முகப்பு /செய்தி /இந்தியா / குடிநீர் உடலுக்கு கேடா...? RO சுத்திகரிப்பான்களுக்கு தடை விதிக்க வரைவு அறிக்கை வெளியீடு

குடிநீர் உடலுக்கு கேடா...? RO சுத்திகரிப்பான்களுக்கு தடை விதிக்க வரைவு அறிக்கை வெளியீடு

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஆர். ஓ முறையில் சுத்திகரிக்கும் குடிநீர் உடலுக்கு கேடு என்பதால், ஆர்.ஓ. சுத்திகரிப்பான்களுக்கு தடை விதிப்பதற்கான வரைவு அறிவிக்கையை பொதுமக்களின் கருத்திற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

வீட்டில் இருந்தாலும், வெளியில் சென்றாலும் நாம் விலைக்கு வாங்கிக் குடிக்கும் தண்ணீர் மூலம் பலவகையான நோய்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறோம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என பாட்டில்கள், கேன்களில் அடைத்து விற்கப்படும் குடிநீர் சிறிது சிறிதாக மனித உயிர்களைக் குடிக்கிறது என கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் எனப்படும் தலைகீழ் சவ்வூடு பரவல் முறையில் சுத்திகரிக்கும்போது, தண்ணீரில் இயல்பாக இருக்கும் நுண்கனிமச் சத்துகள் அனைத்தும் எடுக்கப்பட்டுவிடுகிறது. நுண்கனிமச் சத்துகள் இல்லாத நீரை குடிக்கும்போது உடல் நலத்திற்கு கேடு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதனால், ஆர்.ஓ. சுத்திகரிப்பான்களுக்கு தடை கோரிய வழக்கில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில் ஆர்.ஓ.சுத்திகரிப்பான்களுக்கு தடை விதிக்கும் அறிவிக்கையை மத்திய சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ளது.

தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின்படி, ஆர்.ஓ. சுத்திகரிப்பான் மூலம் கிடைக்கும் நீரை பருகுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எந்த அளவிற்கு TDS உடைய நீர் பருக ஏற்றது என்பதை பொதுமக்களுக்கு நிறுவனங்கள் கூற வேண்டும் என்பதை அறிவிக்கையில் மத்திய அரசு சேர்த்துள்ளது. இது வரவேற்க வேண்டிய அம்சம் எனவும் நிறுவனங்கள் இதனை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்கிறார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.

மேலும் ஆ.ஓ. சுத்திகரிப்பான்களை வீடுகள், தொழிற்சாலைகள், மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்துவோருக்கும், சுத்திகரிப்பான் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் அவர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகளையும் சேர்த்து மத்திய அரசு இந்த வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆர்.ஓ. சுத்திகரிப்பானில் பயன்படுத்தப்படும் பொருட்களின் போலிகளுக்கு தடை விதிப்பதும் இதற்கு தீர்வாக அமையும் அதே நேரத்தில் அரசும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை விநியோகிக்க வேண்டும் என்றும் பல தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

First published:

Tags: Drinking water