வருகிறது பெரும் கண்காணிப்பு: தேசவிரோதக் கருத்துகளை, செயல்களை கண்காணிக்க ‘சைபர் தன்னார்வலர்கள்’- உள்துறை அமைச்சகம் முடிவு

மாதிரி படம்

புதியத்திட்டத்தின் கீழ் சைபர் தன்னார்வலர்களாக குடிமக்களையே மாற்றும் ஒரு திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் பிரிவு உருவாக்கியுள்ளது.

 • Share this:
  குழந்தை ஆபாசப் படம், பாலியல் பலாத்காரம், பயங்கரவாதம், தீவிரவாதம், மற்றும் தேசவிரோத நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட எழுத்துக்களை, கருத்துகளை பொருளடக்கங்களை கண்டுப்பிடிக்கவும் சட்ட விரோத, சட்டத்தை மீறும் பிரச்சாரங்கள், செய்திகள், உள்ளடக்கங்கள், கருத்துக்கள் கொண்ட நடவடிக்கைகளைக் கண்டுப்பிடிக்க புதியத்திட்டத்தின் கீழ் சைபர் தன்னார்வலர்களாக குடிமக்களையே மாற்றும் ஒரு திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் பிரிவு உருவாக்கியுள்ளது.

  இது தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கையில் இந்த திட்டம் சோதனை அடிப்படையில் முதலில் ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் அரங்கேற்றப்படவுள்ளது. இதில் கிடைக்கும் பலன்கள் பின்னூட்டங்கள் அடிப்படையில் இதன் அளவு பிற மாநிலங்களுக்கும் விரிவாக்கம் பெறும்.

  ஆனால் இதன் மூலம் சைபர் தன்னார்வலர்களுக்கு மட்டற்ற அதிகாரம் வழங்கப்பட்டு எந்த ஒரு எழுத்தையும் வெளியீட்டையும் அவர்கள் நினைத்தால் தேச விரோத கருத்துகள் என்று குறியிட முடியும். எந்த வித பொறுப்பும் இன்றியும் ஒரு நபரை தேசதுரோகி என்று முத்திரை குத்த முடியும் என்ற நிலை ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் இது குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர்.

  இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் ஒரு இணைப்புப் புள்ளியாகச் செயல்படும். பொதுமக்களில் ஆர்வமுள்ளவர்கள் இதில் பதிவு செய்து சைபர் கண்காணிப்பு தன்னார்வலர்களாகலாம்.

  இந்த கண்காணிப்பு வேலையில் சேர விரும்புபவர்கள் தங்கள் சொந்த விவரங்களை அனுப்ப வேண்டும். பெயர், தந்தையின் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை அளிக்க வேண்டும்.

  ஆனால் எவை தேசவிரோத கருத்துக்கள், செயல்கள் என்பதை அரசு இன்னமும் தெளிவாக தெரிவிக்கவில்லை. இப்போதைக்கு சட்டவிரோத நடவடிக்கை என்ற பெயரில்தான் கைதுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

  இப்படி தாமாகவே சைபர் கண்காணிப்பு தன்னார்வலர்களாகச் சேருபவர்கள் வணிக நலன்களுக்காக அதனை பயன்படுத்தக் கூடாது என்றும் தாங்கள் இதில் இருப்பதாக பொதுவெளியில் அறிக்கை எதையும் விடக்கூடாது, தெரியப்படுத்தக் கூடாது என்றும் உள்துறை அமைச்சக இணையதளம் கூறுகிறது.

  சைபர் தன்னார்வலர்களுக்கு இடப்படும் பணிகள், அல்லது அவர்கள் செய்யும் பணிகள் குறித்து ரகசியத்தை கண்டிப்பாகக் கடைப்பிடிப்பது அவசியம். நிபந்தனைகள் மீறப்பட்டால் தன்னார்வலர்கள் மீதே நடவடிக்கை பாயும்.

  மக்களை மக்களின் ஒரு பகுதியினரே கண்காணிக்கும் இந்தத் திட்டம் அபாயகரமானது என்று சமூக ஆர்வலர்களும் சட்ட நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
  Published by:Muthukumar
  First published: