ஹோம் /நியூஸ் /இந்தியா /

குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து.. உச்சநீதிமன்றம் விசாரணை..!

குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து.. உச்சநீதிமன்றம் விசாரணை..!

குஜராத் பாலம் விபத்து

குஜராத் பாலம் விபத்து

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த கோரி பொதுநல மனு தாக்கல்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Delhi

  குஜராத்தில் 140 ஆண்டு பழமையான ஆற்று பாலம் அறுந்து விழுந்த விபத்தை உச்சநீதிமன்றம் வரும் 14ஆம் தேதி விசாரிக்கவுள்ளது.

  குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மோர்பி நகரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மச்சு நதியின் குறுக்கே 1879ம் ஆண்டு 230 மீட்டர் நீளத்தில் தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. சுற்றுலாத்தலமாக கருதப்படும் இந்த பாலம் புனரமைப்பு பணிக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன் மூடப்பட்ட நிலையில், பணிகள் முடிந்து கடந்த 26ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.

  நேற்று விடுமுறை தினம் என்பதால், ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மோர்பி நகருக்கு வந்தனர். பாலத்தில் ஒரே நேரத்தில் 150 பேர் மட்டுமே நிற்க முடியும் என கூறப்படும் நிலையில், 500க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதனால் பாரம் தாங்க முடியாமல் கேபிள் அறுந்து விழுந்தாக கூறப்பட்டது. இதனால் ஏராளமானோர் ஆற்றில் மூழ்கி தத்தளித்தனர். நீச்சல் தெரிந்த சிலர், தண்ணீரில் நீந்தியபடி கரை சேர்ந்தனர். குழந்தைகள், பெரியவர்கள் என பலர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்த நிலையில், மீட்பு படை வீரர்கள் படகுகளில் சென்று மீட்டனர். எனினும் தற்போது வரை 100க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

  இதையும் படிங்க | சென்னை ஓடிஏ பயிற்சி நிறைவு : 36 வெளிநாட்டு வீரர்களோடு 186 ராணுவ அதிகாரிகள் நாட்டுப்பணியில் சேர்ந்தனர்!

  காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்த முதலமைச்சர் பூபேந்திர படேல், மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சாங்வி ஆகியோர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

  இந்த நிலையில், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த கோரியும், நாடு முழுவதும் உள்ள பழமை வாய்ந்த பொது கட்டமைப்புகளில் பாதுகாப்பு தணிக்கை நடத்தவும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

  இந்த மனு மீதான விசாரணை வரும் 14ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது. விசாரணைக்கு பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Accident, Gujarat, River bridge construction