பிரதமர் நரேந்திர
மோடியை விமர்சித்து ட்வீட் செய்த குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியை அசாம் போலீசார் கைது செய்துள்ளனர்.
பாஜக நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நேற்றிரவு 11.30 மணியளவில் மேவானியை அவரது பாலன்பூர் சர்க்யூட் ஹவுசில் வைத்து அசாம் போலீசார் கைது செய்து அகமதாபாத்திற்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து அவர் இன்று காலை அசாம் கொண்டு செல்லப்பட்டார்.
அவர் மீது அசாம் மாநிலம் கோக்ரஜாரை சேர்ந்த பாஜக தலைவர் அருப் குமார் தேவ் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக கோக்ரஜார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துபே பிரதீக் விஜய் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘குஜராத் மாநிலம் வடகம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியை நேற்றிரவு அசாம் போலீசார் பாலன்பூர் சர்க்யூட் ஹவுசில் கைது செய்தனர்’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க - மின் இணைப்பை துண்டித்த இன்ஜினியர் மீது சரமாரி தாக்குதல்... தெலங்கானாவில் பரபரப்பு
ஜிக்னேஷ் மேவானி மீது முதல் தகவல் அறிக்கையை அசாம் போலீசார் பதிவு செய்துள்ளனர். குற்றச் சதி, இரு சமூக மக்களிடையே பிரச்னையை தூண்டும் வகையில் செயல்பட்டது, உள்நோக்கத்துடன் அமைதியை சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்டது மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகளின் கீழ் மேவானி மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
கைது நடவடிக்கை குறித்து மேவானியின் உதவியாளர் சுரேஷ் ஜாட் கூறுகையில், ‘சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி குறித்து ட்விட்டரில் மேவானி கருத்து கூறியிருந்தார். அதன் அடிப்படையில் அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான ஆவணங்களை எங்களிடம் போலீசார் அளித்துள்ளனர். மேவானியின் ட்வீட்டை ட்விட்டர் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும் அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விமானம் வழியாக அவர் அசாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க - நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரிப்பு... 4-வது அலை ஏற்படுமா? மூத்த விஞ்ஞானி விளக்கம்
மேவானி கைது செய்யப்பட்டார் என்ற தகவலை அறிந்ததும், குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் தாகூர் மற்றும் நிர்வாகிகள் அகமதாபாத் விமான நிலையத்திற்கு விரைந்தனர். அங்கு பாஜக அரசுக்கு எதிராகவும், மேவானியின் கைதுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அப்போது, போலீசார் தங்களிடம் மேவானியின் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை காண்பிக்கவில்லை என்று காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.