்கிரஸ் தள்ளாடுகிறது என்கிற ஒற்றை குற்றச்சாட்டை அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரகு சர்மா மீது வீசுகிறார்கள். ஆனால் என்னதான் திறமை, வியூக யுக்தி இருந்தாலும், அதையெல்லாம் முறியடிக்கும் சக்தியை பாஜக பெற்றுவிட்டது என்பதை காங்கரஸ் ஏற்க தயாராக இல்லை. அதனால் தான் இவ்வளவு பெரிய சறுக்கல்.

களத்தில் தன் பலம் என்னவென்று அறிந்து கொள்ளும் முன்னர் தன் எதிரியின் பலம் என்னவென்று சரியாக கணிக்க வேண்டும் என்கிற அடிப்படை ஃபார்முலாவைக் கூட காங்கிரஸ் தெரிந்திருக்கவில்லை. ஹர்திக் படேல் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்களை தக்கவைத்துக் கொள்ள முடியாதது ஒரு புறம் என்றால், குறைந்த பட்சம் அவர்கள் எதிர்முகாமிற்கு செல்ல முடியாத அளவிற்காவது அரசியல் செய்திருக்க வேண்டும். அதையும் செய்யத் தவறிவிட்டது காங்கிரஸ்.

2017 தேர்தலில் கூட 75 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று பாஜவிற்கு காங்கிரஸ் நெருக்கடியைக் கொடுத்தது. ஆனால் இந்த முறை அதுவும் கூட நடக்காது போலிருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக 120 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டிருந்தது. அது நடந்தேறிவிடும் போல் இருக்கிறது. 182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 91 தொகுதிகள் போதும். ஆனால் பாஜக 100 முதல் 105 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவே தோன்றுகிறது.

வட இந்திய ஊடகங்கள் குறிப்படுவதைப் போல், தற்போது வனவாசத்தில் இருக்கும் காங்கிரசை அஞ்ஞாதவாசத்திற்கு அனுப்ப போகிறது பாஜக. ஆனாலும் கவுண்ட டவுன் கடிகாரத்தை தனது பிராந்திய அலுவலக வாசலில் வைத்திருக்கிறது குஜராத் மாநில காங்கிரஸ். யாருக்கான கவுண்ட்டவுன் என்பது கிட்டத்தட்ட தெரிந்துவிட்ட நிலையில் இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரப்பூர்வமாக தெரிந்து விடும்

செய்தியாளர்: ரொசாரியோ ராய்

First published:

Tags: Assembly Election 2022, BJP, Gujarat Assembly Election