Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /இந்தியா /

மும்முனைப் போட்டி.. குஜராத்தில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு!

மும்முனைப் போட்டி.. குஜராத்தில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Gujarat Assembly Election 2022 : 89 தொகுதிகளுக்கு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மும்முனைப் போட்டி நிலவும் குஜராத்தில், சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 89 தொகுதிகளுக்கு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது.

பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 89 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. தெற்கு குஜராத், கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளில் உள்ள 19 மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஆகியோர் சூறாவளி பிரசாரம் செய்தனர்.

இதையும் படிங்க: நியூசிலாந்தில் விளையாடிய மழை.. தொடரை இழந்த இந்தியா

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டனர்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா ஆகியோர் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளிலும் செவ்வாய் கிழமை மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 89 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. புதிய வரவான ஆம் ஆத்மி 88 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 57 தொகுதிகளிலும் பாரதிய பழங்குடியினர் கட்சி 14 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சமாஜ்வாடி கட்சி 12 தொகுதிகளிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 4 தொகுதிகளிலும் களம் காண்கின்றன.

339 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தமாக 788 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 70 பேர் பெண்கள். பாஜக 9 பெண் வேட்பாளர்களையும், காங்கிரஸ் 6 பெண் வேட்பாளர்களையும், ஆம் ஆத்மி 5 பெண்களையும் நிறுத்தி உள்ளன.

ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் இசுதான் கட்வி, கம்பாலியா தொகுதியிலும், முன்னாள் அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான பர்சோத்தம் சோலங்கி பாவ்நகர் புறநகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

மோர்பி பால விபத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டு பிரபலமடைந்த பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. காந்திலால் அம்ருதியா, மோர்பி தொகுதியிலும், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா, ஜாம்நகர் வடக்கு தொகுதியிலும் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

89 தொகுதிகளைச் சேர்ந்த 2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 760 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தலுக்காக 25 ஆயிரத்து 434 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 34 ஆயிரத்து 324 வாக்குப்பதிவு எந்திரங்கள், அதே எண்ணிக்கையிலான கட்டுப்பாட்டு கருவிகள், 38 ஆயிரத்து 749 வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன

மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன பாதுகாப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் ஈடுபட்டுள்ளனர்.

பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்புகளும் போடப்பட்டுள்ளன. குஜராத்தில் 2-ம் கட்ட தேர்தல் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. 8-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

First published:

Tags: Assembly Election 2022, Gujarat, Gujarath